Published : 01 Jul 2024 03:28 PM
Last Updated : 01 Jul 2024 03:28 PM

பாரிஸ் ஒலிம்பிக்: இந்திய ஹாக்கி அணித் தேர்வு எப்படி? - ஓர் அலசல்

ஜூலை மாதம் 26-ம் தேதி பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில், ஆர்வத்தைத் தூண்டும் இந்திய ஹாக்கி அணித் தேர்வு இந்த முறை தேறுமா அல்லது கடந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் வென்ற வெண்கலப் பதக்கத்தையும் கடந்து செல்லுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். அதற்கு முன்னால் டீம் செலக்‌ஷன் குறித்து பார்ப்போம். இந்திய ஆடவர் ஹாக்கி அணி வருமாறு:

  • கோல் கீப்பர்: ஸ்ரீஜேஷ் பராத்து ரவீந்திரன்
  • தடுப்பு வீரர்கள்: ஜார்மன்பிரீத் சிங், அமித் ரோஹிதாஸ், ஹர்மன்பிரீத் சிங் (கேப்டன்), சுமித், சஞ்சய்
  • நடுக்கள வீரர்கள்: ராஜ்குமார் பால், ஷாம்சர் சிங், மன்ப்ரீத் சிங், ஹர்திக் சிங், விவேக் சாகர் பிரசாத்
  • முன்கள வீரர்கள்: அபிஷேக், சுக்ஜீத் சிங், லலித் குமார் உபாத்யாய், மந்தீப் சிங், குர்ஜந்த் சிங்.
  • மாற்று வீரர்கள்: நீலகண்ட சர்மா, ஜுக்ராஜ் சிங், கிருஷண் பகதூர் பதக்.

புதிய வீரர்களுக்கு வாய்ப்பளிப்பதை விட அனுபவ வீரர்களுக்கும் இதுவரை ஆடி நிரூபித்த வீரர்களுக்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஒரு விதத்தில் கன்சர்வேட்டிவ் ஆக தலைமைப் பயிற்சியாளர் ஃபுல்டன் தேர்வு செய்துள்ளார்.

தேர்வுத் தவறு எங்கே? - இந்திய ஹாக்கி அணியில் ஒரு பத்தாண்டுகளாக ஆடி வரும் லலித் உபாய்த்யா, மந்தீப் சிங்கின் செலக்‌ஷன் சிக்கல் என்கின்றனர் நிபுணர்கள். டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற அணியில் இவர்கள் இருவரும் முக்கிய அங்கத்தினர். ஆனால் சமீப காலங்களில் முன்களத்தில் இவர்களால் சோபிக்க முடியவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன.

சமீபமாக பெல்ஜியம் மற்றும் இங்கிலாந்தில் நடைபெற்ற தொடரில் இந்தியாவின் பீல்ட் கோல்களை அடித்தவர்கள் சுக்ஜீத் சிங், குர்ஜந்த் சிங், அபிஷேக் கூட்டணியே. மந்தீப், உபாத்யாய் ஆகியோரின் முன்கள ரேஞ்ச் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட நகர்வுகள்தான். இதனால் ஒரு எதிர்த்தாக்குதல் மூவை இவர்களைக் கொண்டு திட்டமிட முடியாது. ஆனால் இவர்களது ஒலிம்பிக் அனுபவமும், பெரிய போட்டிகளை வெல்லும் திறமையும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டதோடு இவர்கள் மற்றவர்களுக்கு இணையாக உடற்தகுதியை நிரூபித்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

ஆரய்ஜீத் என்ற வீரர் தேர்வு செய்யப்படவில்லை, ஆகாஷ்தீப் தேர்வு செய்யப்படவில்லை. ஆரய்ஜீத் நல்ல ஸ்ட்ரைக்கர். அதேபோல் அபாரமான ட்ராக் பிளிக்கர் ஜுக்ராஜ் சிங்கை மாற்று வீரர்கள் பட்டியலில் தேர்வு செய்துள்ளார் ஃபுல்டன். இப்போது அமித் ரோஹிதாஸ் மற்றும் ஹர்மன்பிரீத்திடம் மட்டுமே ட்ராக் பிளிக் தெரிவு உள்ளது. ஆனால் ஜுக்ராஜின் தடுப்பாட்டம் விரும்பத்தகுந்ததாக சமீப காலங்களில் இல்லை என்பதால் அவரை ரிசர்வில் வைத்துள்ளனர்.

டோக்கியோ வெண்கலம் வென்ற போது ருபிந்தர் பால் சிங், ஹர்மன்பிரீத் ஆட்டத்தை மறக்க முடியாது. இப்போது பெனால்டி கார்னரின் முக்கிய வீரராக ஹர்மன்பிரீத் மட்டுமே உள்ளார்.

இந்திய அணியின் கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் உலகிலேயே சிறந்த கோல் கீப்பர். அதனால் அவரை வைத்துதான் இந்த முறை இந்திய அணி பதக்கம் நோக்கி முன்னேற முடியும். பெனால்டி ஷூட் அவுட்களில் ஸ்ரீஜேஷ் செய்த மாபெரும் தடுப்புகளை மறக்க முடியுமா? புரோ லீக் ஆட்டங்களில் இந்திய அணி ஷூட் அவுட்டிற்குச் சென்ற மூன்று ஆட்டங்களில் வென்றது ஸ்ரீஜேஷின் பிரமிப்பூட்டும் தடுப்புகளால்தான் என்றே கூறலாம்.

முக்கியமான புறக்கணிப்பாக வல்லுநர்கள் கூறுவது எந்த வீரர் எனில் முகமது ரஹீல் என்கின்றனர். இவர் ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய டூர்களில் அட்டாக்கிங் மிட் ஃபீல்டராக அசத்தியிருந்தார். ஆனால் அவர் இந்த ஒலிம்பிக் அணியில் இல்லாதது பெரும் குறை என்கின்றனர். அதாவது டிபன்ஸ் தரப்பை வலுவாகக் கட்டமைப்பதில் இந்திய அணித் தேர்வு மும்முரமாக இருந்ததால் அட்டாக்கிங் தெரிவு பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளதாக சில நிபுணர்கள் இந்திய ஒலிம்பிக் ஹாக்கி அணித்தேர்வு பற்றி கூறி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x