Published : 01 Jul 2024 10:59 AM
Last Updated : 01 Jul 2024 10:59 AM
பெங்களூரு: ஆர்சிபி அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மற்றும் ஆலோசகராக தினேஷ் கார்த்திக் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அந்த அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஐபிஎல் 2024 தொடருக்கு பின் ஓய்வு அறிவித்த தினேஷ் கார்த்திக், இப்போது பேட்டிங் பயிற்சியாளராக புதிய ரோலில் பணிபுரியவுள்ளார். இதுதொடர்பாக ஆர்சிபி தனது வலைதளத்தில் “எங்கள் கீப்பரே (தினேஷ் கார்த்திக்) புதிய அவதாரத்தில் ஆர்சிபிக்கு மீண்டும் வருக. இனி ஆர்சிபி ஆண்கள் அணியின் பேட்டிங் பயிற்சியாளராகவும், வழிகாட்டியாகவும் டிகே இருப்பார்!” என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மேலும் இன்னொரு பதிவில், “கிரிக்கெட்டில் நீங்கள் ஒரு மனிதனை வெளியேற்றலாம். ஆனால் ஒரு மனிதனிடமிருந்து கிரிக்கெட்டை வெளியேற்ற முடியாது” என்று கூறியுள்ளது.
முன்னதாக கடந்த மாதம் 1-ம் தேதி ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து தினேஷ் கார்த்திக் ஓய்வு அறிவித்தார். அந்த அறிவிப்பில், “அண்மைக் காலமாக நிறைய யோசித்து கிரிக்கெட்டிலிருந்து விலகிவிடலாம் என முடிவெடுத்துள்ளேன். தற்போது அதிகாரபூர்வமாக எனது ஓய்வை அறிவிக்கிறேன். தொடர்ந்து எனக்கு முன்னால் இருக்கும் புதிய சவால்களை எதிர்கொள்ள காத்திருக்கிறேன்.
இந்த நீண்ட பயணத்தை இனிமையாகவும் சுவாரஸ்யமாகவும் மாற்றிய எனது பயிற்சியாளர்கள், கேப்டன்கள், தேர்வாளர்கள், அணியினர் மற்றும் துணைப் பணியாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். மில்லியன் கணக்கானோர் விளையாடும் இந்த நாட்டில், நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததை அதிர்ஷ்டமாக கருதுகிறேன். பல ரசிகர்கள் மற்றும் நண்பர்களின் நன்மதிப்பை பெற்றிருப்பது எனக்கு கிடைத்த கூடுதல் பாக்கியம்.
இத்தனை ஆண்டுகள் எனக்குத் துணையாகவும், தூணாகவும் இருந்தவர்கள் என்னுடைய பெற்றோர். அவர்களின் ஆசீர்வாதம் இல்லாவிட்டால் நான் இன்று இந்த நிலையை அடைந்திருக்க முடியாது. என்னுடைய இந்தப் பயணத்துக்காக தன்னுடைய தொழில்முறை விளையாட்டிலிருந்து வெளியேறி, எனக்காக துணை நின்ற தீபிகாவுக்கு நான் என்றும் கடன்பட்டிருக்கிறேன்.
விளையாட்டை பின்பற்றும் ரசிகர்களுக்கும், ஃபாலோவர்ஸ்களுக்கும் பெரிய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் ஆதரவில்லாமல் கிரிக்கெட் வீரர்களும், கிரிக்கெட்டும், நிலைத்திருக்க முடியாது” எனக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment