Published : 01 Jul 2024 08:02 AM
Last Updated : 01 Jul 2024 08:02 AM

ரோஹித் முத்தம் முதல் மெஸ்ஸி ஸ்டைல் வரை: இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்ற பின்...

புதுடெல்லி: டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அமெரிக்கா, மேற்கு இந்தியத் தீவுகளில் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்போட்டி நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் பார்படாஸில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியா, தென் ஆப்பிரிக்க அணிகள் மோதின.

இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் குவித்தது. ரோஹித் சர்மா 9, ரிஷப் பந்த் 0, சூர்யகுமார் யாதவ் 3, ஹர்திக் பாண்டியா 5, ரவீந்திர ஜடேஜா 2 ரன்கள் எடுத்தனர். நிதானமாக விளையாடிய விராட் கோலி 76, அக்சர் படேல் 47, ஷிவம் துபே 27 ரன்களும் எடுத்தனர்.

பின்னர் விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

இந்தத் தொடரில் வென்றதன் மூலம் 17 ஆண்டுக்குப் பிறகு டி20 உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணி கோப்பையைக் கைப்பற்றியுள்ளது.

2-வது முறை கோப்பை: டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி 2-வது முறையாக கோப்பையை வென்றுள்ளது. இதற்கு முன்பு 2007-ல் தோனி தலைமையிலான இந்திய அணி டி20 கோப்பையை வென்றிருந்தது.

இதைத் தொடர்ந்து ஐசிசி உலகக் கோப்பை தொடர்களில் கோப்பையை வென்று கொடுத்த கேப்டன்கள் வரிசையில் ரோஹித் சர்மாவும் சேர்ந்தார். இதற்கு முன்பு 1983-ல் கபில்தேவும், 2007, 2011-ம் ஆண்டுகளில் (டி20 உலகக் கோப்பை, 50 ஓவர் உலகக் கோப்பை) எம்.எஸ்.தோனியும் ஐசிசி உலகக் கோப்பை தொடர்களில் இந்தியாவுக்கு கோப்பையை வென்று கொடுத்திருந்தனர்.

பும்ராவுக்கு 15 விக்கெட்கள்: இந்தத் தொடரில் 15 விக்கெட்களைக் கைப்பற்றிய பும்ராவுக்கு தொடர்நாயகன் விருதும், இறுதிப் போட்டியில் அபாரமாக ஆடி 76 ரன்கள் குவித்த விராட் கோலிக்கு ஆட்டநாயகன் விருதும் கிடைத்தன.

ரூ.125 கோடி பரிசு: டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசு வழங்கப்படும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயலர் ஜெய் ஷா நேற்று அறிவித்தார். 2-வது முறையாக டி20 உலகக் கோப்பையை வென்றதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பை பிசிசிஐ செயலர் ஜெய்ஷா வெளியிட்டுள்ளார்.

டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு: கோப்பையை வென்றதைத் தொடர்ந்து சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ரோஹித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளனர்.

ரோஹித் சர்மா கூறும் போது, “இந்தியாவுக்காக கோப்பையை வென்றுவிட்டு ஓய்வை தெரிவிக்க வேண்டும் என்று நினைத்தேன். தற்போது வென்றுவிட்டேன். குட்பை சொல்லும் நேரம் இது" என்றார்.

விராட் கோலி கூறும்போது, “இதுதான் என்னுடைய கடைசி டி20 உலக கோப்பை போட்டி. எதை அடைய வேண்டும் என நினைத்தோமோ அதை அடைந்துள்ளோம்" என்றார்.

இதைத் தொடர்ந்து சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரவீந்திர ஜடேஜாவும் அறிவித்துள்ளார். இதுவரை 74 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ஜடேஜா, 515 ரன்களும், 54 விக்கெட்களும் எடுத்துள்ளார்.

சச்சின், தோனி: கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் கேப்டன் சச்சின் டெண்டுல்கர், எம்.எஸ்.தோனி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி, இந்திய அணியினரை தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்தார். மோடி தனது வாழ்த்துச் செய்தியில் கூறும்போது, “ஒட்டுமொத்த இந்தியாவின் சார்பாக இந்த பிரம்மாண்ட வெற்றிக்கு எனது வாழ்த்துகள். இந்த நாள் உங்களின் அபாரமான ஆட்டத்தால் 140 கோடி இந்தியர்களை பெருமைப்பட வைத்துள்ளீர்கள். கோப்பையை வென்றதன் மூலம் இந்திய மக்களின் மனதையும் நீங்கள் வென்றுள்ளீர்கள்" என்றார்.

மேலும் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தேசியத் தலைவர் கார்கே, தொழிலதிபர் கவுதம் அதானி உள்ளிட்டோரும் வாழ்த்துகளை பகிர்ந்துள்ளனர்.

மெஸ்ஸி ஸ்டைல்: பரிசளிப்பு மேடையில் டி20 உலகக்கோப்பையை, அர்ஜெண்டினா கால்பந்து அணி நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸியின் ஸ்டைலைப் பின்பற்றி வாங்கினார் ரோஹித் சர்மா. இந்த புகைப்படம், வீடியோ ஆகியவை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

உணர்ச்சிவசம்: கோப்பையை வென்றதும் இந்திய அணி வீரர்கள் உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கினர். சிறப்பாக செயல்பட்ட விராட் கோலி உள்ளிட்டோரை கேப்டன் ரோஹித் சர்மா கட்டிப்பிடித்து வாழ்த்து தெரிவித்தார். மேலும் ஹர்திக் பாண்டியாவின் கன்னத்தில் முத்தமிட்டு கண்கலங்கினார் ரோஹித்.

தொடரும் சோகம்: வலுவான அணியாக இருந்தபோதும் தென் ஆப்பிரிக்க அணி இதுவரை ஐசிசி உலகக்கோப்பை தொடர்களில் சாம்பியன் பட்டம் வென்றதில்லை. இந்நிலையில் முதல்முறையாக அந்த அணி இந்த டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்தது. ஆனால் இம்முறையும் அந்த அணி தோல்வி கண்டு கோப்பையை வெல்ல முடியாமல் போனது. அந்த அணியின் கோப்பை தாகம் தொடர்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x