Published : 30 Jun 2024 06:49 PM
Last Updated : 30 Jun 2024 06:49 PM

கபில்தேவ், தோனி வரிசையில் உலகக் கோப்பையை வென்று கொடுத்த ரோகித்தின் கேப்டன்சி - ஒரு பார்வை

இந்திய அணி நீண்ட இடைவெளிக்கு பிறகு உலகக் கோப்பையை உச்சி முகர்ந்துள்ளது. அப்படி சொல்வதைவிட கபில்தேவ், தோனி வரிசையில் இந்திய அணிக்கு உலகக் கோப்பையை வென்று கொடுத்துள்ளார் கேப்டன் ரோகித் சர்மா. இதனை இப்படி சொல்வதே சரியாக இருக்கும். ஏனென்றால், இன்று இந்தியா மீண்டும் உலகக் கோப்பை வெல்ல ரோகித்தின் கேப்டன்சி மிக முக்கியமாக அமைந்தது.

அதற்கு நேற்றைய போட்டியையே உதாரணமாக சொல்லலாம். 30 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் கிளாசன், டேவிட் மில்லர் என உலகின் அபாயகரமான டி20 வீரர்கள் களத்தில் இருந்தனர். இக்கட்டான இந்த நிலையில் துவண்டு விடாமல் சரியான பந்துவீச்சாளர்களை பந்துவீச வைத்து எதிரணியை சாய்த்தார் ரோகித். 16வது ஓவரில் பும்ராவை கொண்டு வீசவைத்தது எல்லாம் முக்கியமான நகர்வு. ஏனெனில், அதிரடியாக விளையாடிய கிளாசனுக்கு நெருக்கடியை ஏற்படுத்தினால் மட்டுமே ஆட்டத்தில் மாற்றம் வரும்.

இதனை சரியாக புரிந்துகொண்டு பும்ரா, பாண்டியா, அர்ஷ்தீப் சிங் என கடைசி ஐந்து ஓவர்களில் பவுலர்களை சரியாக ரொட்டேட் செய்து கோப்பையை வென்று கொடுத்துள்ளார் ரோகித். அவரின் கேப்டன்சிக்கு மற்றுமொரு சான்று ஆடும் லெவனில் செய்யப்பட்ட மாற்றங்கள். இந்தத் தொடர் முழுவதும் இந்திய அணியின் ஆடும் லெவனில் ஒரே ஒரு முறை மட்டும் தான் அதுவும் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டது.

அது, அமெரிக்காவிலிருந்து வெஸ்ட் இண்டீஸ் வந்த போது ஸ்பின்னுக்கு சாதகமான சூழல் இருக்கும் என்பதால் வேகப்பந்து வீச்சாளர் மொகமது சிராஜை உட்கார வைத்துவிட்டு குல்தீப் யாதவை லெவனுக்குள் கொண்டு வந்தார். குல்தீப் யாதவ் சேர்க்கப்படுவார் என்றதும் ஜடேஜா தான் உட்காரவைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஜடேஜாவின் ஆட்டம் காரணமாக இந்த எதிர்பார்ப்புகள் இருந்தன.

அதன்காரணமாகவே குல்தீப்பை அமெரிக்காவில் நடந்த போட்டிகளிலேயே களமிறக்கியிருக்க வேண்டும் எனக் குரல்கள் எழுந்தன. ஆனால், ஜடேஜாவை பவுலிங் ஆப்ஷனாக மட்டும் பார்க்காமல் பேட்டிங் ஆப்ஷனாகவும் பார்த்தார் ரோகித். எனவே சிராஜ் ஓரம்கட்டப்பட்டு மூன்று ஸ்பின்னர்கள் உடன் களமிறங்கியது அணி. இது நல்ல மாற்றமாகவும் அமைந்தது.

அதற்கேற்ப குல்தீப் முக்கியமான சில போட்டிகளில் கைகொடுத்தார். இதேபோல், தொடர் முழுவதும் ரிஷப் பந்தின் மீது பெரிய நம்பிக்கை வைத்து நம்பர் 3ல் களமிறக்கினார் ரோகித். அதற்கு பயனாக தொடரின் ஆரம்பத்தில் பந்த் உதவியினால் இந்தியா எளிதில் குரூப் 8 சுற்றுக்கு முன்னேறியது. ஷிவம் துபே மீது பல விமர்சனங்கள் இருந்த நிலையில் நம்பி வாய்ப்பளித்தார் ரோகித். இறுதியில் அந்த முடிவுக்கும் நல்ல ரிசல்ட் கிடைத்தது.

மற்ற முக்கியமான இரு நகர்வு ஜடேஜாவை விட அக்சர் படேலை பிரதான ஆப்சனாக கொண்டு விளையாடியதும், விராட் கோலியை ஓப்பனிங்கில் களமிறங்கியதும். ஜடேஜாவை விட அக்சர் படேலை பிரதான ஆப்சனாக்கும் ரோகித்தின் முடிவுக்கு கைமேல் பலன் கிடைத்தது. உதாரணமாக நேற்றைய போட்டியில் ரோகித், சூரியகுமார் யாதவ் விரைவாக வெளியேற 31 பந்தில் 4 சிக்ஸ், 1 பவுண்டரி என்று அக்சர் படேல் 47 ரன்கள் எடுத்தார். நேற்று மட்டும் என்று இல்லை இந்த சீசன் முழுக்கவே பேட்டிங், பவுலிங் இரண்டிலும் அக்சர் படேல் அதிரடி காட்டினார்.

விராட் கோலியை ஓப்பனிங்கில் களமிறக்கியது இந்த உலகக் கோப்பையின் பெரிய சர்ப்ரைஸ். தொடர் சொதப்பல்களால் விராட் கோலி மீது விமர்சனங்கள் எழுந்த நிலையில், அவரை நம்பர் 3-ல் களமிறக்க வேண்டும் என சொல்லப்பட்டபோது, ஏன் விராட் கோலியே கேட்டபோதும் நம்பிக்கை வைத்து அவரை தொடர்ந்து ஓப்பனிங்கில் இறங்க வைத்தார். அதற்கு பரிசு தான் நேற்று விராட் கோலி ஆடிய மாஸ்டர் க்ளாஸ் இன்னிங்ஸ். அயர்லாந்துக்கு எதிரான முதல் போட்டிக்கு முன்னரே இந்தத் தொடருக்கான லெவனை தேர்வு செய்துவிட்டார் ரோகித்.

இந்தியா இன்று பெற்றிருக்கும் வெற்றிக்கு ரகசியம் இதுதான். டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டபோது, நான்கு ஸ்பின்னர்களை தேர்வு செய்ததற்கு விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் அதில் தான் சூட்சமம் இருந்தது. மற்ற அணிகள் ஆல் ஆவுண்டர் ஆப்சனுக்கு பார்ட் டைமர்களை வைத்து சமாளித்துக் கொண்டிருக்கையில் ரோகித், தனது அதிபுத்திசாலித்தனத்தால் ஆடும் லெவனில் ஒரு முழுநேர ஸ்பின்னர், இரண்டு ஸ்பின் ஆல்ரவுண்டர்கள் என தெம்புடன் விளையாடினார்.

ரோகித் சர்மா தனது தலைமை பண்பை பலமுறை நிரூபித்துக் காட்டியுள்ளார். உலகக் கோப்பை வெற்றி அதற்கான உச்சம். இதன்மூலம் உலகக் கோப்பை எனும் ஒரு மாபெரும் கனவை நிறைவேற்றிக் கொடுத்தவர்களின் பட்டியலில் கபில்தேவ், தோனிக்குப் பிறகு ரோகித்தின் பெயரும் இணைந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x
News Hub
Icon