Published : 30 Jun 2024 04:32 PM
Last Updated : 30 Jun 2024 04:32 PM

வெற்றிக்கு வித்திட்ட மூவர் கூட்டணி - திருப்புமுனை தருணங்கள் @ டி20 உலகக் கோப்பை

பார்படாஸ்: நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது ரோகித் தலைமையிலான இந்திய அணி. த்ரில்லும் திருப்பங்களும் மிகுந்த இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்கவை 7 ரன்களில் வீழ்த்தியது இந்திய அணி. விராட் கோலியும், அக்சர் படேலும் பேட்டிங்கில் கைகொடுக்க, பவுலிங்கில் பாண்டியா, பும்ரா, அர்ஷ்தீப் சிறப்பாக பங்களித்தனர். டி20 உலகக் கோப்பை அரங்கில் இந்தியா வெல்லும் இரண்டாவது சாம்பியன் பட்டம் இது.

கையை விட்டுச் சென்ற போட்டியை காப்பாற்றி கரைசேர்த்து சாம்பியன் பட்டம் வெல்ல வைத்த பெருமை வேகப்பந்து வீச்சாளர்கள் கூட்டணிக்கே சேரும். எப்படியென்றால், 177 ரன்கள் இலக்குடன் இரண்டாவது பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணிக்கு வெற்றிக்கான அடித்தளத்தை அமைத்துக் கொண்டிருந்தார் டிகாக். ஸ்டப்ஸ் உடன் இணைந்து 58 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார் டிகாக். 21 பந்துகளில் 31 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டப்ஸ் ஆட்டமிழந்தார். அவரை அக்சர் படேல் அவுட் செய்தார். தொடர்ந்து வந்த கிளாசன் உடன் இணைந்து 36 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார் டிகாக். அவர் 39 ரன்களில் அர்ஷ்தீப் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

இதன்பின் தனது அதிரடியால் வெற்றிக்கு அருகில் தென் ஆப்பிரிக்க அணியை அழைத்துச் சென்றார் கிளாசன். டேவிட் மில்லருடன் இணைந்து 45 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். இந்திய அணியின் சுழற்பந்து வீச்சை துவம்சம் செய்தார். குறிப்பாக அக்சர் படேல் வீசிய 15வது ஓவரில் கிளாசன் அதிரடியால் தென் ஆப்பிரிக்க அணிக்கு 24 ரன்கள் வந்து சேர்ந்தது. இதனால் 30 பந்தில் 30 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை உருவானது. கையில் ஆறு விக்கெட்கள் இருக்க, மொத்த ஆட்டமும் தென் ஆப்பிரிக்கா பக்கம் சென்றுவிட்ட உணர்வே மேலோங்கியது.

திருப்புமுனை தருணங்கள்: இப்படியான நிலையில் தான் 16-வது ஓவரை வீச வந்தார், பும்ரா. சிக்கலான தருணத்தில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார் பும்ரா. இதற்கு முந்தையை ஓவரில் வாணவேடிக்கை காட்டிய கிளாசன், பும்ராவின் பந்துவீச்சில் தடவினார். ஒருவித எச்சரிக்கையுடனேயே பும்ராவை அணுகினர் கிளாசனும் மில்லரும். அதற்கேற்றாற்போல் 4 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து இரண்டு டாட் பந்துகளையும் வீசி தென் ஆப்பிரிக்காவுக்கு நெருக்கடியை அதிகப்படுத்தினார் பும்ரா.

இதன்பின் 17-வது ஓவரின் முதல் பந்தில் கிளாசன் விக்கெட்டை வீழ்த்தினார் பாண்டியா. அப்போது 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்து இருந்தது தென் ஆப்பிரிக்கா. அந்த அணியின் வெற்றிக்கு 26 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரில் வெறும் நான்கு ரன்களை மட்டுமே பாண்டியா கொடுத்திருந்தார்.

18-வது ஓவரை பும்ரா வீசினார். முதல் இரண்டு பந்து டாட். அடுத்த பந்தில் சிங்கிள் எடுத்தார் மில்லர். நான்காவது பந்தில் யான்சன் விக்கெட்டை வீழ்த்தினார். பந்து ஸ்டம்புகளை தகர்த்தது. கேஷவ் மகாராஜ் பேட் செய்ய வந்தார். ஐந்தாவது பந்தும் டாட் ஆனது. அடுத்த பந்தில் மகாராஜ் சிங்கிள் எடுத்தார்.

கடைசி 12 பந்துகளில் தென் ஆப்பிரிக்க அணியின் வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட்டது. 19-வது ஓவரை அர்ஷ்தீப் வீசினார். ஸ்ட்ரைக்கில் மகாராஜ் இருந்தார். முதல் இரண்டு பந்து டாட். மூன்றாவது பந்தில் சிங்கிள் எடுத்தார். நான்காவது பந்தில் மில்லர் இரண்டு ரன்கள் எடுத்தார். ஐந்தாவது பந்தில் சிங்கிள் எடுத்தார். கடைசி பந்து டாட் ஆனது.

சூர்யகுமார் அபார கேட்ச்: கடைசி ஓவரில் தென் ஆப்பிரிக்க அணியின் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டது. ஸ்ட்ரைக்கில் மில்லர் இருந்தார். அந்த ஓவரை பாண்டியா வீசினார். முதல் பந்தில் சிக்ஸர் அடிக்க முயற்சித்தார் மில்லர். பவுண்டரி லைனில் இருந்த சூர்யகுமார் யாதவ் அசத்தல் கேட்ச் பிடித்து கலக்கினார். பந்தை பிடித்து, அதை காற்றில் தூக்கி போட்டு, பவுண்டரி லைனுக்கு வெளியில் சென்று, மீண்டும் உள்ளே வந்து கேட்ச் பிடித்திருந்தார். மில்லர் அவுட். அது அபாரமான கேட்ச். இரண்டாவது பந்தில் பவுண்டரி விளாசினார் ரபாடா. அது எட்ஜ் ஆகி சென்றது. 4 பந்துகளில் தென் ஆப்பிரிக்காவின் வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்டன.

மூன்றாவது பந்தில் சிங்கிள் எடுத்தது தென் ஆப்பிரிக்கா. நான்காவது பந்தில் மகாராஜ் சிங்கிள் எடுத்தார். கடைசி இரண்டு பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்டன. பாண்டியா வொய்டு வீசினார். அந்த எக்ஸ்ட்ரா பந்தில் ரபாடா கேட்ச் கொடுத்து வெளியேறினார். கடைசி பந்தில் 9 ரன்கள் அந்த அணியின் வெற்றிக்கு தேவைப்பட்டது. ஒரு ரன் மட்டுமே எடுக்கப்பட்டது. அதன் மூலம் இந்தியா 7 ரன்களில் வெற்றி பெற்றது.

இப்படியாக கடைசி ஓவர்கள் இந்திய அணிக்கு ஆட்டத்தில் திருப்புமுனையாக அமைந்தது. கையைவிட்டு சென்ற போட்டியை பும்ரா, ஹர்திக், அர்ஷ்தீப் சிங் ஆகிய மூவரும் மீண்டும் வெற்றியாக்கினர். இவர்களில் யாரேனும் ஒரு மோசமான பந்தை வீசியிருந்தாலும் அது இந்திய அணிக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும். ஆனால், சூழ்நிலையை புரிந்துகொண்டு சரியான லெந்தில் பந்துவீசினர் மூவரும். இவர்களின் முயற்சியின் பலனாக இந்திய அணி மீண்டும் உலகக் கோப்பையை தாயகம் கொண்டுசேர்ந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x