Published : 30 Jun 2024 01:29 PM
Last Updated : 30 Jun 2024 01:29 PM
பார்படாஸ்: விராட் கோலியைத் தொடர்ந்து கேப்டன் ரோகித் சர்மாவும் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது ரோகித் தலைமையிலான இந்திய அணி. இந்தப் போட்டியில் 76 ரன்கள் எடுத்த கோலி, ஆட்ட நாயகன் விருதை வென்றார். அதன்போது இதுவே தனது கடைசி சர்வதேச டி20 போட்டி என அவர் அறிவித்தார்.
விராட் கோலியை தொடர்ந்து கேப்டன் ரோகித் சர்மாவும் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்துள்ளார். வரலாற்று வெற்றிக்கு சில நிமிடங்களுக்கு பிறகு கோலி தனது ஓய்வை அறிவித்த நிலையில், இந்திய கேப்டன் ரோகித் சர்மா செய்தியாளர் சந்திப்பில் ஓய்வை அறிவித்தார். எனினும், ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாடுவதை உறுதிப்படுத்தினார் ரோகித்.
செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ரோகித் சர்மா, "டி20 கிரிக்கெட் விளையாட தொடங்கியதில் இருந்தே அதனை ரசித்து விளையாடி வருகிறேன். இந்திய அணிக்காக நான் விளையாட தொடங்கியதும் டி20 போட்டிகளில் இருந்துதான். எனவே, கோப்பையை வெல்ல வேண்டும் என்பது எனது மிகப்பெரிய கனவு. சொல்லப்போனால் மிக தீவிரமாக அதில் ஆசை கொண்டிருந்தேன். இம்முறை அது நிறைவேறியதில் மகிழ்ச்சி.
இத்தனை வருடங்களாக நான் எடுத்த ரன்களை விட, இந்தியாவுக்காக போட்டிகளையும், கோப்பைகளையும் வெல்வதே பெரிது. விடைபெற இதைவிட சிறந்த தருணம் இருக்காது. சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறேன். எனினும், ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் எனது பங்களிப்பு இருக்கும்" என்று தெரிவித்தார்.
2007ல் முதன்முதலில் நடந்த டி20 உலகக் கோப்பை தொடர் மூலமாக டி20 கிரிக்கெட்டில் அறிமுகமான ரோகித் சர்மா, இதுவரை 159 போட்டிகளில் 4231 ரன்களை குவித்து இந்த பார்மெட்டில் அதிக ரன்கள் குவித்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். மேலும், சர்வதேச டி20 போட்டிகளில் ஐந்து சதங்கள் அடித்தவர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். முதல் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் முக்கிய பங்கு வகித்த ரோகித் சர்மா, தற்போது கேப்டனாகவும் இந்தியாவை கோப்பையை வெல்ல வைத்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT