Published : 30 Jun 2024 08:25 AM
Last Updated : 30 Jun 2024 08:25 AM

பராகுவே அணியை வீழ்த்தியது பிரேசில்: 4-1 என்ற கோல் கணக்கில் வென்று அபாரம் | கோபா அமெரிக்கா தொடர்

கோல் அடித்த மகிழ்ச்சியில் வினிசியஸ் ஜூனியர்.

லாஸ் வேகாஸ்: கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. லாஸ் வேகாஸ் நகரில் நேற்று ‘டி’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பிரேசில் - பராகுவே அணிகள் மோதின.

15-வது நிமிடத்தில் பராகுவே வீரர் தமியான் பொபாடில்லா பாக்ஸ் பகுதிக்கு வெளியே இருந்து வலுவாக அடித்த பந்தை பிரேசில் கோல்கீப்பர் அலிசன் பெக்கர் இடதுபுறத்தை நோக்கி அற்புதமாக பாய்ந்து கோல் விழவிடாமல் தட்டி விட்டார். 18-வது நிமிடத்தில் பிரேசில் வீரர் ரோட்ரிகோ கார்னரில் இருந்து அடித்த பந்தை பாக்ஸின் மையப்பகுதியில் இருந்து டேனிலோ தலையால் முட்டி கோல் வலைக்குள் தள்ள முயன்றார். ஆனால் பந்து வலதுபுறம் விலகிச் சென்றது.

23-வது நிமிடத்தில் கார்னரில் இருந்து ரோட்ரிகோ அடித்த பந்தை மார்க்வின்ஹோஸ் தலையால் முட்டி கோல் அடிக்க முயன்றார். ஆனால் பந்து கோல் கம்பத்துக்கு மேலே உயரமாக சென்று ஏமாற்றம் அளித்தது. 29-வது நிமிடத்தில் பராகுவே வீரர் ஜூலியோ என்சிசோவிடம் இருந்து பந்தை பெற்ற தமியான் பொபாடில்லா பாக்ஸின் மையப்பகுதியில் இருந்து இலக்கை நோக்கி அடித்த ஷாட்டை பிரேசில் கோல்கீப்பர் அலிசன் பெக்கர் தடுத்தார்.

30-வது நிமிடத்தில் பெனால்டி பகுதிக்குள் வைத்து பராகுவே வீரர் ஆன்ட்ரேஸ் கியூபாஸ் பந்தை தடுக்க முயன்ற போது அவரது கையில் பட்டது. இதனால் பிரேசில் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் இதை லூகாஸ் பாக்கெட்டா கோல்கம்பத்துக்கு வெளியே அடித்து வீணடித்தார். 35-வது நிமிடத்தில் லூகாஸ் பாக்கெட்டா உதவியுடன் பந்தை பெற்ற நட்சத்திர வீரரான வினிசியஸ் ஜூனியர், பாக்ஸின் மையப்பகுதியில் இருந்து அடித்த பந்து கோல் வலையை துளைக்க பிரேசில் அணி 1-0 என முன்னிலை பெற்றது.

43-வது நிமிடத்தில் பிரேசில் வீரர் புரூணோ குய்மாரஸ் இலக்கை நோக்கி அடித்த பந்தை பராகுவே கோல்கீப்பர் ரோட்ரிகோ மோரினிகோ தடுத்தார். அவரது கையில் பட்டு திரும்பி வந்த பந்தை அருகில் நின்ற டிபன்டர் சரியாக விலக்கிவிடவில்லை. இதை பயன்படுத்திக் கொண்ட பிரேசில் வீரர் சாவின்ஹோ கோல்கம்பத்துக்கு மிக நெருக்கமாக நின்ற நிலையில் பந்தை கோல் வளைக்குள் தள்ளிவிட்டார். இதனால் 2-0 என்ற கணக்கில் பிரேசில் முன்னிலை பெற்றது. முதல் பாதியில் காயங்களுக்கு இழப்பீடாக 6 நிமிடங்கள் வழங்கப்பட்டது. இதன் 5-வது நிமிடத்தில் உட்புற பாக்ஸ் பகுதியில் இருந்து வினிசியஸ் ஜூனியர் கோல் அடித்து அசத்தினார். இதனால் முதல் பாதியில் பிரேசில் அணி 3-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.

2-வது பாதி ஆட்டம் தொடங்கிய 3-வது நிமிடத்தில் பராகுவே தனது முதல் கோலை அடித்தது. பாக்ஸ் பகுதிக்கு வெளியே இருந்து அந்த அணியின் வீரர் ஓமர் ஆல்டெரெட் அடித்த ஷாட், கோல்கம்பத்தின் வலதுபுறத்தை துளைத்தது. 51-வது நிமிடத்தில் பராகுவே வீரர் ஜூலியோ என்சிசோ இலக்கை நோக்கி வலுவாக அடித்த ஷாட்டை பிரேசில் கோல்கீப்பர் அலிசன் பெக்கர் கோல் விழவிடாமல் விலக்கிவிட்டார்.

65-வது நிமிடத்தில் பெனால்டி பகுதிக்குள் பராகுவே வீரர் மத்தியாஸ் வில்லாசான்டி பந்தை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்ட போது அவரது கையில் பட்டது. இதனால் பிரேசில் அணிக்கு பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. இம்முறை லூகாஸ் பாக்கெட்டா அதை கோலாக மாற்றினார். இதனால் பிரேசில் 4-1 என்ற வலுவான முன்னிலையை நோக்கி நகர்ந்தது.

81-வது நிமிடத்தில் பராகுவே வீரர் ஆன்ட்ரெஸ் கியூபாஸுக்கு சிவப்பு அட்டை வழங்கப்பட்டது. இதனால் அந்த அணி 10 வீரர்களுடன் விளையாடியது. மேற்கொண்டு இரு அணிகள் தரப்பில் கோல் அடிக்க முயன்றும் பலன் கிடைக்கவில்லை. முடிவில் பிரேசில் அணி 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணிக்கு இது முதல் வெற்றியாக அமைந்தது. கோஸ்டா ரிகாவுக்கு எதிரான ஆட்டத்தை பிரேசில் அணி டிராவில் முடித்திருந்தது. தற்போதைய வெற்றியின் மூலம் 4 புள்ளிகளுடன் பிரேசில் அணி தனது பிரிவில் 2-வது இடத்தில் உள்ளது.

கொலம்பியா வெற்றி: ‘டி’ பிரிவில் நடைபெற்ற மற்றொரு லீக் ஆட்டத்தில் கொலம்பியா - கோஸ்டா ரிகா அணிகள் மோதின. இதில் கொலம்பியா 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 31-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பில் லூயிஸ் தியாஸ் கோல் அடித்து அசத்தினார். 59-வது நிமிடத்தில் டாவின்சன் சான்செஸ், 62-வது நிமிடத்தில் ஜான் கோர்டோபா ஆகியோரும் கோல் அடித்தனர். இந்த வெற்றியின் மூலம் கொலம்பியா 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x