Published : 29 Jun 2024 03:32 PM
Last Updated : 29 Jun 2024 03:32 PM

“விதிகள் ஒன்றுதான்!” - சர்வதேச வீல்சேர் கிரிக்கெட் களத்தில் அசத்தும் தமிழர்கள்!

இந்திய வீரர்கள் சுரேஷ், ஜெயன்

சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணியினர் வழக்கம் போலவே அபார செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்தச் சூழலில் மாற்றுத் திறனாளிகளுக்கான கிரிக்கெட்டில் சர்வதேச அளவில் அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் தமிழக வீரர்கள் குறித்து பார்ப்போம்.

இந்தியாவுக்கு இது சர்வதேச கிரிக்கெட்டில் மகத்தான தருணமாக அமைந்துள்ளது. ஏழு மாத இடைவெளியில் இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி ஒருநாள் மற்றும் டி20 உலகக் கோப்பை இறுதியில் விளையாடுகிறது. மகளிர் கிரிக்கெட் அணியும் மூன்று ஃபார்மெட் கிரிக்கெட்டிலும் கட்டம் கட்டி கலக்குகிறது. அந்த வகையில் இந்திய வீல்சேர் கிரிக்கெட் அணி வீரர்களும் அண்மையில் தாங்கள் விளையாடிய தொடரில் வாகை சூடி உள்ளார்கள்.

இலங்கை அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளனர். இதில் தமிழக வீரர்களின் பங்கும் இருக்கிறது. இந்த தொடரை இந்திய மாற்றுத் திறனாளிகளுக்கான கிரிக்கெட் கவுன்சில் (டிசிசிஐ) ஏற்பாடு செய்தது. 16 வீரர்கள் இதற்காக தேர்வு செய்யப்பட்டனர். அதில் தமிழகத்தை சேர்ந்த பந்து வீச்சாளர் ஜெயன் ஆல்ட் செல்லப்பன் மற்றும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சுரேஷ் செல்வம் ஆகியோர் தேர்வாகி இருந்தனர்.

“நான் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவன். தமிழ்நாடு வீல்சேர் அசோசியேஷன் சார்பாக ஸ்டேட் லெவல் கிரிக்கெட் விளையாடி வருகிறேன். சிறு வயதில் இருந்தே கிரிக்கெட் மீது ஆர்வம். எங்கள் ஊரில் விளையாடிக் கொண்டு இருந்தேன். 2016 வாக்கில் எனக்கு தமிழ்நாடு வீல்சேர் கிரிக்கெட் அணி குறித்து தெரியவந்தது. நான் அங்கு சென்று எனது ஆர்வத்தை சொன்னேன். பயிற்சி ஆட்டத்துக்கு பிறகு தென்னிந்திய மாநிலங்களுக்கு இடையிலான தொடரில் விளையாடி இருந்தேன்.

அங்கிருந்து அப்படியே அடுத்தடுத்து கட்டத்தில் விளையாட தொடங்கினேன். நான் பவுலர். டெல்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான தொடரில் தென் மாநில மண்டல (சவுத் ஸோன்) அணியில் விளையாடினேன். அந்த தொடரின் முதல் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினேன். அதன் மூலமாக இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பை பெற்றேன். அப்போது என்னிடம் வீல்சேர் கூட இல்லை. ஊன்றுகோலை பயன்படுத்தி கொண்டிருந்தேன். அணியில் இருந்தவர்கள் கொடுத்த வீல்சேரை பயன்படுத்தி விளையாடினேன்.

எனது அறிமுக போட்டி வங்கதேச அணியுடன் இருந்தது. இதுவரை பாகிஸ்தான், நேபாளம், இலங்கை அணிகளுடன் விளையாடி உள்ளேன். தென்னிந்திய மாநிலங்களில் இருந்து வீல்சேர் கிரிக்கெட் இந்திய அணிக்காக விளையாடிய முதல் வீரர் நான்தான். அது எனக்கு இதில் கிடைத்த பெருமை.

எனது மாவட்ட நிர்வாகத்திடம் எனது நிலையை சொல்லி வீல்சேர் வேண்டும் என கோரிக்கை வைத்தேன். அவர்கள் தான் எனக்கு 2018-ல் அதனை எனக்கு வழங்கி உதவினார்கள். அதை பயன்படுத்தி தான் நான் இப்போது வரை விளையாடி வருகிறேன். இதில் பல்வேறு சவால்கள் உள்ளன. சக இந்திய வீரர்களுடன் பேசும் போது மொழி சார்ந்த சிக்கல் இருக்கும். அதனையும் கடந்து அணியினர் சொல்வதை புரிந்து கொண்டு நாம் செயல்பட வேண்டும்.

அண்மையில் முடிந்த இந்தியா - இலங்கை தொடரில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தும் வாய்ப்பை மிஸ் செய்தேன். இருந்தாலும் தமிழகம் சார்பில் இந்திய அணிக்காக விளையாடி வருவது எனக்கு மட்டுமல்லாது நம் மாநிலத்துக்கும் பெருமை. இதற்கு தமிழ்நாடு வீல்சேர் கிரிக்கெட் அசோசியேஷன் பெரிதும் உதவி வருகிறது. இப்படி எனக்கு உதவி வரும் அனைவருக்கும் இந்நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்னை போலவே மாற்றுத் திறனாளிகள் அனைவரும் அவர்கள் ஆர்வம் கொண்டுள்ள துறையில் தங்கள் திறனை நிரூபிக்க வேண்டுமென விரும்புகிறேன்” என்கிறார் ஜெயன்.

சுயதொழில் மூலம் வாழ்வாதாரம் ஈட்டி வருகிறார் ஜெயன். தங்களுக்கு சரியான உதவி கிடைத்தால் இந்த விளையாட்டில் தங்களால் மேலும் சாதிக்க முடியும் என அவர் சொல்கிறார். விளையாட்டு கருவிகள், விளையாட்டு மைதானம் போன்றவை அவர் வைக்கும் அடிப்படை கோரிக்கையாக உள்ளது. தனது வீட்டுக்கு முறையான மின்சார வசதி இல்லாதபோதும் சூரிய ஒளி சக்தி மூலமாக வீட்டுக்கு மின்சாரம் பெற்று வருவதாகவும். மழை நேரங்களில் அது சிக்கலாக இருப்பதாகவும் சொல்கிறார்.

“திருவண்ணாமலை - செய்யாறு பக்கம் உள்ள ஏனாதவாடி ஜே.ஜே நகர் கிராமம் தான் என் சொந்த ஊர். நான் எட்டு மாத குழந்தையாக இருந்த போது போலியோவால் பாதிக்கப்பட்டு, இடது கால் மற்றும் இடது கை செயல் இழந்தது. நான் இன்று உயிரோடு இருக்க காரணமே என் அம்மாதான். மருத்துவ சிகிச்சை மூலம் எனது இடது கை பாதி அளவு வலுப்பெற்றது. சிறு வயது முதலே கிரிக்கெட் மீது ஆர்வம் உண்டு. என் கிராமத்தில் கிரிக்கெட் விளையாடுவதை வேடிக்கை பார்ப்பேன். அந்த ஆர்வம் நான் 12 வயது இருக்கும்போது முதல் முறையாக கிரிக்கெட் போட்டியில் விளையாடினேன். பைரன் மூலம் ரன் எடுத்து தருவார்கள். ஒரு கையால் தான் பேட்டிங் செய்ய இயலும்.

வாலாஜாவை வெற்றிவேல் மூலமாக வீல்சேர் பயன்படுத்தி விளையாடுவது குறித்து அறிந்தேன். அவர் மூலம் கீர்த்தி வாசன் என்பவர் அறிமுகமானார். வேலூர் சென்றபோது வீல்சேர் கிரிக்கெட் குறித்து கீர்த்தி மூலமாக அறிந்து கொண்டேன். தமிழ்நாட்டில் நடைபெற்ற மாவட்ட அளவிலான தொடரில் கடலூர் மாவட்ட அணிக்காக விளையாடினேன். அந்த தொடரில் சிறப்பாக விளையாடி தமிழ்நாடு அணிக்காக விளையாடும் வாய்ப்பை பெற்றேன். இதற்கு காரணம் எனது மனைவி தான். அவர் எனது கிரிக்கெட் பயிற்சிக்கு உதவினார்.

தேசிய அளவிலான போட்டியில் விளையாடினேன். இதற்கு தமிழ்நாடு வீல்சேர் கிரிக்கெட் சங்க தலைவர் துரைப்பாண்டியன் அண்ணா கொடுத்த ஊக்கம் முக்கிய காரணம். தேசிய போட்டிகளில் எனது ஆட்டத்தை கவனித்த டிசிசிஐ தலைவர் அபே பிரதாப் சிங் மற்றும் இந்திய அணியின் கேப்டன் சோம்ஜித் சிங் என்னை இந்திய அணியில் விளையாட அழைத்தனர்.

இந்திய - இலங்கை அணிகள் ஜூன் 11 முதல் 16 வரை விளையாடிய தொடரில் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. முதல் போட்டியில் மேன் ஆஃப் தி மேட்ச் வாங்கினேன். 22 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெற செய்தேன். வழக்கமாக கிரிக்கெட் விளையாடும் விதிமுறைகள் என்னவோ. அதேதான் வீல்சேர் கிரிக்கெட்டிலும். வீல்சேரில் அமர்ந்தபடி நாங்கள் விளையாடுவோம்” என்கிறார் சுரேஷ் செல்வம்.

சந்தோஷ், ஜெயன் மற்றும் சுரேஷ்

இவர்களை போலவே ஆம்பூரை சேர்ந்த கோ.சந்தோஷ் தமிழ்நாடு வீல்சேர் கிரிக்கெட் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இவர் தனிநபர் விளையாட்டில் பாரா வீல்சேர் பாட்மிண்டனும் விளையாடி வருகிறார். தற்போது உகாண்டாவில் நடைபெறும் சர்வதேச பாட்மிண்டன் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்று விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

“போலியோ மாற்றுத் திறனாளிகள் இருப்பது இதுவே கடைசி தலைமுறையாக இருக்கும் என கருதுகிறேன். அவர்கள் தினமும் நடப்பதே சவாலான காரியம் தான். இவர்கள் எல்லாம் தன்னம்பிக்கையால் சாதித்து கொண்டு இருப்பவர்கள். அவர்களுக்கு நாம் கொடுக்க வேண்டியது அங்கீகாரம் தான்.

மாற்றுத் திறனாளிகள் விளையாட்டுல சாதிக்க எங்களால முடிந்த வகையில் நாங்கள் ஊக்கம் தந்த வருகிறோம். கிரிக்கெட் மட்டுமல்லாது பாட்மிண்டன் போன்ற விளையாட்டுகளிலும் அவர்கள் சாதிக்கலாம். அவர்களுக்காக தொடர்களை ஏற்பாடு செய்வது, விளையாட்டு திறன் கொண்டவர்களை அடையாளம் காண்பது போன்ற பணிகளை தமிழ்நாடு வீல்சேர் கிரிக்கெட் சங்கம் செய்து வருகிறது. இதற்கு நல் உள்ளம் கொண்டவர்கள் உதவியும் வருகின்றனர்” என்கிறார் தமிழ்நாடு வீல்சேர் கிரிக்கெட் சங்க தலைவர் துரைப்பாண்டியன்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x