Last Updated : 29 Jun, 2024 07:12 AM

 

Published : 29 Jun 2024 07:12 AM
Last Updated : 29 Jun 2024 07:12 AM

முதல் நாளில் 525 ரன் குவித்து இந்திய மகளிர் அணி சாதனை: இரட்டை சதம் விளாசி ஷபாலி வர்மா அசத்தல் | மகளிர் டெஸ்ட்

இரட்டை சதம் விளாசிய மகிழ்ச்சியில் இந்திய வீராங்கனை ஷபாலி வர்மா.

சென்னை: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய மகளிர் அணி முதல் நாள் ஆட்டத்தில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 525 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்தது. தொடக்க வீராங்கனையான ஷபாலி வர்மா குறைந்த பந்துகளில் இரட்டை சதம் அடித்து சாதனை படைத்தார்.

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய மகளிர் அணி ரன் வேட்டையாடியது. தொடக்க வீராங்கனைகளான ஸ்மிருதி மந்தனா, ஷபாலி வர்மா ஜோடி எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாத தென் ஆப்பிரிக்க அணியின் பந்துவீச்சை மைதானத்தின் அனைத்து பகுதிகளுக்கும் பவுண்டரிகளாக விளாசினர். ஷபாலி வர்மா 113 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 15 பவுண்டரிகளுடனும், ஸ்மிருதி மந்தனா 122 பந்துகளில், 19 பவுண்டரிகளுடனும் சதம் விளாசினர்.

ஸ்மிருதி மந்தனா 161 பந்துகளில், ஒரு சிக்ஸர், 27 பவுண்டரிகளுடன் 149 ரன்கள் எடுத்த நிலையில் டெல்மி டக்கர் பந்தில் ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு அவர், ஷபாலி வர்மாவுடன் இணைந்து 292 ரன்கள் குவித்தார். இதன் மூலம் மகளிர் டெஸ்ட் போட்டியில் முதல் விக்கெட்டுக்கு அதிக ரன்கள் சேர்த்த ஜோடி என்ற சாதனையை நிகழ்த்தியது மந்தனா, ஷபாலி ஜோடி. இதற்கு முன்னர் 2004-ம் ஆண்டு மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான கராச்சி டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் மகளிர் அணியின் கிரன் பலூச், சஜிதா ஷா ஜோடி 241 ரன்கள் சேர்த்ததே சாதனையாக இருந்தது.

இதையடுத்து களமிறங்கிய சதீஷ் சுபா 15 ரன்களில் டி கிளெர்க் பந்தில் வெளியேறினார். தொடர்ந்து களம் புகுந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் நிதானமாக பேட் செய்ய, அதிரடியாக விளையாடிய ஷபாலி வர்மா 194 பந்துகளில், 8 சிக்ஸர்கள், 22 பவுண்டரிகளுடன் இரட்டை சதம் விளாசினார். இதன் மூலம் குறைந்த பந்துகளில் இரட்டை சதம் விளாசிய வீராங்கனை என்ற சாதனையை அவர், படைத்தார்.

இதற்கு முன்னர் கடந்த பிப்ரவரி மாதம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவின் அனாபெல் சுதர்லேண்ட் 248 பந்துகளில் இரட்டை சதம் விளாசியதே சாதனையாக இருந்தது. மட்டையை சுழற்றிய ஷபாலி வர்மா 197 பந்துகளில், 8 சிக்ஸர்கள், 23 பவுண்டரிகளுடன் 205 ரன்கள் எடுத்தநிலையில் ரன் அவுட் ஆனார். இரட்டை சதம் விளாசிசாதனை படைத்த ஷபாலி வர்மா, டெஸ்ட் வரலாற்றில் ஒர் இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் விளாசிய வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

ஜெமிமா ரோட்ரிக்ஸ் 55 ரன்கள் எடுத்த நிலையில் டெல்மி டக்கர் பந்தில் ஆட்டமிழந்தார். முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் இந்திய மகளிர் அணி98 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 525 ரன்கள்குவித்தது. கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 42, ரிச்சா கோஷ்43 ரன்களுடன் களத்தில் இருந்தனர். 525 ரன்கள் குவித்ததன் மூலம் மகளிர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதலில் நாள் அதிக ரன்கள் வேட்டையாடிய அணி என்ற சாதனையை படைத்துள்ளது இந்திய மகளிர் அணி. இதற்கு முன்னர் 1935-ம் ஆண்டு கிறைஸ்ட்சர்ச் நகரில் நியூஸிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி முதல் நாள் ஆட்டத்தில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 431 ரன்கள் குவித்திருந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x