Published : 26 May 2018 08:18 AM
Last Updated : 26 May 2018 08:18 AM
1970
-ம் ஆண்டு நடைபெற்ற 9-வது உலகக் கோப்பை கால்பந்து தொடரை மெக்ஸிகோ நடத்தியது.
. பிரேசில், இத்தாலி, மேற்கு ஜெர்மனி, உருகுவே ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி யால் 8-வது இடத்தையே பிடிக்க முடிந்தது.
அரையிறுதியில் உருகுவே அணியை 3-1 என்ற என்ற கணக்கில் தோற்கடித்த பிரேசில், இறுதி ஆட்டத்தில் 4-1 என்ற கோல் கணக்கில் இத்தாலியை வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதன் மூலம் உலகக் கோப்பை கால்பந்து சாம்பியன் பட்டத்தை 3 முறை வென்ற முதல் அணி என்ற பெருமையை பிரேசில் பெற்றது. இந்தத் தொடரில் பிரேசில் அணியின் ஜெய்ர்ஜின்கோ 7 கோல்களையும், பீலே 4 கோல்களையும் அடித்து அணியின் வெற்றிகளில் முக்கிய பங்கு வகித்தனர். அதேவேளையில் அணி வீரராகவும் பயிற்சியாளராகவும் கோப்பையை வென்றவர் என்ற சிறப்பைப் பெற்றார் மரியோ.
1966-ல் சாம்பியன் பட்டம் வென்ற இங்கிலாந்து அணி நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் அதீத பலத்துடன் இந்த உலகக் கோப்பையில் களமிறங்கியது. இந்தப் போட்டிக்கு தயாராவதற்காக அந்த அணி கொலம்பியா மற்றும் ஈக்வேடார் அணிக்கு எதிராக நட்புரீதியிலான ஆட்டத்தில் விளையாட திட்டமிட்டது. இதற்காக கொலம்பியாவின் போகோடா நகரில் உள்ள ஓட்டலில் இங்கிலாந்து வீரர்கள் தங்கியிருந்தனர்.
கொலம்பியா அணிக்கு எதிரான ஆட்டத்துக்கு முன்னதாக இங்கிலாந்து அணியின் கேப்டன் பாபி மூரே, சக அணி வீரரான சார்ல்டனுடன் இணைந்து ஓட்டலுக்கு அருகே உள்ள நகைக் கடைக்கு சென்றனர். இவரும் அங்கு சிறிது நேரத்தை செலவிட்ட நிலையில் எதுவும் வாங்காமலேயே அங்கிருந்து திரும்பி வந்தனர். இதன் பின்னர்தான் வினை ஆரம்பித்தது. காட்சிப் படுத்தப்பட்ட பெட்டகத்தில் இருந்து பாபி மூரே, பிரேஸ்லெட்டை (தங்கச்சங்கிலி ) திருடி விட்டதாக நகைக்கடை உதவியாளர் பகிரங்க புகாரை கூறினார்.
இதைத் தொடர்ந்து பாபி மூரே, சார்ல்டனிடம் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தினர், எனினும் அவர்களை அப்போதைக்கு விடுவித்தனர். கொலம்பியா, ஈக்வேடார் அணிகளுக்கு எதிராக ஆட்டத்தை முடித்துக் கொண்டு இங்கிலாந்து அணி அதே ஓட்டலில் தங்கியது. அப்போதுதான் திருட்டு வழக்கில் பாபி மூரே கைது செய்யப்பட்டார். 4 நாட்கள் அவர், ஓட்டலுக்குள்ளேயே சிறை வைக்கப்பட்டார். இதனால் இங்கிலாந்து கேப்டன் இல்லாமல் உலகக் கோப்பைத் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து அணி மெக்ஸிகோ புறப்பட்டு சென்றது.
விசாரணை தொடர்ந்து நடைபெற்ற நிலையில் எந்தவித ஆதாரமும் இல்லாததால் பாபி மூரே விடுவிக்கப்பட்டார். இதனால் பாபி மூரே மெக்ஸிகோவில் தனது அணியினருடன் இணைந்தார். ஆனால் உத்வேகம் சீர்குலைந்த இங்கிலாந்து அணியால் கால் இறுதி சுற்றைக்கூட தாண்ட முடியாமல் போனது. ஆனால் வலுவான இங்கிலாந்து அணியின் நம்பிக்கையை சிதைக்கும் சதிச் செயலாகவே தங்கச்சங்கிலி திருட்டு விவகாரம் எழுப்பப்பட்டதாக இங்கிலாந்து ரசிகர்கள் குற்றம் சாட்டினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT