Published : 28 Jun 2024 02:25 PM
Last Updated : 28 Jun 2024 02:25 PM

விராட் கோலிக்கு கேப்டன் ரோகித், பயிற்சியாளர் திராவிட் ஆதரவு | T20 WC

அரையிறுதியில் ஆட்டமிழந்த கோலி

கயானா: நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி, மோசமான ஃபார்மினால் ரன் சேர்க்க முடியாமல் தடுமாறி வருகிறார். அவரை ரசிகர்கள், கிரிக்கெட் வல்லுநர்கள் என பலரும் விமர்சித்து வருகின்றனர்.

இந்த சூழலில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் தலைமை பயிற்சியாளர் ராகுல் திராவிட் ஆகியோர் அவரை ஆதரித்துள்ளனர். இந்த தொடரில் 1, 4, 0, 24, 37, 0, 9 என மொத்தம் 7 இன்னிங்ஸ் ஆடி 75 ரன்கள் மட்டுமே கோலி எடுத்துள்ளார். இதில் அவர் தொடக்க ஆட்டக்காரராக பேட் செய்து வருகிறார். இந்த தொடருக்கு முன்னதாக நடைபெற்ற ஐபிஎல் சீசனில் 741 ரன்களை அவர் எடுத்திருந்தார்.

விராட் கோலியின் ஆட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ராகுல் திராவிட், “அனைவரும் கோலியின் ஆட்டம் குறித்து அறிவோம். இப்போது ஹை-ரிஸ்க் பிராண்ட் ஆப் கிரிக்கெட்டை நாங்கள் அணுகி வருகிறோம். சில நேரங்களில் இதில் நாம் எதிர்பார்த்தபடி ரன் குவிக்க முடியாமல் போகலாம். அரையிறுதி ஆட்டத்தில் கூட அவர் அபார சிக்ஸரை விளாசினார். ஆட்டத்தில் டெம்போ செட் செய்தார். துரதிருஷ்டவசமாக பந்து சீம் ஆன காரணத்தால் ஆட்டமிழந்தார். ஆனால், அவர் ஆட்டத்தில் வெளிப்படுத்தும் இன்டென்ட் அபாரம். அவரிடமிருந்து ஒரு பெரிய இன்னிங்ஸ் வரும் என நினைக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

இதேபோல் கேப்டன் ரோகித் சர்மா, “விராட் கோலி தரமான வீரர். அனைவரும் இது மாதிரியான சூழலை கடக்கலாம். பெரிய போட்டிகளில் அவரது முக்கியத்துவத்தை நாம் உணர வேண்டும். அதனை நாங்கள் நன்கு அறிவோம். 15 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடி வருபவருக்கு ஃபார்ம் ஒரு பிரச்சினை இல்லை. அவரிடம் இன்டென்ட் உள்ளது. இறுதிப் போட்டியில் அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என எண்ணுகிறேன்” என தெரிவித்துள்ளார்.

இந்திய அணி நாளை (சனிக்கிழமை) தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக இறுதிப் போட்டியில் விளையாட உள்ளது. இரு அணிகளும் இந்த தொடரில் இதுவரை தோல்வியை தழுவவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x