Published : 28 Jun 2024 09:20 AM
Last Updated : 28 Jun 2024 09:20 AM
கயானா: நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை 68 ரன்களில் வென்றுள்ளது இந்தியா. இந்நிலையில், இந்த போட்டிக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்தது.
“இந்த வெற்றி எங்களுக்கு மன நிறைவை தருகிறது. இதற்காக நாங்கள் அணியாக இணைந்து கடும் உழைப்பை செலுத்தினோம். இதில் அனைவரின் பங்கும் உள்ளது. இந்த தொடர் முழுவதும் நாங்கள் கள சூழலுக்கு ஏற்ப ஆடி வருகிறோம். நானும், சூர்யகுமார் யாதவும் அமைத்த பார்ட்னர்ஷிப் எங்களுக்கு முக்கியமானதாக அமைந்தது.
இந்த டார்கெட்டை எதிரணிக்கு கொடுத்தால் சிறப்பாக இருக்கும் நான் எண்ணுவது உண்டு. ஆனால், அது குறித்து எங்கள் பேட்ஸ்மேன்களிடம் எதுவும் சொல்ல மாட்டேன். அதன் மூலம் அவர்களுக்கு வேண்டாத அழுத்தம் கொடுக்க நான் விரும்பவில்லை. இந்தப் போட்டியில் 170 ரன்கள் எடுத்தால் சரியாக இருக்கும் என நினைத்தேன். அது நடந்தது. அதன் பிறகு அணியின் பந்து வீச்சாளர்கள் அட்டகாசமாக செயல்பட்டனர்.
அக்சர் மற்றும் குல்தீப் என இருவரும் சிறப்பாக பந்து வீசி இருந்தனர். அவர்கள் மீதும் ஆட்டத்தில் அழுத்தம் இருந்தது. ஆனால், அதனை அமைதியாக இருந்தபடி தங்களது ஆட்டத்திறனை வெளிப்படுத்தினர். கோலி தரமான வீரர். 15 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடி வருபவருக்கு ஃபார்ம் ஒரு சிக்கலே இல்லை. அவரிடம் இன்டென்ட் உள்ளது. அவரது தேர்ந்த ஆட்டம் இறுதிப் போட்டியில் வெளிப்படும் என நினைக்கிறேன்.
டி20 ஆட்டத்தில் பதட்டம் கூடாது. இறுதிப் போட்டியில் சிறப்பாக விளையாட வேண்டும். இதை தான் இந்த தொடர் முழுவதும் நாங்கள் செய்து வருகிறோம். எங்களால் முடிந்தவரை முயற்சிப்போம்” என ரோகித் தெரிவித்தார். இந்த தொடரில் 7 போட்டிகளில் விளையாடி அனைத்திலும் வெற்றி பெற்றுள்ளது இந்தியா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...