Published : 28 Jun 2024 08:48 AM
Last Updated : 28 Jun 2024 08:48 AM
சர்வதேச கிரிக்கெட் அரங்கில் தவிர்க்கமுடியாத டக்வொர்த் லீவிஸ் முறையை கண்டுபிடித்தவர்களில் ஒருவரான பிராங்க் டக்வொர்த் தனது 84 வயதில் கடந்த 25-ம் தேதி காலமானார்.
மழை போன்ற வானிலை காரணங்களால் ஒருநாள் கிரிக்கெட், டி 20போட்டி பாதிக்கப்பட்டால் இலக்கை கணக்கீடு செய்து மாற்றி அமைப்பதற்கும், ஆட்டத்தின் முடிவை காண்பதற்கும் ‘டக்வொர்த் லீவிஸ்’ விதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த விதியை இங்கிலாந்தை சேர்ந்த புள்ளியியல் நிபுணர்களான பிராங்க் டக்வொர்த், டோனி லீவிஸ் ஆகியோர் இணைந்து கண்டுபிடித்தனர். இவர்கள் உருவாக்கிய டக்வொர்த் லீவிஸ் பார்முலாவை 1999-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டது.
டக்வொர்த் கடந்த 1992-ம் ஆண்டில் லண்டனில் நடைபெற்ற ராயல் புள்ளியியல் கழகத்தின் மாநாட்டில் மோசமான வானிலையில் ஒரு நியாயமான முடிவு என்ற ஒரு சிறிய ஆய்வறிக்கையை அறிமுகப்படுத்தினார். இதை மையமாக கொண்டுதான் பிராங்க் டக்வொர்த், டோனி லீவிஸ் ஆகியோர் டக்வொர்த்-லீவிஸ் விதியை கொண்டு வந்தனர். இதற்குகாரணம் 1992-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான போட்டியின் பாரபட்சமான முடிவுதான்.
அந்த தொடரில் சிட்னியில் நடைபெற்ற இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா இடையிலான அரையிறுதிப் போட்டியின் போது,மழை குறுக்கிட்டதால் ‘எம்பிஓ’ (MostProductive Overs) விதி பயன்படுத்தப்பட்டு முடிவு காணப்பட்டது. இதில் சாத்தியம் இல்லாத வகையில் தென் ஆப்பிரிக்க அணி ஒரு பந்தில் 22 ரன்கள் எடுக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டதால் அந்த அணி தோல்வி அடைந்து பரிதாபமாக வெளியேறியது. இது பெரும் சர்ச்சையானது. இந்த நிகழ்வால் ஈர்க்கப்பட்டு பிராங்க் டக்வொர்த், டோனி லீவிஸ் ஆகியோர் இணைந்து கண்டறிந்ததுதான் டக்வொர்த் - லீவிஸ் முறை.
1999-ம் ஆண்டு இங்கிலாந்து - ஜிம்பாப்வே அணிகள் இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் 2-வது ஆட்டத்தில் முதன்முறையாக டக்வொர்த் - லீவிஸ் விதி பயன்படுத்தப்பட்டது. அன்று முதல் சர்வதேச கிரிக்கெட்டில் வெள்ளை பந்து போட்டிகளில் (ஒருநாள், டி 20) மழை குறுக்கிட்டால் டக்வொர்த்-லீவிஸ் விதிமுறை பயன்பாடு என்பது இன்றியமையாததாக மாறியது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் 2014-ம் ஆண்டு வரை பிராங்க் டக்வொர்த், புள்ளிவிவர ஆலோசகராக பணியாற்றினார். விளையாட்டுக்கு அவர் செய்த சேவைகளுக்காக 2010-ம்ஆண்டில் ‘ஆர்டர் ஆஃப் தி பிரிட்டிஷ் எம்பயர் (எம்.பி.இ) உறுப்பினர்’ என்ற கவுரவம் வழங்கப்பட்டது.
பிராங்க் டக்வொர்த் ஓய்வுக்கு பின்னர்டக்வொர்த்-லீவிஸ் விதியில் ஆஸ்திரேலிய புள்ளியியல் நிபுணர் ஸ்டீவன் ஸ்டெர்ன் சிறிய மாற்றங்களை கொண்டுவந்தார். இதனால் இந்த விதி ‘டக்வொர்த்-லீவிஸ்-ஸ்டெர்ன் (DLS)’ என மாற்றப்பட்டது. பிராங்க் டக்வொர்த்தின் மறைவுக்கு கிரிக்கெட் உலகை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்திருந்தனர்.
ஐசிசி கிரிக்கெட் செயல்பாடுகளின் பொது மேலாளர் வாசிம் கான் விடுத்துள்ள அறிக்கையில், “பிராங்க் டக்வொர்த் ஒரு சிறந்த புள்ளிவிவர நிபுணராக இருந்தார். அவரும், அவருடைய சகாக்களும் கிரிக்கெட் சகோதரத்துவத்தால் மதிக்கப்பட்டனர். அவர் இணைந்து உருவாக்கிய டிஎல்எஸ் முறை காலத்தின் சோதனையாக நிற்கிறது. இதை இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக சர்வதேச கிரிக்கெட்டில் நாங்கள் தொடர்ந்து பயன்படுத்துகிறோம். விளையாட்டில் பிராங்கின் பங்களிப்பு மகத்தானது, அவரது மரணத்தால் கிரிக்கெட் உலகம் சோகத்தில் உள்ளது. அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எங்கள் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT