Published : 27 Jun 2024 06:18 PM
Last Updated : 27 Jun 2024 06:18 PM

இந்தியா - இங்கிலாந்து அரையிறுதி ஆட்டத்தில் மழை அச்சுறுத்தல்: முடிவுகள் யாருக்கு சாதகம்? | T20 WC

கயானா: ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இன்று இரவு 8 மணிக்கு மேற்கு இந்தியத் தீவுகளில் உள்ள கயானாவில் நடைபெறும் 2-வது அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி, நடப்பு சாம்பியனான இங்கிலாந்துடன் மோதுகிறது.

போட்டியில் யார் வெல்வார்கள் என்ற எதிர்பார்ப்பை தாண்டி, மழையால் போட்டி ரத்தாகிவிடுமோ என்ற பேச்சுக்கள் தற்போது எழுந்துள்ளன. போட்டி நடைபெறும் கயானா சர்வதேச மைதானம் ஜார்ஜ்டவுனின் புறநகர் பகுதியில் டெமராரா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. கயானாவில் கடந்த சில நாட்களாவே மழைபெய்து வருகிறது. நேற்று இந்திய அணி வீரர்களின் பயிற்சி மழையால் ரத்தானது குறிப்பிடத்தக்கது.

இன்றும் 90 சதவீத மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனால், போட்டி ரத்தாக அதிக வாய்ப்புள்ளது. அப்படி ஒருவேளை ரத்தானால் சூப்பர் 8 சுற்றில் குரூப் 1-ல் முதலிடம் பிடித்தற்காக இந்திய அணி நேரடியாக பைனலுக்கு செல்லும் வாய்ப்புகள் உள்ளன.

ரிசர்வ் டே இல்லை ஏன்? - பொதுவாக உலகக் கோப்பை தொடர்களில் நாக் அவுட் போட்டிகளுக்கு மட்டும் மழையின் தாக்கத்தை தவிர்க்க ஐசிசி ரிசர்வ் நாளை அறிவிப்பது வழக்கம். அதன்படி, தென் ஆபிரிக்கா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய முதல் அரையிறுதிக்கு ரிசர்வ் நாள் அறிவிக்கப்பட்டிருந்தது. அதேவேளையில், இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் 2வது அரையிறுதிக்கு ரிசர்வ் நாள் ஒதுக்கவில்லை.

காரணம், தென் ஆப்பிரிக்கா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய போட்டி இந்திய நேரப்படி ஜூன் 27 நாளை காலை 6:00 மணிக்கு நடந்தது. ஆனால் வெஸ்ட் இண்டீஸ் நேரப்படி ஜூன் 26 இரவு 8 மணிக்கு நடந்தது. எனவே வெஸ்ட் இண்டீஸ் நேரப்படி இரவில் இந்த போட்டி நடந்த காரணத்தினால் அடுத்த நாள் ரிசர்வ் டேவாக இந்த போட்டிக்கு கொடுக்கப்பட்டது.

அதுவே இந்தியா விளையாடும் இரண்டாவது அரையிறுதி போட்டி இந்திய நேரப்படி இன்று (ஜூன் 27) இரவு 8 மணிக்கு துவங்குகிறது. அதே சமயத்தில் இது வெஸ்ட் இண்டீஸ் நேரப்படி ஜூன் 27ம் தேதி காலை 10:30 மணி. எனவே இந்தப் போட்டி காலையில் நடைபெறுவதால் ரிசர்வ் டேவாக அடுத்த நாள் கிடையாது. ஏனென்றால், ஜூன் 28-ம் தேதி அரையிறுதியில் வெற்றி பெறும் இரு அணிகளும் இறுதிப்போட்டி நடைபெறும் பார்படாஸ் நகருக்கு பயணிக்க வேண்டி இருக்கும்.

எனவே, முந்தையநாள் போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் திட்டமிட்ட நிகழ்வுகள் நடைபெறாது என்பதால் ரிசர்வ் நாள் அறிவிக்கப்படவில்லை. எனினும், இந்தியா - இங்கிலாந்து இடையிலான போட்டிக்கு வழக்கமான நேரத்தை தாண்டி கூடுதலாக 250 நிமிடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், முடிந்தளவுக்கு தலா 5 ஓவர்கள் கொண்ட போட்டியை நடுவர்கள் நடத்த முயற்சிப்பார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x