Published : 27 Jun 2024 01:46 PM
Last Updated : 27 Jun 2024 01:46 PM
டிரினிடாட்: நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் தோல்வியை தழுவியது ஆப்கானிஸ்தான் அணி. இதன் பிறகு அந்த அணியின் கேப்டன் ரஷித் கான், தொடர் குறித்து பேசியிருந்தார்.
“அணியாக எங்களுக்கு இது கடினமான தருணம். நாங்கள் அரையிறுதியில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்க வேண்டும். ஆனால், கள சூழல் நாங்கள் செய்ய எண்ணியதை செயல்படுத்த அனுமதிக்க வில்லை. இதுதான் டி20 கிரிக்கெட். அனைத்து சவால்களுக்கும் தயாராக இருக்க வேண்டும்.
தென் ஆப்பிரிக்கா சிறப்பாக பந்து வீசியது. அரையிறுதியில் தென் ஆப்பிரிக்கா மாதிரியான பெரிய அணியுடன் நாங்கள் தோல்வி அடைந்ததை ஏற்றுக் கொள்கிறோம். எங்கள் அணிக்கு இந்த தொடர் சக்சஸ் அளித்தது என்றே நான் சொல்வேன். அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் சிறந்த தொடக்கத்தை கொடுத்தனர். அது அடுத்து வரும் சுழற்பந்து வீச்சாளர்களின் பணியை எளிதாக்கியது.
இந்த தொடரை நாங்கள் அனுபவித்து விளையாடினோம். இது எங்களுக்கு தொடக்கம் மட்டுமே. எங்களால் எந்த அணியையும் வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. இந்த தொடர் எங்களுக்கு சிறந்த கற்றல் அனுபவத்தை வழங்கியுள்ளது. இனி இந்த செயல்முறையை அடுத்த கட்டத்துக்கு நாங்கள் கொண்டு செல்ல வேண்டும்.
எங்களிடம் ஆட்டத்திறன் உள்ளது என்பதை நாங்கள் அறிவோம். கடினமான மற்றும் அழுத்தமான சூழலை நாங்கள் எப்படி கையாள்கிறோம் என்பதில் கவனம் வைக்க வேண்டும். எங்கள் அணியின் மிடில் ஆர்டரை வலுப்படுத்த வேண்டி உள்ளது. அதற்காக கடினமாக உழைத்து நிச்சயம் நாங்கள் கம்பேக் கொடுப்போம்” என அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT