Published : 27 Jun 2024 11:41 AM
Last Updated : 27 Jun 2024 11:41 AM

ரொனால்டோவுக்கு அதிர்ச்சி அளித்த கவாரட்ஸ்ஹேலியா: வரலாறு படைத்த ஜார்ஜியா | Euro Cup

ஜார்ஜியா வீரர் கவாரட்ஸ்ஹேலியா

ஜெர்மனியின் கெல்சென்கிர்ச்சனில் நடைபெற்ற யூரோ கோப்பை கால்பந்து தொடரில் ‘குரூப் - எஃப்’ போட்டி ஒன்றில் போர்ச்சுகல் அணியை ஜார்ஜியா 2-0 என்று வீழ்த்தி, தொடரின் மிகப்பெரிய அதிர்ச்சி வெற்றியைப் பெற்று ‘ரவுண்ட் ஆஃப் 16’ சுற்றுக்கு முன்னேறி வரலாறு படைத்தது.

இதில் சுவாரஸ்யம் என்னவெனில் ஜார்ஜியா அணிக்காக முதல் கோலை 2-வது நிமிடத்திலேயே அடித்த கவாரட்ஸ்ஹேலியா, போர்ச்சுகல் நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் கால்பந்தாட்டத்தை வழிபாடு செய்து வளர்ந்த ஒரு கால்பந்து வீரர் என்பதே.

கிறிஸ்டியானோ ரொனால்டோவின் ஜெர்சி எண் 7. ரொனால்டோவை லட்சிய ஆளுமையாகக் கொண்ட கவாரட்ஸ்ஹேலியாவின் ஜெர்சி எண்ணும் 7 தான். போட்டி முடிந்தவுடன் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது சட்டையை கவாரட்ஸ்ஹேலியாவுக்குப் பரிசாக அளித்தார்.

கவாரட்ஸ்ஹேலியாவின் முதல் கோல் போர்ச்சுகலுக்கு அதிர்ச்சியளித்தது. அதோடு 2-0 வெற்றி மூலம் ஜார்ஜியா முதன் முதலாக பெரிய கால்பந்து தொடரின் நாக் அவுட் கட்டத்திற்கு முன்னேறியுள்ளது. அதாவது ஃபிபா ரேங்கிங்கில் 74-வது இடத்தில் இருக்கும் ஜார்ஜியா, 6-ம் இடத்தில் இருக்கும் போர்ச்சுகலை வீழ்த்தி இருப்பது சாதனையாகப் பார்க்கப்படுகிறது.

முதலில் துருக்கியுடன் தோற்றது ஜார்ஜியா. ஆனாலும் தங்களது பிரமாதமான ஆட்டத்தின் மூலமும், நகர்வுகளின் மூலமும் ரசிகர்களின் இதயங்களை வென்றனர். இரண்டாவது போட்டியில் செக்கியா அணியுடன் இதே போல் பிரமாதமாக ஆடி டிரா செய்தனர்.

ரொனால்டோவை ஹீரோவாக வழிபடும் கவாரட்ஸ்ஹேலியாவிடம் பந்து வரும்போதெல்லாம் ரசிகர்களிடம் ஒரு எதிர்பார்ப்பு. நிச்சயம் ஏதாவது செய்வார் என்ற எதிர்பார்ப்பு. போர்ச்சுகலுக்கு எதிரான இந்தப் போட்டியில் 92-வது விநாடியில் கோல் அடித்தார் கவாரட்ஸ்ஹேலியா. ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டியில் ஆட்டம் தொடங்கி இவ்வளவு விரைவில் போர்ச்சுகல் அணி கோல் வாங்கியதில்லை என்கிறது புள்ளி விவரம்.

கிறிஸ்டியானோ ரொனால்டோவின் சாதனையையும் அவரது ஆட்டத்தையும் பார்க்க வந்த ரசிகர்கள் கடைசியில் ரொனால்டோவின் சிஷ்யனின் பிரமாத ஆட்டத்தை ரசித்து விட்டுச் சென்றனர். ரொனால்டோ ஒரு கோல் அடித்திருந்தால் 39 வயதில் கோல் அடித்த யூரோ சாதனையையும் நிகழ்த்தியிருப்பார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அது நடக்கவில்லை. யூரோ கோப்பைத் தொடர்களில் 14 கோல்களுடன் முதலிடம் வகிக்கும் ரொனால்டோ, கோல்களை அடிக்க அசிஸ்ட் செய்த வகையில் 8 முறை அசிஸ்ட் செய்து அந்தச் சாதனையையும் வைத்துள்ளார்.

எப்படி கிரிக்கெட்டில் ஆப்கன் அணி டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் நுழைந்தது ஆப்கன் ரசிகர்களுக்கு ஒரு சிறந்த தினம் என்று ரஷித் கான் கூறினாரோ அதே போல் போர்ச்சுகலை வீழ்த்தி நாக் அவுட் சுற்றுக்குள் நுழைந்த ஜார்ஜியா அணியின் வீரர் கவாரட்ஸ்ஹேலியா கூறும்போது, “ஜார்ஜிய நாட்டு கால்பந்து வீரர்களுக்கு இன்று பொன்னான நாள். நாங்கள் வரலாறு படைத்திருக்கிறோம். போர்ச்சுகலை வீழ்த்துவோம் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

நாங்கள் வலுவான அணி. 1% வாய்ப்பு இருந்தாலும் அதை முழுமையாகப் பயன்படுத்துவோம். ஆட்டத்திற்கு முன் என் தலைவன் ரொனால்டோவைச் சந்தித்தேன். அவர் என்னை வாழ்த்தினார். என்னிடம் வந்து அவர் பேசுவார் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. அவர் ஒரு கிரேட் பிளேயர். அதை விட நல்ல மனிதர். அவர் என் ஹீரோ. அவர் மீது நான் நிரம்ப மரியாதை வைத்திருக்கிறேன். அவர் எவ்வளவு பெரிய வீரர், மேட்சுக்கு முன் வந்து என்னிடம் பேசுகிறார் என்றால் அவர் எவ்வளவு எளிமையானவர் என்பது புரியும்.

இது தனிநபருக்கான வெற்றி அல்ல. இது ஒரு கூட்டு முயற்சி. நாங்களும் ஆடக்கூடியவர்கள் என்பதை இன்று நிரூபித்தோம்” என்றார் ஆட்ட நாயகனும் ரொனால்டோவை வழிபடுபவருமான கவாரட்ஸ்ஹேலி.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x