Published : 27 Jun 2024 09:31 AM
Last Updated : 27 Jun 2024 09:31 AM

‘குருவி தலையில் பனங்காய்’ பிட்ச் - ஆப்கன் இதயத்தை நொறுக்கிய ஐசிசி | T20 WC 2024

ரஷித் கான் மற்றும் ஆப்கன் வீரர்கள்

தருவ்பாவில் இன்று நடைபெற்ற டி20 உலகக் கோப்பை அரையிறுதிக்கு கிரீன் டாப் பிட்ச் அனுபவமற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு அப்படிப்பட்ட ஒரு பவுலிங் பிட்சைப்போட்டு ஐசிசி அந்த அணியைக் காலி செய்துள்ளது என்றுதான் கூற வேண்டியுள்ளது. மொத்தப் போட்டியுமே 20 ஒவர்கள்தான் தாங்கியது.

ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் போன்ற டாப் அணிகள் தகுதி பெறாமல் போன நிலையில் ஆப்கானிஸ்தான் அணி நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா, வங்கதேச அணிகளை கடினமாக ஆடி வீழ்த்தி அரையிறுதிக்கு வந்துள்ளனர். பெரும்பாலும் இந்தியப் பிட்ச்களில் அதுவும் இந்தியாவில் அவர்கள் ஆடும் பிட்ச்களின் தன்மை நம் எல்லோருக்கும் தெரிந்ததே, இப்படிப்பட்ட அணிக்கு ஒரு டெஸ்ட் மேட்ச் ரக வேகப்பந்து வீச்சு சாதக கிரீன் டாப் பிட்சைப் போடலாமா என்பதுதான் நம் தார்மீகக் கேள்வி.

இதில் 2 விஷயங்கள் உள்ளன. ஒன்று இந்த டி20 உலகக் கோப்பைத் தொடரே பெரும்பாலும் குறைவான ஸ்கோர்களுக்கான தொடராக இருந்தபடியால் அரையிறுதிக்கு ஒரு சம வாய்ப்பு அளிக்கும் பிட்ச் ஆகப் போட வேண்டாமா? 2-வதாக ஒரு அரையிறுதிப் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களுமே 20 ஓவர்களில் முடியுமாறு ஒரு போட்டியை நடத்தலாமா என்பதுதான் நம் கேள்வி.

போட்டியைப் பார்த்த நமக்கு உதித்த இதே கேள்விதான் ரிக்கி பாண்டிங்கிற்கும் உதித்துள்ளது, அவர் வர்ணனையின் போதே, “அரையிறுதிப் போட்டியை புத்தம் புதிய பிட்ச்சில் நடத்துவது எனக்கு விசித்திரமாகத் தெரிகிறது. பிட்ச் எப்படி நடந்து கொள்ளும் என்பது யாருக்குமே தெரியாத ஒன்று. இப்படிப்பட்ட பிட்ச்சையா போடுவது? ஒன்றரை வாரத்தில் இதனை தயார் செய்துள்ளனர்.

பந்துகள் ஸ்விங் ஆனப் போட்டிகளைப் பார்த்தோம். அது பிரச்சினையில்லை. கையாள முடியும். ஆனால், இங்கு பவுன்ஸ் முன்னுக்குப் பின் தாறுமாறாக உள்ளது. எழும்புதலும் தாழ்தலுமாக இருந்தது” என்று சாடினார்.

குறைந்தது 140-150 ரன்களுக்கான பிட்சாகவாவது இருக்க வேண்டாமா? தென் ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர்கள் முதல் 5 ஒவர்களில் ஆப்கானிஸ்தானின் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி முதுகெலும்பை உடைத்து விட்டனர். தென் ஆப்பிரிக்கா இறுதிப் போட்டிக்கு முதன் முதலாக நுழைந்திருப்பது மகிழ்ச்சியளித்தாலும் ஒரு நல்ல போட்டியாக இது ஆடப்பட்டு தென் ஆப்பிரிக்கா கொஞ்சம் சவால்களைச் சந்தித்து இறுதிக்குள் நுழைந்திருந்தால் அது தகுதியுடையதாக இருந்திருக்கும் என்பதுதான்.

பெரும்பாலும் இந்திய பிட்ச் உள்ளிட்ட சூழ்நிலையில் ஆடிப்பழகிய ஆப்கான் வீரர்களுக்கு இந்தப் பிட்ச் ‘சாரி ரொம்ப ஓவர்’ ரகமே. அந்த அணியை மற்ற அணிகள் டெஸ்ட் போட்டிகளுக்கு அழைத்து இத்தகையப் பிட்ச்களைப் போட்டு ஆடப்பழக்கியதில்லை. பாவம் அவர்கள் ஆடுவதெல்லாம் உலகம் நெடுகிலும் டி20 போட்டிகளையே. இப்படியிருக்க குருவித் தலையில் பனங்காயை வைக்குமாறு பிட்சைப் போட்டிருக்கக் கூடாது.

முதலில் பணத்திற்காக யுஎஸ்ஏ-வில் உருப்படாத பிட்ச்களில் போட்டியை நடத்தி பாகிஸ்தானை காலி செய்தது போக, எப்படியோ கஷ்டப்பட்டு முழுத்திறமையையும் உழைப்பையும் போட்டு ஆப்கன் அணி அரையிறுதிக்கு வந்தால் இங்கு எப்படி பந்துகள் வரும் என்று கிரவுண்ட்ஸ்மேனுக்கே தெரியாத பிட்ச்சை அளிக்கிறார்கள். உண்மையில் போட்டியை நடத்தும் ஐசிசி தான் ஆப்கன் அணியின் படுதோல்விக்குப் பொறுப்பேற்க வேண்டும்.

ரஷித் கான் போட்டி முடிந்ததும், இடக்கரடக்கலாக, ‘நாங்கள் இன்னும் கொஞ்சம் நன்றாக ஆடியிருக்கலாம் ஆனால் ‘கண்டிஷன்ஸ்’ எங்களை அதற்கு அனுமதிக்கவில்லை என்று பிட்ச்சை ஒரு சூட்சம விமர்சனம் செய்ததையும் ஐசிசி கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x