Published : 25 Jun 2024 04:21 PM
Last Updated : 25 Jun 2024 04:21 PM

பிரேசிலிடம் பினிஷிங் இல்லை: கோஸ்டாரிகா உடனான ஆட்டம் டிரா | கோபா அமெரிக்கா

பிரேசில் மற்றும் கோஸ்டாரிகா இடையிலான போட்டி

லாஸ் ஏஞ்சலஸில் நடைபெற்ற கோபா அமெரிக்கா கால்பந்து தொடரின் ‘குரூப்-டி’ பிரிவு ஆட்டத்தில் பலம் வாய்ந்ததாகக் கருதப்படும் பிரேசில் அணி கோல் அடிக்கக் கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் தவற விட கோஸ்டாரிகா அணியுடனான போட்டி எத்தரப்புக்கும் வெற்றி, தோல்வி இன்றி 0-0 என சமன் ஆனது.

கோபா அமெரிக்கா போட்டித் தொடருக்கு முன்பாகவும் பிரேசில் கால்பந்தாட்டம் ஆரோக்கியமான ஸ்திதியில் இல்லை. இந்நிலையில், கோஸ்டாரிகா அணிக்கு எதிராக அடித்த 19 ஷாட்களில் 3 ஷாட்கள் மட்டுமே கோலை நோக்கிய இலக்காக இருந்தது. பிரேசிலின் ஆல் டைம் கிரேட் நெய்மர் காயம் காரணமாக ஆடவில்லை.

பிரேசில் வீரர் ரஃபின்யாவுக்கு ஆரம்பத்தில் அருமையான வாய்ப்பு கிடைத்தது. ரோட்ரிகோவிடம் இருந்து வந்த ஒரு லாங் பாஸை ரஃபின்யா கோலாக மாற்ற முடியவில்லை கோஸ்டாரிகா கோல் கீப்பர் பேட்ரிக் செகெய்ரா தடுத்து நிறுத்தினார்.

ஆட்டத்தின் 30-வது நிமிடத்தில் பிரேசிலுக்கு ஃப்ரீ கிக் ஒன்று கிடைத்தது, அதை ரோட்ரிகோ சக வீரர் மார்க்கின்யாஸுக்கு அனுப்பினார். அவரும் அதை கோலாக மாற்றினார். ஆனால், அது ஆஃப் சைடு என்று வீடியோ முறையீடு எழ நீண்ட நேர விஏஆர் சாட்சியத்தின் படி அது ஆஃப் சைடு என்று கோல் மறுக்கப்பட்டது.

பிரேசில் பந்துகளை ஆட்டம் முழுதுமே தன் வசம் வைத்திருந்தது என்னவோ உண்மை. இடைவேளைக்குப் பிறகு 63-வது நிமிடத்தில் லூகாஸ் பக்கெட்டா நீண்ட தூரத்திலிருந்து அடித்த ஷாட்டும் பயனளிக்கவில்லை. இன்னொரு வாய்ப்பு பிரேசிலின் அபார வீரர் கில்ஹெர்மி அரானாவுக்குக் கிடைத்தது. ஆனால், இந்த முறையும் கோஸ்டாரிகா கோல்கீப்பர் செகெய்ரா அபாரமாகத் தடுத்தார்.

ஒரு கோல் கூட விழாத நிலையில் பிரேசில் அணி பயிற்சியாளர் டோரிவால், இரு இளம் வீரர்களான எண்ட்ரிக் மற்றும் சேவியோ ஆகியோரை 70-வது நிமிடத்தில் களமிறக்கினார். கடைசி 10 நிமிடங்களில் பக்கெட்டா இருமுறை கோல் அடிக்கக் கிடைத்த வாய்ப்பை வைடாக அடித்து வீணடித்தார். 9 முறை சாம்பியன்களான பிரேசில் ஒரு கோல் கூட அடிக்க முடியாமல் சோகத்தில் ஆழ்ந்தது.

கோஸ்டாரிகா அணி நல்ல அணியாக இருந்தாலும் உலகக் கோப்பைகளில் 3 முறையும் கோபா அமெரிக்காவில் 2 முறையும் பிரேசிலிடம் தோல்வியே கண்டுள்ளது. ஒரு ஷாட் கூட இந்த ஆட்டத்தில் கோலை நோக்கி அடிக்க முடியவில்லை. மற்றொரு குரூப் டி போட்டியில் கொலம்பியா அணி பராகுவே அணியை 2-1 என்று வீழ்த்தியது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x