Published : 25 Jun 2024 12:14 PM
Last Updated : 25 Jun 2024 12:14 PM

பனாமாவை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது உருகுவே | கோபா அமெரிக்கா தொடர்

மியாமி: கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் ‘சி’ பிரிவில் இடம் பெற்றுள்ள 15 முறை சாம்பியனான உருகுவே அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் பனாமா அணியை எதிர்கொண்டது.

மியாமி கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியை காண்பதற்கு 33,425 ரசிகர்கள் குவிந்திருந்தனர். இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே உருகுவே அணி ஆதிக்கம் செலுத்தியது.

16-வது நிமிடத்தில் அந்த அணி முதல் கோலை அடித்தது. மத்தியாஸ் வினாவிடம் இருந்து பந்து பெற்ற மாக்சிமிலியானோ அராஜோ பாக்ஸின் வெளியே இருந்து இடது காலால் உதைத்த பந்த கோல் வலையின் வலதுபுற மேல்பக்கத்தை துளைத்தது. இதனால் உருகுவே 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

19-வது நிமிடத்தில் உருகுவே அணியின் ஜியார்ஜியன் டி அர்ராஸ்கேட்டா, பாக்ஸின் மையப்பகுதியில் இருந்து தலையால் முட்டிய பந்து கோல் வலையின் இடது புறம் கோல்கீப்பரால் தடுக்கப்பட்டது. அடுத்த நொடியில் டார்வின் நூனெஸ் உதவியுடன் பந்தை பெற்ற மாக்சிமிலியானோ அராஜோ இலக்கை நோக்கி அடித்த ஷாட் கோல் கம்பத்தின் மையப்பகுதியில் கோல்கீப்பரால் தடுக்கப்பட்டது.

37-வது நிமிடத்தில் பனாமா வீரர் பூமா ரோட்ரிக்கின் உதவியுடன் பந்தை பெற்ற ஜோஸ் ஃபஜார்டோ பாக்ஸ் பகுதிக்கு வெளியே இருந்து வலுவாக அடித்த பந்து கோல் கம்பத்துக்கு மிக நெருக்கமாக வலதுபுறத்தில் விலகிச் சென்றது. முதல் பாதி ஆட்டத்தில் உருகுவே 1-0 என முன்னிலை வகித்தது.

2-வது பாதி ஆட்டத்தின் தொடக்கத்தில் பனாமா அணி ஆக்ரோஷமாக விளையாடியது. 54, 56, 57, 59, 60 ஆகிய நிமிடங்களில் அந்த அணி பந்தை கோல் கம்பத்தை நோக்கி கொண்டு சென்றது. ஆனால் ஒரு முறை கூட அவற்றை அந்த அணி வீரர்களால் கோலாக மாற்ற முடியவில்லை. 77-வது நிமிடத்தில் பனாமா அணிக்கு ஃப்ரீகிக் வாய்ப்பு கிடைத்தது. இதில் அமிர் முரிலோ இலக்கை நோக்கி அடித்த பந்து கோல் கம்பத்துக்கு மேலாக சென்று ஏமாற்றம் அளித்தது.

85-வது நிமிடத்தில் உருகுவே அணி தனது 2-வது கோலை அடித்தது. நிக்கோலஸ் டி லா குரூஸ் தொலைவில் இருந்து அடித்த கிராஸை மாக்சிமிலியானோ அராஜோ தலையால் முட்டி கோல் வலைக்குள் தள்ள முயன்றார். ஆனால் பனாமா வீரர் முரிலோ குறுக்கிட அவரது தோள்பட்டையில் பந்து பட்டு அருகில் நின்ற டார்வின் நூனெஸ் வசம் சென்றது. அதை அவர், தனது இடது காலால் வலுவாக அடிக்க கோல் வலையின் இடது புறத்தை பந்து துளைத்தது. இதனால் உருகுவே அணி 2-0 என முன்னிலை பெற்றது.

90 நிமிடங்களின் முடிவில் உருகுவே 2-0 என முன்னிலையில் இருந்தது. இதையடுத்து காயங்களுக்கு இழப்பீடாக 5 நிமிடங்கள் வழங்கப்பட்டது. இதன் முதல் நிமிடத்தில் நிக்கோலஸ் டி லா குரூஸ் தலையால் முட்டிய பந்தை மத்தியாஸ் வினா கோல் வலைக்குள் திணித்தார். இதனால் உருகுவே 3-0 என்ற வலுவான முன்னிலையை அடைந்தது. அடுத்த 3 நிமிடங்களில் உருகுவே அணியின் கோல்கீப்பர் செர்ஜியோ ரோசெட்டின் தடுப்பை மீறி பனாமா வீரர் அமிர் முரிலோ கோல் அடித்தார். முடிவில் உருகுவே 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

அமெரிக்கா வெற்றி… ‘சி’ பிரிவில் நடைபெற்ற மற்றொரு லீக் ஆட்டத்தில் போட்டியை நடத்தும் அமெரிக்கா - பொலிவியா அணிகள் மோதின. ஆர்லிங்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அமெரிக்கா 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த தரப்பில் 3-வது நிமிடத்தில் கிறிஸ்டியன் புலிசிக்கும், 44-வது நிமிடத்தில் ஃபோலரின் பலோகனும் கோல் அடித்து அசத்தினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x