Published : 21 Jun 2024 01:22 PM
Last Updated : 21 Jun 2024 01:22 PM

37 வயதானாலும் சிங்கம் சிங்கமே... தன் வரவை அறிவித்த லயோனல் மெஸ்ஸி!

மெஸ்ஸி | கோப்புப்படம்

கோபா அமெரிக்கா என்னும் கால்பந்து தொடர் இன்று அட்லாண்டாவில் தொடங்கியது. இதில் இன்றைய ‘குரூப் - ஏ’ பிரிவு ஆட்டத்தில் நடப்பு உலக சாம்பியன் அர்ஜெண்டினா அணி கனடாவை எதிர்கொண்டு 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றியுடன் தொடங்கியது.

இந்த 2 கோல்களுமே வழக்கம் போல் லியோனல் மெஸ்ஸி இல்லாமல் சாத்தியமாகியிருக்காது. இதன் மூலம் மெஸ்ஸி, தான் இன்னும் செம ஃபார்மில் இருக்கிறேன் என மற்ற அணிகளுக்கு தெளிவான மெசேஜ் அனுப்பியுள்ளார் என்றே கூற வேண்டும்.

ஆட்டத்தின் 49-வது நிமிடத்தில் தான் ஒரு மாஸ்டர் என்பதற்கு இணங்க மிக அருமையான பாஸ் ஒன்றை அலெக்சிஸ் மாக் அலிஸ்டருக்கு பிரமாதமான முறையில் அளிக்க அவர் லேசாக டச் செய்து யூலியன் அல்வரேசுக்கு அனுப்ப அவர் கோலாக மாற்றினார்.

அதன் பிறகு 88-வது நிமிடத்தில் லாத்தரோ மார்ட்டினேஸ் அடித்த கோலுக்கு பெரிய அளவில் ‘அசிஸ்ட்’ செய்தவரும் ‘லயன்’ மெஸ்ஸிதான். 2021 கோபா அமெரிக்கா சாம்பியன்களான அர்ஜெண்டினா பிறகு மெஸ்ஸி தலைமையில் கத்தார் கால்பந்து உலகக் கோப்பையையும் வென்று 3-வது டைட்டில் நோக்கி அபாரமாகத் தொடங்கியுள்ளது.

இந்தப் போட்டியில் லியோனல் மெஸ்ஸி தன் 35-வது கோபா அமெரிக்கா போட்டியை ஆடி சாதனை புரிந்துள்ளார். இவருக்கு முன்பாக செர்ஜியோ லிவிங்ஸ்டன் இதே தொடரில் 34 போட்டிகளில் பங்கேற்று சாதனையை வைத்திருந்தார்.

மேலும், இந்தப் போட்டியில் ஒரு கோலுக்கு அசிஸ்ட் செய்வதன் மூலம் கோபா அமெரிக்கா தொடரில் 18 அசிஸ்டுகள் செய்து கோல் அடிக்கக் காரணமான சாதனையையும் நிகழ்த்தியுள்ளார்.

37 வயதானாலும் சிங்கம் சிங்கமே என்பதை நிரூபித்த மெஸ்ஸி, 49-வது நிமிடத்தில் தலையால் முட்டி ஒரு அற்புதமான பாஸை மாக் அலிஸ்டருக்கு அனுப்ப அதை அவர் பக்கவாட்டு காலினால் அல்வரேசுக்குப் பாஸ் செய்தார். கனடா கோல்கீப்பர் மேக்சிம் கிரெபியு பதற்றத்தில் முன்னோக்கி விரைவு கதியில் சரிந்தபடி வர அல்வாரேசுக்கு விஷயங்கள் எளிதாகின காரணம் கோல் வலையில் யாரும் இல்லை. தனது 8-வது கோலை அடித்தார் அல்வரேஸ்.

பிறகு 88-வது நிமிடத்தில் களத்தின் மையத்தில் தனது மின்னல் வேக கடத்தலினால் பந்தை எடுத்துச் சென்று மார்ட்டினேஸுக்கு பாஸ் செய்ய அவர் தன் 25-வது சர்வதேச கோலை அடிக்க அர்ஜெண்டினா 2-0 என்று முன்னிலை பெற்றது.

மெஸ்ஸியே கோல் அடிக்கும் வாய்ப்பு 65-வது நிமிடத்தில் வந்தது. கனடா கோல்கீப்பர் கிரெப்பியு டைவ் அடித்து சேவ் ஒன்றை செய்ய, அது ரீஃபண்ட் ஆக மெஸ்ஸி கோலை நோக்கி அடிக்க அதனை கனடா டிஃபெண்டர் டெரிக் கார்னீலியஸ் தடுத்தார். 79-வது நிமிடத்திலும் ஒரு மின்னல் வேக நகர்வில் கோல் கீப்பருடன் தனியாகவே இருந்தார் மெஸ்ஸி. ஆனால், அடித்த ஷாட் வைடாகச் சென்றது.

இந்த முதல் வெற்றிக்குப் பிறகு தன் எக்ஸ் வலைத்தளத்தில் மெஸ்ஸி தன் ரசிகர்களுக்கு மெசேஜ் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், ‘primer paso’ என்று ஸ்பானிய மொழியில் பதிவிட்டுள்ளார். அதாவது ‘ஃபர்ஸ்ட் ஸ்டெப்’ என்பது இதன் பொருள்.

ஆனால், அடுத்த போட்டி அர்ஜெண்டினாவுக்கு கொஞ்சம் கடினமே. சிலி அணியை நியூஜெர்சியில் வரும் செவ்வாயன்று சந்திக்கிறது. 2021-ல் சிலியுடனான முதல் போட்டியில் 1-1 என்று டிராதான் செய்ய முடிந்தது அர்ஜெண்டினாவினால் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x