Published : 20 Jun 2024 01:17 PM
Last Updated : 20 Jun 2024 01:17 PM
செயிண்ட் லூசியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 குரூப் 2 ஆட்டத்தில் இங்கிலாந்து எளிதில் வெற்றி பெற்றதற்கு மேற்கு இந்திய தீவுகளின் பேட்டிங் பிரச்சினைதான் காரணம். அதற்காக இங்கிலாந்து அத்தருணங்களில் வீசிய துல்லிய பவுலிங், பட்லரின் கேப்டன்சி சாதுரியத்தை மறுப்பதற்கில்லை.
இந்தத் தொடரின் உண்மையான பேட்டிங் பிட்ச் செயிண்ட் லூசியா பிட்ச்தான். இதைத் துல்லியமாகக் கணித்த பட்லர் முதலில் மேற்கு இந்திய தீவுகளை பேட் செய்ய அழைத்தார். ஆனால் 8 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் அணி 72 ரன்களை விளாசியிருந்தது. பிராண்டன் கிங் 12 பந்துகளில் 3 பவுண்டரி 1 சிக்சருடன் 23 ரன்கள் எடுத்து காயம் காரணமாக ரிட்டையர்ட் ஆனார்.
அந்த நிலையிலிருந்து வெஸ்ட் இண்டீஸை ஆதில் ரஷீத்தும் (4 ஓவர் 1/21), மொயின் அலியும் (2 ஓவர் 15 ரன் ஒரு விக்கெட்) கட்டுப்படுத்தினர். அபாயகர தொடக்க வீரர் ஜான்ஸ்டன் சார்லஸை வீழ்த்தினார் மொயீன் அலி. வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் போவெல் 15வது ஓவரை வீசிய லியாம் லிவிங்ஸ்டன் ஓவரைப் பிரித்து மேய்ந்து விட்டார். 3 மாட்டடி சிக்சர்களையும் ஒரு பவுண்டரியும் இதில் அடங்கும். ஆனால் அதே ஓவரில் சற்றே ஆஃப் ஸ்டம்புக்கு வைடாகச் சென்ற பந்தை ஆடப்போய் அது லீடிங் எட்ஜ் எடுத்து ஷார்ட் தேர்ட்மேனில் மார்க் உட்டிடம் கேட்ச் ஆனது.
12 பந்துகளில் 3 விக்கெட்டுகளை மேற்கு இந்திய தீவுகள் இழந்ததன் தொடக்கம் போவெல் விக்கெட்தான். அதன் பிறகு ஜோஃப்ரா ஆர்ச்சர் அபாய வீரர் நிகலஸ் பூரனுக்கு ஒரு அற்புதமான அதிவேக ஓவரை வீசினார். பூரன் ஒரு டி20 பிளேயர். இவரது அனாயாச மட்டைச் சுழற்றல் ஆர்ச்சரை ஒன்றும் செய்ய முடியவில்லை. அந்த நிலையிலும் விக்கெட் கீப்பரிடம் பூரனை எட்ஜ் செய்ய வைத்தார் ஜோப்ரா ஆர்ச்சர். பிறகு ஆதில் ரஷீத்திடம் இன்னொரு அபாய ஹிட்டர் ஆந்த்ரே ரசல் தன் விக்கெட்டைப் பறிகொடுத்தார்.
143/4 என்ற நிலையில் 3 ஓவர்களே மீதமிருந்தன. நல்ல வேளையாக மே.இ.தீவுகளின் சமகால பினிஷரும் ஆபத்பாந்தவ வீரருமான ஷெர்பானே ருதர்போர்டு மார்க் உட்டை பதம்பார்த்து 15 பந்துகளில் 28 ரன்களை விளாச மே.இ.தீவுகள் 180 ரன்களை எட்டியது. இந்தப் பிட்சில் 20 ரன்கள் குறைவாகும் இது. இங்கிலாந்து வெகு எளிதில் சேஸ் செய்தது.
ஃபில் சால்ட் 47 பந்துகளில் 7 பவுண்டரி 5 சிக்சர்களுடன் 87 ரன்களை விளாச, ஜாஸ் பட்லர் 25 ரன்களிலும், மொயின் அலி 13 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஜானி பேர்ஸ்டோவுக்கு மே.இ.தீவுகளால் வீச முடியவில்லை அவர் 26 பந்துகளில் 48 ரன்களை விளாச 17.3 ஓவர்களில் இங்கிலாந்து வென்றது.
வேண்டாத சாதனை: வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தப் போட்டியில் வேண்டாத சாதனை ஒன்றை நிகழ்த்தியது. அதுதான் தோல்விக்குப் பிரதான காரணமாகும். டி20 உலகக் கோப்பையில் இதுவரை இல்லாத அளவுக்கு தங்கள் பேட்டிங்கின் போது 51 பந்துகளில் ரன் எடுக்காமல் டாட் பால்கள் ஆக்கிய சாதனையை நிகழ்த்தியது. இதற்கு முன் இவர்களேதான் 2016 டி20 உலகக் கோப்பையில் 50 டாட் பால்களை விட்டு சாதனையை வைத்திருந்தனர். இதுதான் இன்றைய தோல்விக்கு முக்கிய காரணம், இந்த 51 டாட் பால்களில் குறைந்தது 20-25 ரன்களை எடுத்திருந்தால் ஸ்கோர் 205 ரன்கள் பக்கம் சென்றிருக்கும், உளவியல் ரீதியாக இது ஒரு சாதகமான அம்சத்தை வழங்கியிருக்கும்.
இந்த 51 டாட்பால்களில் ஜோப்ரா ஆர்ச்சர் மட்டுமே 12 டாட் பால்களை வீசினார். ஆதில் ரஷீத் 10 டாட் பால்களை வீசினார். மார்க் உட் பொதுவாக ரன்களை வாரி வழங்குபவர் அவரே 7 டாட் பால்களை தன் 3 ஓவர்களில் வீசியிருக்கிறார் என்றால் மேற்கு இந்திய தீவுகள் எங்கு போட்டியைக் கோட்டை விட்டது என்பது வெட்ட வெளிச்சமல்லவா?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT