Published : 20 Jun 2024 11:56 AM
Last Updated : 20 Jun 2024 11:56 AM

முதலில் வில்லன், பிறகு ஹீரோ! - அல்பேனியாவின் ஜசூலா அசத்தலில் குரோஷியாவுடன் டிரா | Euro Cup

இரண்டாவது கோல் பதிவு செய்ததை கொண்டும் அல்பேனியா வீரர்கள்

யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று ஹாம்பர்கில் நடைபெற்ற ‘குரூப் - பி’ சுற்றுப் போட்டியில் குரோஷியா, அல்பேனியா அணிகள் 2-2 என்ற கோல் கணக்கில் டிரா செய்தன.

ஆட்டத்தின் 11-வது நிமிடத்தில் அல்பேனியாவின் லாச்சி முதல் கோலை அடித்து முன்னிலை கொடுத்தார். பிறகு ஆட்டத்தின் 74-வது நிமிடத்தில் குரோஷிய வீரர் கிரமாரிக் கோல் அடிக்க 1-1 என்ற கணக்கில் ஆட்டம் சம நிலையை எட்டியது.

ஆனால், அடுத்த 2 நிமிடங்களிலேயே அல்பேனியாவுக்கு அதிர்ச்சிக் காத்திருந்தது. அதாவது ஆட்டத்தின் 76-வது நிமிடத்தில் அல்பேனிய வீரர் கிளவுஸ் ஜசூலா தங்கள் கோல் வலைக்குள்ளேயே தெரியாமல் அடித்து (சுய கோல்) குரோஷியாவுக்கு கோல் பெற்றுத் தர குரோஷியா 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. ஆனால், குரோஷியாவை தன் செல்ஃப் கோலால் முன்னிலை பெற உதவிய அதே அல்பேனிய வீரர் க்ளவுஸ் ஜசூலாவே தான் செய்த தவறுக்கு பிராயச்சித்தம் தேடிக்கொள்ளுமாறு ஆட்டத்தின் 95-வது நிமிடத்தில், ஸ்டாப்பேஜ் நேரத்தில் அபாரமான கோலை அடித்து 2-2 என்று அல்பேனியாவுக்கு சமன் பெற்றுத் தந்தார்.

யூரோ கோப்பைக் கால்பந்து தொடரில் தங்கள் வலைக்குள்ளேயே கோல் அடித்த முதல் பதிலி வீரர் என்ற வேண்டாத பெருமையைப் பெற்றார் அல்பேனியாவின் ஜசூலா. ஆட்டத்தின் 74-வது நிமிடத்தில் குரோஷிய வீரர் கிரமாரிக் குரோஷியாவுக்காக முதல் கோலை அடிக்க, 76-வது நிமிடத்தில் கிளவுஸ் ஜசூலா தங்கள் வலைக்குள்ளேயே அடிக்க குரோஷியா 2-1 என்று முன்னிலை பெற்றது.

ஆட்டம் அதன் 90 நிமிடங்களை முடித்து ஸ்டாப்பேஜ் டைம் ஆட்டம் நடைபெற்றது. அதில் 95-வது நிமிடத்தில் சுய கோல் அடித்த ஜசூலாவே அல்பேனியாவுக்காக ஒரு கோலை அடித்து ஆட்டத்தைச் சமன் செய்து அல்பேனியாவை மீட்டார்.

முந்தையப் போட்டியில் இத்தாலிக்கு எதிராக ஆட்டம் தொடங்கியவுடனேயே அதிவேக கோலை அடித்துச் சாதனை புரிந்த அல்பேனியா நேற்றும் 11-வது நிமிடத்தில் வலது புறத்தில் இருந்து அல்பேனிய வீரர் கிறிஸ்டியன் அஸ்லானி அருமையாக ஒரு பாஸைக் கொடுக்க குவாசிம் லாச்சி அதை அருமையாக பினிஷ் செய்து கோலாக மாற்ற அல்பேனியா 1-0 என்று முன்னிலை பெற்றது.

முதல் பாதியில் அல்பேனியா பிரமாதமான நகர்வுகளை வேகமாக மேற்கொண்டாலும் நல்ல நல்ல வாய்ப்புகளையெல்லாம் நழுவ விட்டது. குரோஷியா இலக்கை நோக்கி ஷாட்களையே அடிக்கவில்லை என்பது இன்னொரு அதிர்ச்சி.

ஆனால், இடைவேளைக்குப் பிறகு இரண்டு கோல்களை அடுத்தடுத்து அடித்தது குரோஷியா. ஆந்த்ரே கிரமாரிக் 74-வது நிமிடத்தில் பிரமாதமாக ஒரு கோலை அடித்து சமன் செய்தார். ஆனால், இதற்கு 2 நிமிடங்கள் சென்ற பிறகுதான் அல்பேனியாவுக்கு அதிர்ச்சி தந்த அந்த கோல் நிகழ்ந்தது. மீண்டும் கிராமரிக் அடித்த கோல் நோக்கிய ஷாட் ஒன்று அல்பேனிய பதிலி வீரர் கிளவுஸ் ஜசூலாவின் காலில் பட்டு கோல் ‘சுய’ கோல் ஆனது. குரோஷியா ஜசூலாவின் உதவியால் 2-1 என்று முன்னிலை பெற்றது.

அல்பேனியாவின் ஜசூலா தவறினால் 2-1 என்று அல்பேனியா தோல்வி முகம் காட்டியது. ஏறக்குறைய தோல்வி உறுதியாகிவிட்ட நிலையில் இரண்டு நெருக்கமான வாய்ப்புகள் இறுதிக்கட்டத்தில் அல்பேனியாவுக்கு வாய்க்கப்பெற்றன. ஆனால், வாய்ப்புகள் கோலாக மாறவில்லை. குரோஷியா தடுப்பணை சுதானமாக இருந்து விட்டனர். 95-வது நிமிடத்தில் அல்பேனியாவின் மரியோ மிடாஜ் பிரமாதமாக ஒரு பந்தை மிட்பீல்டர் ஜசூலாவுக்கு அடிக்க ஜசூலா அதை கோலாக மாற்ற குரோஷியாவின் நெஞ்சம் தகர்ந்தது.

சுய கோல் போட்டு நன்மை பயத்தவரே கடைசியில் சமன் கோலையும் அடிப்பார் என்று குரோஷியாவும் நினைத்துப் பார்த்திருக்காது. அல்பேனியாவும் நினைத்திருக்காது. ஆனால், ஜசூலா தான் செய்த பாவத்திற்கு பிராயச்சித்தத்தை அவரே சமன் கோல் மூலம் தேடிக்கொண்டது யூரோ கோப்பை தொடரில் பேசுபொருளாகியுள்ளது.

இந்த ‘குரூப் - பி’ பிரிவில் ஸ்பெயின் மற்றும் இத்தாலி தலா ஒரு வெற்றியுடன் தலா 3 புள்ளிகளுடன் முறையே முதல் 2 இடங்களில் இருக்க அல்பேனியா 1 புள்ளியுடன் 3-வது இடத்திலும் குரோஷியா 1 புள்ளியுடன் 4-ம் இடத்திலும் உள்ளன. இரு அணிகளும் இறுதி 16 சுற்றுக்கு முன்னேறுவது மிக மிகக் கடினம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x