Published : 19 Jun 2024 03:40 PM
Last Updated : 19 Jun 2024 03:40 PM
பிரிட்ஜ்டவுன்: நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் ‘சூப்பர் 8’ சுற்றுப் போட்டியில் நாளை (ஜூன் 20) ஆப்கானிஸ்தான் அணியுடன் விளையாட உள்ளது இந்தியா. இந்நிலையில், கள சூழலுக்கு ஏற்ப பேட் செய்வது சிறந்த பேட்ஸ்மேனுக்கு அழகு என சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
சூப்பர் 8 சுற்றில் ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளை எதிர்கொள்கிறது இந்தியா. இந்த தொடரில் சிறந்து செயல்பட இந்திய அணி ஆர்வமாக இருப்பதாக கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்திருந்தார். இது தொடரின் இரண்டாவது சுற்றில் அணிக்கு நல்வாய்ப்பாக அமையும் என்ற நம்பிக்கையை அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
பத்திரிகையாளர்களை சந்தித்த சூர்யகுமார் யாதவ்: “தொடர்ந்து இரண்டு ஆண்டு காலம் உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேன் நீங்கள் தான் என்றால் பல்வேறு கள சூழலுக்கு ஏற்ப ஆட வேண்டும். அதன் மூலம் அணிக்கு சாதகமாக ஆட்டத்தை திருப்ப வேண்டும். அதுதான் சிறந்த பேட்ஸ்மேனுக்கு அழகு. அதைத்தான் நான் செய்ய முயற்சிக்கிறேன்.
வேகம் இல்லாத விக்கெட்டில் ஃபோர்ஸாக ஆட முடியாது. அது மாதிரியான சூழலில் ஒருவரது ஆட்டத்தை எளிதில் கணிக்க முடியும். அந்த தருணங்களில் கொஞ்சம் ஸ்மார்ட்டாக ஆட வேண்டும். இன்னிங்ஸை சற்று நீட்டிக்க வேண்டும். அதனால் கள சூழலுக்கு ஏற்ப பேட் செய்ய வேண்டியது அவசியம். எதிரே உள்ள சக வீரருடன் பேசலாம். பதட்டத்தை குறைக்கலாம்.
அமெரிக்க சூழல் சற்று கடினமாக இருந்தது. நாங்கள் அங்கு முதல் முறையாக விளையாடி இருந்தோம். ஆனால், மேற்கு இந்தியத் தீவுகளில் நாங்கள் விளையாடி உள்ளோம். இங்குள்ள ஆடுகள சூழலை நன்கு அறிவோம்” என அவர் தெரிவித்தார். இந்திய அணி வீரர்கள் சூப்பர் 8 சுற்று போட்டிக்காக தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT