Published : 22 May 2018 01:27 PM
Last Updated : 22 May 2018 01:27 PM

தோனிக்குள் உறங்கிய புலியைத் தட்டி எழுப்பிய தினேஷ் கார்த்திக்கின் ‘அந்த’ சிக்ஸ்: சடகோபன் ரமேஷ் கருத்து

நடப்பு ஐபிஎல் போட்டியில் தோனி, கார்த்திக், கேப்டன்சி, பினிஷர் என்ற பேச்சுக்கள் அதிக அளவில் புழங்கி வருகின்றன, மேலும் விராட் கோலி, ரோஹித் சர்மா என்றார்கள் ஆனால் அவர்கள் அணிகள் வெளியே சென்று விட்டது, சற்றும் எதிர்பாராமல் தினேஷ் கார்த்திக் தலைமை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றதோடு 16 புள்ளிகளுடன் தோனி தலைமை சிஎஸ்கேவுக்கு கொஞ்சம் நெருக்கடி கொடுத்தது.

இதோடு மட்டுமல்லாமல் தினேஷ் கார்த்திக் தோனியை ஒப்பிடும் போது நடப்பு ஐபிஎல் போட்டிகளில் சீரான முறையில் பினிஷராக வெற்றிகரமாக ஆடி வருகிறார். தோனியின் பேட்டிங்கும் 2011 தோனியை நினைவூட்டுவது போல் புத்தெழுச்சி பெற்றுள்ளது, ஆனாலும் திடீரென அன்று டெல்லிக்கு எதிராக குறைந்த இலக்கைக் கூட வெல்ல முடியாமல் அவர் ஆட்டமிழந்தார். நடு ஓவர்களில் அவரால் அன்று அவர் விருப்பத்திற்கேற்ப ரன்கள் எடுக்க முடியவில்லை. பிட்ச் சரியில்லை என்றார்.

இந்நிலையில் முன்னாள் இந்திய, தமிழக வீரர் சடகோபன் ரமேஷ் ஆங்கில நாளேடு ஒன்றில் கூறியிருப்பதாவது:

இரு அணிகளும் உண்மையிலேயே நன்றாக ஆடுகின்றன (சென்னை, ஹைதராபாத்). ஆனால் இதில் 2 ஆண்டுகள் கழித்து மீண்டும் வந்து அணியாக ஒன்று திரண்டு சென்னை அணி எழுச்சிபெற்றுள்ளது உண்மையில் பாராட்டுக்குரியதாகும்.

மற்ற அணிகளுக்கு இம்மாதிரி மீண்டும் வந்து ஆடுவது கடினமாக அமைந்திருக்கும் என்றே கருதுகிறேன். இது சாத்தியமானது தோனியின் தலைமைத்துவத்தினால்தான், அதற்காக அவருக்கு எனது பாராட்டுக்கள்.

அதுவும் தோனி இப்போது பேட்டிங் செய்வதைப் பார்க்கும் போது 2011 உலகக்கோப்பையில் ஆடிய, பழைய தோனியின் ஆட்டத்தை மீண்டும் நினைவுறுத்துகிறார். தோனி இப்படியாடுவது இந்திய அணிக்கும் நல்லது. இதற்கு மறைமுகக் காரணமான தினேஷ் கார்த்திக்குக்குத்தான் நாம் நன்றி கூற வேண்டும். நிதாஹஸ் டிராபியில் வங்கதேசத்துக்கு எதிராக தினேஷ் கார்த்திக் அடித்த கடைசி பந்து வெற்றி சிக்ஸுக்குப் பிறகே தோனியின் உள்ளே உறங்கிக் கொண்டிருந்த புலி விழித்துக் கொண்டது.

அணியில் போட்டி மனப்பான்மை இருப்பது நல்லது. இன்று அரையிறுதி ஆடும் சென்னைக்கு இன்னொரு அனுகூலம் என்னவெனில் பெரிய போட்டிகளில் நாக்-அவுட் போன்றவற்றில் ஆடுவதில் சென்னை அளவுக்கு அனுபவம் மற்ற அணிகளுக்கு இல்லை. ராயுடு நல்ல தொடக்கம் கொடுப்பார் என்று நம்புவோம், அதே போல் தோனி இன்று முன்னால் களமிறங்க வேண்டும்.

இவ்வாறு கூறினார் சடகோபன் ரமேஷ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x