Published : 17 Jun 2024 11:54 AM
Last Updated : 17 Jun 2024 11:54 AM
ஜெர்மனியின் கெல்சன்கிர்செனில் நடைபெற்ற யூரோ கோப்பை 2024 கால்பந்துத் தொடரின் ‘சி’ பிரிவு ஆட்டத்தில் இங்கிலாந்து அணி செர்பியாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றிக்கணக்கைத் தொடங்கியுள்ளது.
ஆனால், செர்பிய அணி சாதாரணமல்ல. இங்கிலாந்து வீரர்களை தண்ணி குடிக்க வைத்தனர். அதிலும் குறிப்பாக 13-ம் நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் ஜூட் பெல்லிங்காம் அடித்த தலையால் முட்டிய கோலுக்குப் பிறகே செர்பியா தங்களது ஆட்டத்தின் மூலம் இங்கிலாந்தை ஆட்டிப்படைத்தனர்.
சில பல தருணங்களில் இங்கிலாந்தின் ‘பாஸ்’ செய்யக்கூடிய தெரிவுகளை செர்பியா முடக்கியது. ஆனாலும் இங்கிலாந்துக்கு எதிரான கோல் அச்சுறுத்தல் பெரிய அளவில் இல்லை. 82-ம் நிமிடத்தில் செர்பிய வீரர் டுசான் விளாவோவிச் அடித்த ஷாட்டினை இங்கிலாந்து கோல் கீப்பர் ஜோர்டான் பிக்ஃபோர்ட் அபாரமாக தடுத்ததுதான் பெரிய சேவ் ஆக அமைந்தது.
ஆட்டத்தின் 13-ம் நிமிடத்தில் இங்கிலாந்தின் அனுபவ வீரர் புகாயோ சாகா கொடுத்த பந்தை பெல்லிங்காம் சக்தி வாய்ந்த தலையினால் முட்டி பந்தை கோலுக்குள் திணித்தார். இங்கிலாந்து 1-0 என்று முன்னிலை பெற்றது. இதே ‘சி’ பிரிவில் மற்றொரு ஆட்டத்தில் டென்மார்க் அணியும் ஸ்லோவேனியா அணியும் 1-1 என்று டிரா செய்ததால் இந்த வெற்றி இங்கிலாந்தை ‘சி’ பிரிவில் முதலிடத்துக்குத் தள்ளியுள்ளது.
இங்கிலாந்து பயிற்சியாளர் காரெத் சவுத்கேட் கிரிக்கெட்டில் எப்படி மெக்கல்லம் அட்டாக்கிங் பாணியை உருவாக்கினாரோ அதே போன்று அட்டாக்கிங் ஆட்டத்தை இங்கிலாந்து அணியில் உருவாக்கியுள்ளார். அப்படி ஒரு தாக்குதல் கூட்டுச் செயல், ஆட்டக்களத்தின் வலது புறம் இங்கிலாந்துக்கு நிறைய ‘வெளி’யை உருவாக்கித் தந்தது.
இங்கிலாந்தின் ஃபுல்பேக் கைல் வாக்கருடன் சாகா இணைந்தார். இந்த இணைவுதான் முதல் கோலுக்கு வித்திட்டது. கைல் வாக்கரின் புத்திசாலித்தனமான அந்த பாஸ்தான் சாகாவின் ஷாட்டுக்கு வித்திட்டது. ஆனால் பெல்லிங்காமுக்கு அங்கு சுலபமாக இல்லை, அவர் இங்கும் அங்கும் நகர்ந்து தனக்கான வெளியை உருவாக்கிக் கொள்ள வேண்டியிருந்தது. அப்படிச் செய்து தனக்கென ஒரு தனி இடத்தை அமைத்துக் கொண்டு சாகாவின் பாஸை தலையால் முட்டி கோலுக்குள் திணித்தார்.
இடைவேளைக்குப் பிறகு செர்பிய அணி இங்கிலாந்துக்கு கடும் நெருக்கடிகளை கொடுத்தது, முதல் பாதியில் இங்கிலாந்து அனுபவித்த சுதந்திரம் தடுக்கப்பட்டது. ஆனாலும் கோல் நோக்கிய ஷாட்கள் இந்தப் போட்டியில் மிக மிகக் குறைவு. மொத்தமே 11 ஷாட்கள்தான். இதில் 6 செர்பியாவினுடையது, 5 இங்கிலாந்தினுடையது.
செர்பியா அணியில் இரண்டாவது பாதியில் இவான் இலீச் களமிறக்கப்பட்டார். இவர் தடுப்பு மிட்ஃபீல்டர். டுசான் விளாஹோவிச் அடித்த ஷாட் ஒன்று இங்கிலாந்து கோல் கீப்பருக்கு கண நேர பதற்றங்களைக் கொடுத்தது. ஆட்டம் முடிய 30 நிமிடங்கள் இருந்த தருவாயில் டுசா டேடிச், லுகா ஜோவிச் என்ற இரண்டு பேர்களை செர்பியா இறக்க ஆட்டம் செர்பிய அட்டாக் ஆக மாறியது. இதனையடுத்து இங்கிலாந்தும் கானர் கேலகர், ட்ரெண்ட் ஆர்னால்ட் ஆகியோரை களமிறக்க வேண்டி இருந்தது.
இன்னொரு இங்கிலாந்து பதிலி வீரர் ஜெராட் போவென் 77-வது நிமிடத்தில் மிக அருமையாக பாஸ் ஒன்றை இங்கிலாந்து கேப்டன் ஹாரி கேனுக்கு அனுப்ப இவர் அடித்த ஷாட்டை செர்பிய கோல் கீப்பர் ரஜ்கோவிச் தடுத்து வெளியே தள்ளினார். இது நடந்தது 77-வது நிமிடத்தில் என்றால் 82-வது நிமிடத்தில் செர்பியா ஏறக்குறைய சமன் செய்திருக்கும். விலாஹோவிச் அடித்த சக்தி வாய்ந்த ஷாட் ஒன்று கோலை நோக்கி சீறிப் பாய இங்கிலாந்து கோல் கீப்பர் பிக்ஃபோர்ட் அதை பிரமாதமாக வெளியே தள்ளி விட்டார்.
வெற்றி பெற்றாலும் செர்பியா இங்கிலாந்துக்கு தண்ணி காட்டியது. ஆனால், செர்பியாவின் பலவீனம் கோல் அடிக்கும் ஸ்ட்ரைக்கர்கள் பலமாக இல்லாததே. இங்கிலாந்து வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால், இன்னும் தடுப்பு அணைகளை இன்னும் கூட வலுப்படுத்த வேண்டியுள்ளது. அடுத்ததாக இங்கிலாந்து வியாழக்கிழமையன்று டென்மார்க் அணியைச் சந்திக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT