Published : 17 Jun 2024 09:56 AM
Last Updated : 17 Jun 2024 09:56 AM

83-வது நிமிடத்தில் வெக்ஹார்ஸ்ட் அடித்த கோல்: போலந்தை வென்ற நெதர்லாந்து | Euro Cup

ஹாம்பர்கில் நடைபெற்ற யூரோ கோப்பை 2024 கால்பந்து தொடரின் குரூப் டி ஆட்டத்தில் பதிலி வீரர் வெக்ஹார்ஸ்ட், தான் களமிறங்கிய 2 நிமிடங்களிலேயே வெற்றிக்கான கோலை அடிக்க நெதர்லாந்து போலந்தை 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி கொண்டது.

போலந்து வீரர் ஆடம் புக்சா முதல் கோலை 16-வது நிமிடத்தில் அடிக்க நெதர்லாந்து போராடி 29-வது நிமிடத்தில் கோடி கேப்கோ மூலம் 1 கோல் அடித்துச் சமன் செய்தது. பிறகு 83வது நிமிடத்தில் வவ்ட் வெக்ஹார்ஸ்ட் வெற்றிக்கான கோலை அடித்தார்.

இந்த வெக்ஹார்ஸ்ட் கதை சுவாரஸ்யமனாது இங்கிலிஷ் பிரீமியர் லீகில் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக 31 ஆட்டங்களில் வெறும் 2 கோல்களை மட்டுமே அடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் நேற்று தான் இறங்கிய 2-வது நிமிடத்திலேயே வலைக்குள் பந்தை திணித்தார். அதுவும் வெற்றி கோல். குறிப்பாக நெதர்லாந்து ஏகப்பட்ட வாய்ப்புகளை வீணடித்த பிறகு இவரது கோல் வெற்றியைப் பெற்றுத் தந்துள்ளது. மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக கோல் அடிக்க முடியாதவர் தன் தாய்நாடான நெதர்லாந்துக்காக 11 போட்டிகளில் 7 கோல்களை அடித்ததும் விசித்திரமான புள்ளி விவரம்.

83-வது நிமிடத்தில் வெக்ஹார்ஸ்டை போலந்து வீரர் இருவர் மார்க் செய்து அவரை முந்த விடாமல் நிறுத்தப்பட்டிருந்தனர், ஆனால், நேதன் ஆகேயின் பாஸ் ஒன்று இவரிடம் வர மிகப்பிரமாதமாக போலந்து கோல் கீப்பர் வோய்சீய்ச் செசெனியைத் தாண்டி கோலுக்குள் திணித்தார். போலந்து அணியில் அதன் புகழ்பெற்ற ஸ்டரைக்கர் ராபர்ட் லெவண்டோவ்ஸ்கி காயம் காரணமாக ஆடாதது பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது.

லெவண்டோவ்ஸ்கிக்குப் பதிலாக ஆடிய ஆடம் புக்சாதான் முதல் கோலை போலந்துக்காக அடித்தார். 16-வது நிமிடத்தில் போலந்துக்கு கார்னர் வாய்ப்புக் கிடைக்க பீட்டர் ஜெலின்ஸ்கியின் அருமையான கிராஸ் ஒன்றை எம்பி தலையால் முட்டி கோலாக்கி போலந்துக்கு 1-0 என்று முன்னிலை கொடுத்தார். ஆனால் நெதர்லாந்து போராடியது, வர்ஜில் வான் டிக்கின் ஷாட் ஒன்றை போலந்து கீப்பர் செசெனி அருமையாகத் தடுத்தார். ஆனால், 29-வது நிமிடத்தில் தடுப்பு சாத்தியமில்லாமல் போனது. இந்த முறை பட்டுத் திரும்பிய பந்தை கோடி கேப்கோ கோலாக மாற்றினார்.

இதே கேப்கோ 42-வது நிமிடத்தில் கோலுக்கு 3 அடியிலிருந்து கிடைத்த அருமையான வாய்ப்பை கோலுக்கு மேலே அடித்து வீணாக்கினார். அதன் பிறகு நிறைய வாய்ப்புகளை இரு அணிகளுமே பினிஷிங் செய்ய முடியாமல் விரயம் செய்தன. அப்போதுதான் 81-வது நிமிடத்தில் களம் கண்ட வெகோர்ஸ்ட் மிக அருமையாக 83வது நிமிடத்தில் வெற்றிக்கான கோலை அடித்தார், நெதர்லாந்து அணிக்கு முதல் வெற்றி.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x