Published : 03 Apr 2014 12:22 PM
Last Updated : 03 Apr 2014 12:22 PM
சென்னை லீக் சீனியர் டிவிசன் கால்பந்து போட்டியில் இந்தியன் வங்கி 4-2 என்ற கோல் கணக்கில் சென்னை சிட்டி போலீஸ் அணியைத் தோற்கடித்தது. இந்தியன் வங்கி அணியில் இடம்பெற்றுள்ள நைஜீரிய ஸ்டிரைக்கர் ஜான் அசத்தலாக ஆடி ஹாட்ரிக் கோல்களை அடித்து ஆட்டநாயகன் விருதைத் தட்டிச் சென்றார்.
செயின்ட் ஜோசப்-சென்னை கால்பந்து சங்கம் ஆகியவற்றின் சார்பில் சென்னை லீக் கால்பந்து போட்டிகள் சென்னை நேரு மைதானத்தில் நடைபெற்று வருகின்றன. இதில் புதன்கிழமை நடைபெற்ற சீனியர் டிவிசன் லீக் போட்டியில் இந்தியன் வங்கி அணி, சென்னை சிட்டி போலீஸ் அணியை எதிர்கொண்டது.
ஆரம்பமே அமர்க்களம்
இந்தியன் வங்கி வீரர்கள் ஜானும், அவருடைய சகநாட்ட வரான ஆன்டனியும் அபாரமாக ஆட, சிட்டி போலீஸ் அணியின் மிகப்பெரிய பலமாக செயல்பட்டார் ஸ்டிரைக்கர் தேவராஜ். குறிப்பாக ஜானை நெருங்கவே சிட்டி போலீஸ் வீரர்கள் தயங்கினர். ஆட்டத்தின் 17-வது நிமிடத்தில் இடது எல்லையில் இருந்த இந்தியன் வங்கி வீரர் ஜான், பந்தை கோல் கம்பத்தை நோக்கி நகர்த்தி வந்து மற்றொரு ஸ்டிரைக்கர் ஸ்டெஜினிடம் கொடுத்தார். ஆனால் அவருடைய காலில் பட்ட பந்து, வலது திசையில் செல்ல, அங்கிருந்த வலது மிட்பீல்டர் முஜோ ஜோஸ், அற்புதமாக பந்தைத் திருப்பி கோலடித்தார்.
இதன்பிறகு சில வாய்ப்புகளை நழுவவிட்ட சிட்டி போலீஸ் அணிக்கு ஆட்டத்தின் 37-வது நிமிடத்தில் பெனால்டி கிக் வாய்ப்பு கிடைத்தது. சிட்டி போலீஸ் அணியின் தேவராஜ் பந்தை கோல் கம்பத்தை நோக்கி அடிக்க, பெனால்டி ஏரியா பகுதியில் இருந்த இந்தியன் வங்கி வீரரின் கை பந்தின் மீது பட்டதாகக் கூறி இந்த பெனால்டி வாய்ப்பை வழங்கினார் நடுவர்.
இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திய கவிபாரதி கோலடித்தார். இதனால் ஸ்கோர் சமநிலையை (1-1) எட்டியது.ஆனால் இந்த சமநிலை நீண்ட நேரம் நிலைக்கவில்லை. அடுத்த 4-வது நிமிடத்தில் (41-வது நிமிடம்) வலது திசையில் இருந்து இந்தியன் வங்கி வீரர் ஜான் கோல் கம்பத்தை நோக்கி பந்தை உதைத்தார். கோல் ஏரியாவில் இருந்த சிட்டி போலீஸ் வீரர் புகழேந்தி அதை தடுப்பதற்காக தலையால் முட்டினார். ஆனால் அவருடைய தலையில் பட்ட பந்து கோல் கம்பத்திற்குள் செல்ல, இந்தியன் வங்கிக்கு 2-வது கோல் கிடைத்தது.
முதல் பாதி ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் ஸ்கோரை சமன் செய்யும் வாய்ப்பு சிட்டி போலீஸுக்கு கிடைத்தது. எளிதாக கோலடிக்க வேண்டிய அந்த வாய்ப்பில் போலீஸ் வீரர் ஜெரால்டு பந்தை கோல் கம்பத்துக்கு மேலே தூக்கியடிக்க, ஏமாற்றத்தில் முடிந்தது. 2-வது பாதி ஆட்டத்தின் ஆரம்பத்தில் மற்றொரு வாய்ப்பை நழுவவிட்டது சிட்டி போலீஸ். அந்த அணியின் ஸ்டிரைக்கர் தேவராஜ் அழகான வாய்ப்பை உருவாக்கி கொடுக்க, அதையும் கோட்டைவிட்டார் ஜெரால்டு.
கோல் கீப்பருக்கு ரெட்கார்டு
65-வது நிமிடத்தில் சிட்டி போலீஸ் கோல் கீப்பர் தனசேகரன், இந்தியன் வங்கி வீரர் வான்சோலை கீழே தள்ளினார். இதையடுத்து தனசேகரனுக்கு ரெட் கார்டு கொடுத்த நடுவர், இந்தியன் வங்கிக்கு பெனால்டி கிக் வாய்ப்பை வழங்கினார். இதை சரியாகப் பயன்படுத்திய ஜான், இந்தியன் வங்கிக்கு 3-வது கோலை பெற்றுத் தந்தார்.இதைத்தொடர்ந்து 69-வது நிமிடத்தில் பெனால்டி ஏரியாவில் இருந்த இந்தியன் வங்கி வீரர் சதீஷ் குமாரின் கையில் பந்து பட, அவருக்கு 2-வது “யெல்லோ” கார்டும், சிட்டி போலீஸ் அணிக்கு பெனால்டி கிக் வாய்ப்பும் கொடுத்தார் நடுவர். இந்த வாய்ப்பையும் சரியாகப் பயன்படுத்தி கவிபாரதி கோலடிக்க, அந்த அணிக்கு 2-வது கோல் கிடைத்தது.
ஏற்கெனவே தனசேகரன் வெளியேற்றப்பட்ட நிலையில், 2-வது “யெல்லோ” கார்டு பெற்ற சதீஷ் குமாரும் வெளியேறியதால் கடைசி 20 நிமிடங்கள் இரு அணிகளும் 10 வீரர்களுடனேயே விளையாடின. தொடர்ந்து அபாரமாக ஆடிய ஜானை, எதிரணி வீரர்கள் 5 பேர் வரை சுற்றி வளைத்தாலும், அற்புதமாக பந்தை சுழற்றி அவர்களைத் தாண்டி கோல் கம்பத்தை நோக்கி பந்தை தட்டிச் சென்றார்.
ஒரு சில வாய்ப்புகள் மயிரிழை யில் நழுவிய நிலையில், 82-வது நிமிடத்தில் ஜான் கோலடிக்க, இந்தியன் வங்கி 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது.
முதல் டிவிசன் லீக் ஆட்டத்தில் ஸ்டார் ஜுவனைல் அணி 1-0 என்ற கோல் கணக்கில் எஸ்.சி.ஸ்டெட்ஸ் அணியைத் தோற்கடித்தது.
விமர்சனத்துக்குள்ளான நடுவர்
இந்தப் போட்டியின்போது மெயின் நடுவர், அவ்வப்போது தவறான தீர்ப்புகளை வழங்கி சம்பந்தப்பட்ட இரு அணிகளின் விமர்சனத்துக்குள்ளானார். சிறிய தவறுகளுக்கு “யெல்லோ” கார்டுகளை வழங்கினார். இந்தியன் வங்கிக்கு பெனால்டி வாய்ப்பை வழங்கியதோடு, சென்னை சிட்டி போலீஸ் கோல் கீப்பருக்கு ரெட் கார்டு கொடுத்ததால் சிட்டி போலீஸ் அணியினர் கடும் அதிருப்தியடைந்தனர். சில வீரர்கள் நடுவரிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.
அடுத்த சில நிமிடங்களில் இந்தியன் வங்கி வீரர் சதீஷ் குமாருக்கு 2-வது “யெல்லோ” கார்டை நடுவர் காட்டினார். சிட்டி போலீஸ் அணி கோல் கீப்பரை வெளியேற்றியதை ஈடுசெய்யும் வகையில் சதீஷை வெளியேற்றியது அப்பட்டமாக தெரிந்தது.இது தொடர்பாக இந்தியன் வங்கி பயிற்சியாளர் சபீர் பாஷாவிடம் கேட்டபோது, “நடுவரின் தவறுகளை விமர்சிக்க விரும்பவில்லை. இனி நடைபெறும் போட்டிகளில் சிறிய தவறுகளுக்காக “யெல்லோ” கார்டையும், ரெட் கார்டையும் அவசரப்பட்டு காட்ட வேண்டாம் என்பதே எனது வேண்டுகோள். இதுபோன்று ஒரு போட்டிக்கு இரண்டு, மூன்று “யெல்லோ” மற்றும் ரெட் கார்டுகளை காட்டினால் வீரர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே நடுவர் கவனமாக செயல்பட்டால் நன்றாக இருக்கும்” என்றார்.
இன்றைய ஆட்டம்
தெற்கு ரயில்வே-ஹிந்துஸ்தான் ஈகிள்ஸ்
நேரம்: மாலை 4.30
இடம்: நேரு மைதானம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT