Published : 14 Jun 2024 06:12 PM
Last Updated : 14 Jun 2024 06:12 PM

சர்ச்சைக்குள்ளான நியூயார்க் மைதானம் முற்றிலும் அகற்றம் | டி20 உலகக் கோப்பை

நியூயார்க்: டி20 உலகக் கோப்பை போட்டிக்காகவே பிரத்யேகமாக அவசரம் அவசரமாக உருவாக்கப்பட்ட நியூயார்க்கின் நசாயு ஸ்டேடியம் முழுக்க அகற்றப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆடுகளம் குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்தன. காரணம் இந்த மைதானம் அவசரம் அவசரமாக 75 நாட்களுக்குள் கட்டப்பட்டதாகும். இங்கு பிட்ச்கள் இயற்கையாக உருவாக்கப்பட்டதல்ல, அடிலெய்டில் தயாரிக்கப்பட்டு இங்கு கொண்டு வந்து பதிக்கப்பட்டது, ட்ராப் இன் பிட்ச்களான இவை பேட்டர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்து வருவதோடு, இந்த உலகக் கோப்பையின் போட்டிகளை சுவாரஸ்யமிழக்கச் செய்துவிட்டது என்ற கடும் விமர்சனங்களை ஐசிசிக்குப் பெற்றுத் தந்தது.

இந்நிலையில் "ஜூன் 12 அன்று ஈஸ்ட் மெடோவில் கடைசிப் போட்டி முடிந்த நிலையில், ஸ்டேடியம் அகற்றப்பட்டு, கட்டிட பொருட்கள், உதிரி பாகங்களானது லாஸ் வேகாஸ் மற்றும் மற்றொரு கோல்ஃப் நிகழ்வுக்கு அனுப்பப்படும். மேலும் ஐசன்ஹோவர் பார்க் இயல்பு நிலைக்குத் திரும்பும். ஆனால் உலகத் தரம் வாய்ந்த கிரிக்கெட் ஆடுகளம் அப்படியே இருக்கும்" என்று நியூயார்க் டைம்ஸ் அறிக்கை கூறியுள்ளது.

34,000 பேர் அமரக்கூடியதாக அமைக்கப்பட்ட இந்த ஸ்டேடியத்தில் நெட் பிராக்டீஸுக்காகவும் சேர்த்து மொத்தம் 10 ட்ராப் இன் பிட்ச்கள் தயாரிக்கப்பட்டு கொண்டு வந்து பதிக்கப்பட்டன. இப்போது அகற்றப்படும் ஸ்டேடியத்தின் பார்வையாளர்கள் மாடம் உள்ளிட்டவைகள் கோல்ஃப் மைதானத்திற்குச் செல்கின்றன .

ஜூன் 1 அன்று வங்கதேசத்திற்கு எதிரான பயிற்சி ஆட்டம் உட்பட, அந்த மைதானத்தில் இந்தியா நான்கு போட்டிகளை விளையாடியது. டிராப்-இன் பிட்ச்களில் எட்டு போட்டிகள் நடந்தேறியது. முதல் 2 போட்டிகளில் எந்த அணியும் 100 என்ற ஸ்கோரைக்கூட எட்ட முடியவில்லை.

இந்த மைதானத்தில் இந்தியா யுஎஸ்ஏ அணிக்கு எதிராக சேஸ் செய்த 111 ரன்கள்தான் அதிகபட்ச வெற்றி சேசிங் ஸ்கோர் என்றால் பிட்சின் தன்மையை நாம் ஊகித்தறிய முடியும். அன்று கனடா அணி அயர்லாந்துக்கு எதிராக 137 ரன்கள் எடுத்த போது மைதானத்தின் அதிக ஸ்கோரைப் பதிவு செய்தது. இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிராக 119 ரன்களை வெற்றிகரமாக பும்ராவின் அசாத்தியப் பவுலிங்கைக் கொண்டு தடுத்தது.

தென் ஆப்பிர்க்கா அணி போராடி நெதர்லாந்துக்கு எதிராக வென்றது, பிறகு வங்கதேசத்துக்கு எதிராக தென் ஆப்பிரிக்கா 113 ரன்களை சிறப்பாகத் தடுத்தது. இந்நிலையில் இந்த மைதானம் முற்றிலும் அகற்றப்படவுள்ளது. அதற்கான பணிகள் தொடங்கியுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x