Published : 27 May 2018 03:10 PM
Last Updated : 27 May 2018 03:10 PM
ஐபிஎல் கிரிக்கெட்டில் இன்று அனைவரும் ஆவலாக எதிர்பார்க்கும் ‘தல’ தோனியின் சிஎஸ்கேவும், பிரமாதமாக இந்தத் தொடரில் ஆடிவரும் சன் ரைசர்ஸ் அணியும் கோப்பைக்கான போட்டியில் மோதுகின்றன.
இரு அணிகளுமே சச்சின் டெண்டுல்கர் கூறியது போல் ‘உயிரைக் கொடுத்து ஆடுகின்றனர்’. இறுதிப்போட்டி வேறு நிச்சயம் விறுவிறுப்புக்குக் குறைவிருக்காது.
அன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிராக 10 பந்துகளில் 34 ரன்களை விளாசி திடீரென ரஷீத் கானுக்குள் டிவில்லியர்ஸ் புகுந்தது போல் ஆடி ஸ்கோரை எதிர்பார்ப்புக்கும் மேல் கொண்டு சென்று கொல்கத்தாவுக்கு அதிர்ச்சியளித்த ரஷீத் கான் பிறகு அற்புதமான பந்து வீச்சில் ஹைதராபாத்தை பல போட்டிகள் போல் வெற்றிக்கு இட்டுச்சென்றார். 2 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் கடைசி 2 ஓவர்களில் 36 ரன்கள் விளாசி ஸ்கோர் 174 ரன்களுக்குச் சென்றது, பிறகு லின், உத்தப்பா, ரஸலை தன் அருமையான பந்துவீச்சில் காலி செய்ய கொல்கத்தா 160 ரன்களில் தோற்று வெளியேறியது.
இந்நிலையில் ரஷீத் கானை வித்தியாசமாகப் பயன்படுத்த சன் ரைசர்ஸ் முயற்சி செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அன்று தோனி, ஹர்பஜன் சிங்கையும் சாஹரையும் இறக்கி கிங்ஸ் லெவனுக்கு பாடம் கற்பித்தது போல் இன்று சன் ரைசர்ஸ் ஒருவேளை ரஷீத் கானை பேட்டிங்கில் முன்னால் இறக்க வாய்ப்புள்ளது.
சுனில் நரைனின் பேட்டிங் திறமைகள் தொடக்கத்தில் வெளிப்படுவது போல் ரஷீத் கான் திறமையும் வெளிப்படலாம். ஆப்கானிஸ்தானில் தன் கிளப்புக்கு தொடக்க வீரராக அவர் இறங்கியுள்ளார்.
டி20 போட்டிகளில் அவரது ஸ்ட்ரைக் ரேட் 138.14. மொத்தம் 17 பவுண்டரிகள் 18 சிக்சர்களை மொத்தம் 107 போட்டிகளில் அடித்துள்ளார், பின்னால்தான் பெரும்பாலும் களமிறங்குகிறார். ஒருநாள் சர்வதேச போட்டியில் இவரது அதிகபட்ச ஸ்கோர் 60 நாட் அவுட். டி20 சர்வதேச போட்டியில் 29 ஆட்டங்களில் 100 ரன்களை எடுத்துள்ளார் ஸ்ட்ரைக் ரேட் 129.87. லிஸ்ட் ஏ ஸ்ட்ரைக் ரேட் 100.84.
எனவே சுனில் நரைனை தொடக்கத்தில் இறக்குவது போல் இவரையும் தொடக்கத்தில் இறக்கி சிஎஸ்கே திட்டங்களுக்கு ஒரு அதிர்ச்சி மருத்துவம் அளிக்கலாமே. செய்யுமா சன் ரைசர்ஸ்? பொறுத்திருந்து பார்ப்போம். அதே போல் பிராத்வெய்ட்டின் பவர் ஹிட்டிங்கையும் முன்னதாக இறக்கி பயன்படுத்திக் கொள்ளலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT