Published : 13 Jun 2024 02:43 PM
Last Updated : 13 Jun 2024 02:43 PM
நியூயார்க்: நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் ‘குரூப் - ஏ’ சுற்று ஆட்டத்தில் அமெரிக்காவை இந்தியா வென்றது. இந்தப் போட்டியில் அமெரிக்காவுக்கு 5 ரன்கள் பெனால்டி வழங்கப்பட்டது. ஐசிசி ‘ஸ்டாப் கிளாக்’ விதியின் அடிப்படையில் இந்த பெனால்டி விதிக்கப்பட்டது.
நியூயார்க் நகரின் நசாவ் கவுண்டி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் அமெரிக்க அணி பந்து வீசியபோது ஒரு ஓவர் முடிந்து அடுத்த ஓவர் வீச 60 நொடிகளுக்கும் மேலானது. இப்படி அந்த இன்னிங்ஸின்போது மட்டுமே மூன்று முறை செய்த காரணத்தால் இந்தியாவுக்கு 5 ரன்கள் கிடைத்தது.
ஸ்டாப் கிளாக்: சர்வதேச ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஸ்டாப் கிளாக் முறையை ஐசிசி அறிமுகம் செய்துள்ளது. இதன்மூலம் ஓவர்கள் வீசப்படும் நேரம், ஆட்ட நேரங்களைத் துல்லியமாகக் கணக்கிட முடியும். இந்த ஸ்டாப் கிளாக் முறையை ஐசிசி கட்டாயமாக்கியுள்ளது.
இந்தப் புதிய விதிமுறைப்படி ஒரு ஓவருக்கும் இன்னொரு ஓவருக்கும் இடையேயான இடைவெளி 60 நொடிகளுக்கு மிகக் கூடாது, அதாவது ஒரு ஓவர் முடிந்து அடுத்த ஓவரை 60 நொடிகளுக்குள் வீசத் தொடங்கி விட வேண்டும். 60 முதல் பூஜ்ஜியம் வரை எண்ணும் எலக்ட்ரானிக் கடிகாரம் ஸ்கீரினில் காட்டப்படும். இந்த நேரக்கட்டுப்பாட்டை 2 முறைக்கு மேல் மீறினால் பந்துவீச்சு அணிக்கு 5 ரன்கள் அபராதமாக விதிக்கப்படும் அதாவது பேட்டிங் செய்யும் அணிக்கு 5 ரன்கள் கொடுக்கப்படும்.
இந்த விதி நடப்பு டி20 உலகக் கோப்பை தொடருடன் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி அமெரிக்கா தற்போது 5 ரன்களை பெனால்டியாக கொடுத்துள்ளது. போட்டியின் போது கள நடுவர்கள் அமெரிக்க கேப்டன் ஆரோன் ஜோன்ஸை எச்சரித்தனர். அதன் பிறகே அமெரிக்காவுக்கு பெனால்டி விதித்தனர்.
“இதற்கு நாங்கள் கவனம் செலுத்த வேண்டி உள்ளது. இந்த போட்டிக்கு முன்பும் இதே காரணத்துக்காக நாங்கள் நடுவர்களின் எச்சரிக்கையை பெற்றிருந்தோம். அதற்கு தேர்வு காண வேண்டும் என்றும் முடிவு செய்தோம்.
இதற்கு முன்பு நாங்கள் விளையாடிய கனடா மற்றும் வங்கதேச தொடரின் இந்த விதி இல்லை. இதில் நாங்கள் நீங்கள் காலம் விளையாடாமல் போனது தான் சிக்கல். எங்களை பொறுத்தவரை அந்த 5 ரன்கள் ஆட்டத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது என நாங்கள் கருதுகிறோம்” என அமெரிக்க அணியின் பயிற்சியாளர் ஸ்டூவர்ட் லா தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT