Published : 11 Jun 2024 11:45 AM
Last Updated : 11 Jun 2024 11:45 AM

“போலி ஆல்ரவுண்டர்கள், பேட்டிங் ஆடத் தெரியாதவர்கள்” - பாக். அணி மீது வாசிம் அக்ரம் தாக்கு

பாகிஸ்தான் அணி வீரர்கள்

இந்தியாவுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை போட்டியில் 119 ரன்களுக்கு இந்திய அணியை சுருட்டிய பிறகு அந்த இலக்கைக் கூட எட்ட முடியாமல் பாகிஸ்தான் அணி தோல்வி கண்டது. இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் மற்றும் வக்கார் யூனிஸ் ஆகியோர் கொதிப்படைந்து பேசியுள்ளனர்.

வாசிம் அக்ரம் கூறும்போது, “அவர்கள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக கிரிக்கெட் ஆடி வருகின்றனர். நான் அவர்களுக்கு பாடம் எடுக்க முடியாது. முகமது ரிஸ்வானுக்கு ஆட்டம் பற்றிய பிரக்ஞை கொஞ்சம் கூட இல்லை. இப்திகார் அகமதுக்கு ஒரே ஷாட் தான் ஆடத்தெரியும். இவர் பாகிஸ்தான் அணியில் வருடக்கணக்கில் இருக்கிறார். ஆனால், எப்படி பேட் செய்வது என்று தெரியவில்லை.

ஆட்டம் பற்றி நான் போய் ஃபக்கர் ஸமானுக்குப் பாடம் எடுக்க முடியாது. பாகிஸ்தான் வீரர்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால் நாம் சரியாக ஆடாவிட்டால் பயிற்சியாளரைத்தான் தூக்குவார்கள். நம்மை அணியை விட்டு அனுப்ப மாட்டார்கள் என்று நினைக்கின்றனர். ஆனால், பயிற்சியாளர்களைத் தக்கவைத்து இந்த ஒட்டுமொத்த பாகிஸ்தான் அணியையும் வீட்டுக்கு அனுப்பி விட்டு, முற்றிலும் புதிய அணியை தேர்வு செய்ய வேண்டும்.

பாபர் அஸமுக்கும் ஷாஹின் அஃப்ரீடிக்கும் பேச்சுவார்த்தைக் கிடையாது, இன்னும் சில வீரர்கள் சிலருடன் பேச மாட்டார்கள். நாட்டுக்காக ஆடும்போது சுயநலமும் ஈகோவும் இருந்தால் உருப்படுமா” என்று கடுமையாகச் சாடினார்.

வக்கார் யூனிஸ் கூறும்போது, “இந்தப் போட்டியில் வெற்றி பெற முடியவில்லை என்றால் நான் என்னதான் சொல்வது? வெற்றியைத் தட்டில் வைத்துக் கொடுத்தார்கள். ஆனால், அதை கீழே போட்டு நொறுக்கி விட்டது பாகிஸ்தான். பாகிஸ்தான் பேட்டர்களின் படுமோசமான ஆட்டமே இதற்கு காரணம். ஆரம்பத்தில் பார்ட்னர்ஷிப் அமைக்கப்பட்டன. ஆனால், பினிஷிங் இல்லையே” என்றார்.

முன்னாள் தொடக்க வீரர் முடாசர் நாசர் கூறும்போது, “இந்த அணியில் எந்த ஒரு பலமும் இல்லை. இரண்டு தொடக்க வீரர்கள் நன்றாக ஆடுகின்றனர். பிறகு வருபவர்கள் வெறும் மட்டைச் சுழற்றிகள்தான். பெரிய போட்டிகளில் போலி ஆல்ரவுண்டர்களை வைத்துக் கொண்டு வெல்ல முடியாது. இப்போது பாகிஸ்தான் அணியில் இருக்கும் சிலர் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 போட்டித் தொடரில் தன் அணியின் முதலாளிகளுக்குக் கூட அவர்கள் அணியை வெற்றி பெற வைத்ததில்லை.

இவர்களை வைத்துக் கொண்டு பும்ராவை எதிர்கொள் என்றால் முடியுமா? நாம் எதார்த்தத்தை விட்டுத் தொலைவில் இருக்கிறோம்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x