Published : 11 Jun 2024 10:34 AM
Last Updated : 11 Jun 2024 10:34 AM
நியூயார்க்: நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் ‘குரூப் - டி’ ஆட்டத்தில் வங்கதேசத்தை 4 ரன்களில் வென்றுள்ளது தென் ஆப்பிரிக்கா. இந்தப் போட்டியில் கள நடுவரின் டெட்-பால் முடிவு சர்ச்சையாகி உள்ளது.
நியூயார்க்கில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட் செய்து 20 ஓவர்களில் 113 ரன்கள் எடுத்தது. 114 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டிய வங்கதேச அணி 109 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது.
இந்தப் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் வங்கதேசம் பேட் செய்த போது 17-வது ஓவரை தென் ஆப்பிரிக்க வீரர் பார்ட்மேன் வீசினார். அந்த ஓவரின் இரண்டாவது பந்தை மஹமுதுல்லா எதிர்கொண்டார். அவர் தனது ஸ்டாண்டை மாற்றி ஆடி முயன்றார். அதனை அறிந்த பார்ட்மேன், பந்தை அதற்கு தகுந்தது போல அட்ஜெஸ்ட் செய்து வீசினார். ஃப்ளிக் ஷாட் ஆட முயன்ற மஹமுதுல்லாவின் பேடில் (Pad) பந்து பட்டது. இருந்தும் ஃபைன் லெக் திசையில் பந்து எல்லைக் கோட்டை கடந்தது.
நடுவர் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட் கொடுத்தார். அதையடுத்து டிஆர்எஸ் எடுத்தார் மஹமுதுல்லா. அதில் நாட்-அவுட் கொடுக்கப்பட்டது. இருந்தும் கள நடுவர் அவுட் கொடுத்த காரணத்தால் அந்த பந்து டெட்-பால் என கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. அதனால் அந்த நான்கு ரன்கள் வங்கதேச அணியின் ஸ்கோரில் சேர்க்கப்படவில்லை.
இதுதான் தற்போது சர்ச்சையாகி உள்ளது. இது குறித்து வங்கதேச வீரர் தவ்ஹித் கூறியதாவது. “அது நடுவரின் முடிவு. ஆனால், அது சரியான முடிவு அல்ல. எங்களுக்கு பாதகமாக அமைந்தது. ஏனெனில், அந்த நான்கு ரன்கள் ஆட்டத்தின் முடிவை மாற்றி இருக்கும்.
அது ஐசிசி வகுத்துள்ள விதிகள். களத்தில் அப்போது நடுவர் முடிவை அறிவித்து விட்டார். அவரும் மனிதர் என்பதால் இந்த தவறை செய்து விட்டார். அதே போல எங்களுக்கு இரண்டு முதல் மூன்று வொய்டுகள் கொடுக்கப்படவில்லை. இது மாதிரியான இடங்களில் மேம்பாடு என்பது அவசியம்” என தெரிவித்தார்.
விதிகள் சொல்வது என்ன? - கள நடுவர் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட் கொடுத்தால் ‘பை’, ‘லெக் பை’ ரன்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. நடுவரின் முடிவுக்கு டிஆர்எஸ் முடிவுகள் இருந்தாலும் இது தொடரும். அதுவே நடுவர் நாட்-அவுட் கொடுத்தால் அந்த ரன்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
இந்த விதியை முன்பு ஒருமுறை இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் விமர்சித்திருந்தார். வங்கதேச அணிக்கு நடுவரின் இந்த முடிவு பாதகமாக அமைந்தது. அது குறித்து சமூக வலைதளத்தில் பலரும் கருத்து தெரிவித்திருந்தனர். இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபரும் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.
Mahmudullah was wrongly given out LBW, the ball went for four leg byes. The decision was reversed on DRS. Bangladesh didn't get the 4 runs as ball is dead once batter given out, even if wrongly. And SA ended up winning the game by 4 runs. Feel for Bangladesh fans. #SAvBAN #T20WC
— Wasim Jaffer (@WasimJaffer14) June 10, 2024
Bangladesh lose by 5 runs. That 4 leg byes & LBW is the margin of defeat. https://t.co/peBIzcXKPY
— Srini Mama (@SriniMaama16) June 10, 2024
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT