Published : 11 Jun 2024 08:52 AM
Last Updated : 11 Jun 2024 08:52 AM
நியூயார்க்: ஐசிசி டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் தோல்வி அடைந்தது அந்நாட்டு ரசிகர்களின் மனதை நொறுக்கியுள்ளது. டி 20 உலகக் கோப்பை வரலாற்றில் இந்தியாவிடம் பாகிஸ்தான் அணி தோல்வி அடைவது இது 7-வது முறையாகும். இந்திய அணியின் வெற்றியில் ரிஷப் பந்த் சேர்த்த 42 ரன்களும், பந்து வீச்சில் ஜஸ்பிரீத் பும்ரா கைப்பற்றிய 3 விக்கெட்களும் முக்கிய பங்குவகித்தன.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 4 புள்ளிகளுடன் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை பலப்படுத்திக் கொண்டது. அதேவேளையில் 2 ஆட்டங்களிலும் தோல்வியை சந்தித்துள்ள பாகிஸ்தான் அணி அடுத்த சுற்று வாய்ப்பை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியா - பாகிஸ்தான் போட்டியை காண்பதற்காக பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் தனது டிராக்டரை விற்று 3000 டாலர்களுக்கு (இந்திய மதிப்பில் சுமார் ரூ.2.50 லட்சம்) டிக்கெட் வாங்கியதாக தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக போட்டி முடிவடைந்ததும் அந்த ரசிகர் கூறும்போது,“3000 அமெரிக்க டாலர் மதிப்புள்ள டிக்கெட் பெற எனது டிராக்டரை விற்றேன். இந்தியாவின் ஸ்கோரை பார்த்தபோது, இந்த ஆட்டத்தில் நாங்கள் தோல்வி அடைவோம் என்று நினைக்கவில்லை.
இது அடையக்கூடிய இலக்கு என்றே நாங்கள் நினைத்தோம். ஆட்டம் பாகிஸ்தான் அணியின் வசமே இருந்தது. ஆனால் பாபர் அஸம் ஆட்டமிழந்ததும் எங்கள் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்திய அணி ரசிகர்களுக்கு வாழ்த்துகள்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT