Published : 06 Jun 2024 12:59 PM
Last Updated : 06 Jun 2024 12:59 PM
பாரிஸ்: அண்மையில் ஸ்பெயின் நாட்டின் ரியல் மாட்ரிட் கிளப் அணியில் இணைந்தார் பிரான்ஸ் நாட்டின் கால்பந்தாட்ட வீரர் எம்பாப்பே. இந்நிலையில், அது குறித்து தனது கருத்தை அவர் பகிர்ந்துள்ளார். அவருக்கு ரியல் மாட்ரிட் அணியின் முன்னாள் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“இப்போது இது அதிகாரபூர்வமானது. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நான் ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடுகிறேன். இந்த கிளப் அணிக்காக விளையாட வேண்டுமென்பது எனது கனவு. அது தற்போது நிஜமாகி உள்ளது. அந்த வகையில் நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். இது எனக்கு நிம்மதி தருகிறது. கூடவே பெருமையும் அளிக்கிறது.
எனக்கு பிஎஸ்ஜி கிளப் அணியுடன் எந்த வருத்தமும் இல்லை. ஆனால், சில விஷயங்களும், சிலரது செயலும் என்னை வருந்த செய்தது. பிஎஸ்ஜி அணியின் பயிற்சியாளரும், ஆலோசகரும் இல்லையென்றால் நான் கடந்த சீசன் விளையாடி இருக்க மாட்டேன்” என பத்திரிகையாளர் சந்திப்பில் எம்பாப்பே தெரிவித்தார்.
25 வயதான எம்பாப்பே, சர்வதேச கால்பந்தாட்ட போட்டிகளில் பிரான்ஸ் நாட்டுக்காக விளையாடி வருகிறார். அந்த அணியின் பிரதான ஸ்ட்ரைக்கராக உள்ளார். ரொனால்டோ, மெஸ்ஸி போன்ற வீரர்களை தொடர்ந்து அடுத்த தலைமுறையை சேர்ந்த நட்சத்திர ஆட்டக்காரராகவும் அறியப்படுகிறார்.
கடந்த 2017 சீசன் முதல் பிஎஸ்ஜி கிளப் அணிக்காக அவர் விளையாடி வருகிறார். இந்த அணி பிரான்ஸ் நாட்டின் கிளப் அணி என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது வரை பிஎஸ்ஜி அணிக்காக 306 ஆட்டங்களில் ஆடியுள்ளார். மொத்தம் 256 கோல்கள் பதிவு செய்துள்ளார். கடந்த சீசன் முதலே அவர் வேறொரு கிளப் அணிக்கு செல்ல உள்ளதாக சொல்லப்பட்டு வந்தது. சவுதி அரேபியாவின் கிளப் அணி மற்றும் ரியல் மாட்ரிட் கிளப் அணியின் பெயர்கள் சொல்லப்பட்டன. தற்போது அவர் ரியல் மாட்ரிட் அணியில் இணைந்துள்ளார்.
ரொனால்டோ வாழ்த்து: “கிளப் அணிக்காக உங்கள் ஆட்டத்தை பார்க்க நான் ஆர்வமாக உள்ளேன்” என ரொனால்டோ, எம்பாப்பேவின் சமூக வலைதள பதிவில் கமெண்ட் செய்தார். அதற்கு பலரும் லைக் கொடுத்திருந்தனர். இதுவரை சுமார் 4.6 லட்சம் லைக்குகளை அந்த கமெண்ட் பெற்றுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT