Published : 01 Apr 2018 12:29 PM
Last Updated : 01 Apr 2018 12:29 PM

மிகப்பெரிய தோல்வியை நோக்கி ஆஸ்திரேலியா: நசுக்கும் தென் ஆப்பிரிக்கா

ஜோஹன்னஸ்பர்கில் நடைபெறும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் 2-ம் நாள் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவின் 488 ரன்களுக்கு எதிராக ஆஸ்திரேலியா 6 விக்கெட்டுகளை இழந்து 110 ரன்களை மட்டுமே எடுத்து மிகப்பெரிய தோல்வியை எதிர்நோக்கியுள்ளது.

ஆட்ட நேர முடிவில் கேப்டன் டிம் பெய்ன் 5 ரன்களுடனும் கமின்ஸ் 7 ரன்களுடனும் களத்திலிருக்கின்றனர், தென் ஆப்பிரிக்கா தரப்பில் வெர்னன் பிலாண்டர் 17 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைச் சாய்க்க ரபாடா, மோர்கெல் மஹராஜ் ஆகியோர் தலா 1 விக்கெட்டைக் கைப்பற்றினர்.

தென் ஆப்பிரிக்கா தன் முதல் இன்னிங்சில் 299/6 என்று இருந்த போது ஆஸ்திரேலியா பிடியை நழுவ விட தெம்பா பவுமா அருமையாக ஆடி 95 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். ஆஸ்திரேலியா தரப்பில் கமின்ஸ் 5 விக்கெட்டுகளையும் லயன் 3 விக்கெட்டுகளையும் சேயர்ஸ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். மார்க்ரம் 17 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 152 ரன்கள் எடுக்க, டிவில்லியர்ஸ் 69 ரன்களை விளாசினார். கடைசியில் தெம்பா பவுமா நிற்க மஹராஜ் 4 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 45 ரன்களையும் டி காக் 39 ரன்களையும் எடுக்க தென் ஆப்பிரிக்கா 488 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

ஆஸ்திரேலியா புதிய தொடக்க வீரர்களான பர்ன்ஸ், ரென்ஷாவைக் களமிறக்கியது, இருவரும் ஒற்றை இலக்கத்தைத் தாண்டவில்லை. பர்ன்ஸ் 4 ரன்களில் ரபாடாவின் வெளியே சென்றப் பந்தை ஆடினார், எட்ஜ் ஆனது 2வது ஸ்லிப்பில் டுபிளெசிஸ் கேட்ச் எடுத்தார். ரென்ஷா 8 ரன்களில் பிலாண்டர் இழுத்த இழுப்புக்குச் சென்று எட்ஜ் செய்து வெளியேறினார்.

வாய்ப்புக்காகக் காத்திருந்த பீட்டர் ஹேண்ட்ஸ்கம்ப் தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே பிலாண்டரிடம் பவுல்டு ஆனார். பந்தை ஆடாமல் விட நினைத்தார். ஆனால் மட்டையை குறித்த நேரத்தில் விலக்கவில்லை பந்து மட்டையில் பட்டு ஆஃப் ஸ்டம்பைத் தொந்தரவு செய்தது. கோல்டன் டக் அடித்தார் ஹேண்ட்ஸ்கம்ப். ஹாட்ரிக் வாய்ப்பு கிடைத்த பிலாண்டர் அதனை நிறைவேற்ற முடியவில்லை.

ஆஸ்திரேலிய அணியில் இரண்டே இரண்டு வீரர்கள்தான் இரட்டை இலக்கம் கடந்தனர் ஒன்று உஸ்மான் கவாஜா, இவர் 84 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 53 ரன்கள் எடுத்து பிலாண்டர் பந்தை லெக் திசையில் தட்டி விட முயன்று குவிண்டன் டி காக்கின் அபாரமான கேட்சுக்கு வெளியேற நேரிட்டது.

மிட்செல் மார்ஷ் ஆட்டம் முடிய 15 நிமிடங்களே இருந்த போது மோர்கெல் பந்தை வாரிக்கொண்டு பெரிய டிரைவ் ஆட முயல பந்து மட்டையில் பட்டு பவுல்டு ஆனது. ஷான் மார்ஷ் 16 ரன்களில் மஹராஜ் பந்தில் டிவில்லியர்ஸிடம் எட்ஜ் செய்து வெளியேறினார். ஆஸ்திரேலியா 96/6 என்ற நிலையிலிருந்து 110/6 என்று உள்ளது, மிகப்பெரிய தோல்வியை எதிர்நோக்கி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x