Published : 03 Jun 2024 04:25 PM
Last Updated : 03 Jun 2024 04:25 PM
புனே: அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் கேதார் ஜாதவ். ஓய்வு குறித்த தனது அறிவிப்பை தோனி வழியில் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் 39 வயதான கேதார் ஜாதவ். 2014 முதல் 2020 வரையில் இந்திய அணியில் விளையாடியவர் 2019 உலகக் கோப்பை தொடரிலும் விளையாடி இருந்தார். 2023 ஐபிஎல் சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி இருந்தார். 2024 சீசனில் அவர் விளையாடவில்லை.
இந்நிலையில், அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்துள்ளார். “என்னுடைய தொழில்முறை கிரிக்கெட் பயணத்தில் நீங்கள் வெளிப்படுத்திய அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி. 15:00 மணியில் இருந்து அனைத்து கிரிக்கெட்டிலிருந்தும் என்னை ஓய்வு பெற்ற வீரராக கருதுங்கள்” என இன்ஸ்டா பதிவில் தெரிவித்திருந்தார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியும் இதே போல தான் தனது சர்வதேச கிரிக்கெட்டின் ஓய்வு குறித்த முடிவை தெரிவித்திருந்தார்.
அதனுடன் உள்ளூர் கிரிக்கெட் முதல் உலக கிரிக்கெட் வரையில் தான் விளையாடிய போட்டிகளின் புகைப்படங்களை ஸ்லைட் ஷோ வடிவில் சேர்த்து, கிஷோர் குமார் பாடலை பின்னணியில் ஒலிக்க செய்துள்ளார்.
இந்திய அணிக்காக 73 ஒருநாள் மற்றும் 9 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். மொத்தமாக 1,511 ரன்களை எடுத்துள்ளார். 7 அரைசதம் மற்றும் 2 சதங்களை சர்வதேச கிரிக்கெட்டில் பதிவு செய்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் 27 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். 2018 முதல் 2020 ஐபிஎல் சீசன் வரையில் சிஎஸ்கே அணியில் விளையாடி இருந்தார். கடந்த 2022-ல் தனது சொந்த ஊரான புனே நகரில் கிரிக்கெட் அகாடமியை ஜாதவ் தொடங்கி இருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT