Published : 03 Apr 2018 04:28 PM
Last Updated : 03 Apr 2018 04:28 PM

‘ஸ்விங் கிங்’ பிலாண்டர் பிரமாதம்: நொறுங்கியது ஆஸி. - தெ.ஆ. வரலாற்று தொடர் வெற்றி

ஜொஹான்னஸ்பர்க் டெஸ்ட் போட்டியில் வெர்னன் பிலாண்டர் 6 விக்கெட்டுகளை வீழ்த்த ஆஸ்திரேலியா தன் 2வது இன்னிங்ஸில் 119 ரன்களுக்குச் சுருண்டு 492 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய தோல்வி கண்டது. தென் ஆப்பிரிக்கா அணி 1970-க்குப் பிறகு தங்கள் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை டெஸ்ட் தொடரில் வீழ்த்தி 3-1 என்று தொடரைக் கைப்பற்றியுள்ளது.

88/3 என்று இன்று தொடங்கிய ஆஸ்திரேலியா 31 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து 119 ரன்களூக்குச் சுருண்டது. வெர்னன் பிலாண்டர் 13 ஓவர்கள் 5 மெய்டன்களுடன் 21 ரன்களுக்கு 6 விக்கெட் என்று தன் சிறந்த டெஸ்ட் பந்து வீச்சை நிகழ்த்தினார். மோர்னி மோர்கெல் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார், அவர் இத்துடன் 309 டெஸ்ட் விக்கெட்டுகளுடன் ஓய்வு பெறுகிறார்.

பிலாண்டரின் ஸ்விங்கும் 200 டெஸ்ட் விக்கெட்டுகளும்!

ஆட்டம் தொடங்கி ஒன்றரை மணி நேரத்துக்குள் சம்பிரதாயங்களை முடித்து வைத்தார் பிலாண்டர். கடைசியில் நேதன் லயன் ரன் அவுட் ஆக, இருதரப்பினரிடையேயும் கடும் வாக்குவாதங்களும், காயங்களும், தடைகளும், சர்ச்சைகளும் மிகுந்த, ஒரு டெஸ்ட் தொடர் முடிவுக்கு வந்தது. ஆஸ்திரேலியா ஆதிக்கமும் இத்துடன் முடிவுக்கு வந்தது.

ஆஸ்திரேலிய பேட்ஸ்மென்களில் ஒருவர் கூட 4 டெஸ்ட் போட்டிகளில் ஒரு சதம் கூட எடுக்காமல் முடிந்த அதிசயத் தொடர் ஆனது. இன்று முதல் பலி ஷான் மார்ஷ் அவர் 7 ரன்களில் பிலாண்டரின் இன்ஸ்விங்கருக்கு தெம்பா பவுமாவிடம் கேட்ச் ஆகி வெளியேறினார்.

3 பந்துகள் சென்று மிட்செல் மார்ஷை அவுட் ஸ்விங்கரில் எட்ஜ் செய்ய வைத்தார் பிலாண்டர், டி காக் வேலையை முடிக்க பிலாண்டர் தனது 200வது டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்தினார்.

பீட்டர் ஹேண்ட்ஸ்கம்ப் 24 ரன்களில் முதல் இன்னிங்ஸ் ரிபீட் போலவே சற்றே வெளியே சென்ற பந்து மெக்ரா லெந்த், ஹேண்ட்ஸ்கம்ப் மட்டையை விலக்கிக் கொள்ள முடியவில்லை. மட்டையில் பட்டு பவுல்டு ஆனது, இதன் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தன் 50வது விக்கெட்டைக் கைப்பற்றினார் பிலாண்டர்.

அதன் பிறகும் பிலாண்டரின் ஸ்விங் மங்கவில்லை, தீவிரமும் குறையவில்லை 4 பந்துகளில் 3 விக்கெட்டுகளைச் சாய்த்தார். ஓய்வு ஒழிச்சலில்லாத ஸ்விங் பந்து வீச்சில் முன்னால் இழுக்கப்பட்ட டிம் பெய்ன் எட்ஜ் ஆகி வெளியேறினார். அவுட் ஆவதற்கு முன்பாக 2 பந்துகளில் ஒன்று உள்விளிம்பு இன்னொன்று வெளிவிளிம்பு, அடுத்து அவுட். இதுதான் பிலாண்டர். இதே ஓவரில் பாட் கமின்ஸ் இன்ஸ்விங்கரைக் கணிக்கத் தவறி பவுல்டு ஆனார். அடுத்த பந்தே சாத் சேயர்ஸ் எட்ஜ் செய்து 3வது ஸ்லிப்பில் கேட்ச் ஆனார்.

ஜோஷ் ஹேசில்வுட் மற்றவர்களை விட நல்ல தடுப்பாட்ட உத்தி வைத்திருந்தார், ஆட்டத்தின் போக்குக்கு எதிராக பிலாண்டரை மிட் ஆஃபில் தூக்கி ஒரு பவுண்டரி அடித்தார். லயன், ஹேசில்வுட் விட்டுக் கொடுக்காமல் 6 ஓவர்கள் தாக்குப்பிடித்தனர், இதில் மோர்கெலை லயன் ஒரு அருமையான பிக்ஃபுட் பஞ்ச் ஆடி பவுண்டரி அடித்தார்.

கடைசியில் யாருக்கும் விக்கெட் விழாமல் ரன் அவுட் ஆனார் லயன், கொண்டாட்டங்கள், உணர்ச்சித் தழுவல்கள், வெற்றி ப்பெருமிதங்கள்! 119 ரன்களுக்கு ஆல் அவுட். இன்று 17 ஓவர்களில் கதை முடிந்தது. ஆட்ட நாயகன் பிலாண்டர், தொடர் நாயகன் ரபாடா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x