Published : 02 Jun 2024 11:59 AM
Last Updated : 02 Jun 2024 11:59 AM

டி20 உலகக் கோப்பை: முதல் ஆட்டத்தில் அமெரிக்கா அபார வெற்றி

ஜார்ஜ்டவுன்: ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் முதல் ஆட்டத்தில் கனடா அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றியை பதிவு செய்துள்ளது அமெரிக்க அணி.

ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் 9- வது பதிப்பு அமெரிக்கா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகளில் இன்று தொடங்கியது. தொடக்க நாளான இன்று அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் உள்ள கிராண்ட் ப்ரேரி மைதானத்தில் நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் 'ஏ' பிரிவில் இடம் பெற்றுள்ள அமெரிக்கா - கனடா அணிகள் மோதின. அமெரிக்கா, கனடா ஆகிய இரு அணிகளுமே முதன்முறையாக டி20 உலகக் கோப்பை தொடரில் அறிமுகமாகும் இந்த ஆட்டம் இந்திய நேரப்படி காலை 6 மணிக்கு தொடங்கியது.

டாஸ் வென்ற அமெரிக்க கேப்டன் மோனக் படேல் பந்து வீச்சை தேர்வு செய்ய, அதன்படி பேட்டிங் செய்த கனடா அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் குவித்தது. கனடா அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் நவநீத் தல்வால் 61 ரன்கள், நிக்கோலஸ் கிர்டன் 51 ரன்கள் எடுத்தனர். அமெரிக்கா தரப்பில் அலிகான், ஹர்மித் சிங், கோரி ஆண்டர்சன் தலா 1 விக்கெட் கைப்பற்றினார்கள்.

பின் 195 ரன்கள் இலக்கை துரத்தியது அமெரிக்க அணி. அந்த அணிக்கு தொடக்கமே அதிர்ச்சிகரமாக அமைந்தது. ஓப்பனிங் வீரர் ஸ்டீவன் டெய்லர் முதல் ஓவரில் பூஜ்யத்தில் அவுட்டானார். 7வது ஓவர் வரை தாக்குப்பிடித்த கேப்டன் மோனக் படேல் 16 ரன்களில் வெளியேறினார். இப்படியாக 42 ரன்கள் எடுப்பதற்குள் 2 முக்கிய விக்கெட்டை இழந்து தடுமாறிய அமெரிக்க அணியை ஆண்ட்ரிஸ் கூஸ் - ஆரோன் ஜோன்ஸ் ஜோடி மீட்டெடுத்தது. இருவரும் அரைசதம் கடந்து சிறப்பாக ஆடினர்.

3-வது விக்கெட்டுக்கு 131 ரன்கள் பார்ட்னாட்ஷிப் மூலம் அவர்கள் சேர்க்க, வெற்றியை நோக்கி சென்று கொண்டிருந்தது அந்த அணி. அப்போது தான் ஆந்த்ரே கூஸ் 65 ரன்களில் விக்கெட் ஆனார். அவர் அவுட் ஆகும்போது ஸ்கோர் 173 ஆக இருந்தது. மறுமுனையில் இருந்த ஆரோன் ஜோன்ஸ் ஜோடி சிறப்பாக விளையாடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது. இதனால், அமெரிக்கா 17.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது.

ஆரோன் ஜோன்ஸ் 40 பந்தில் 94 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். அவரது ஸ்கோரில் 4 பவுண்டரி, 10 சிக்சர்கள் அடங்கும். இதனால் அமெரிக்கா எளிதான வெற்றியை பதிவு செய்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x