Published : 19 Aug 2014 02:51 PM
Last Updated : 19 Aug 2014 02:51 PM

அயல்நாடுகளில் இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம் கவலையளிக்கிறது

ஆஸ்திரேலியாவுக்கு இந்திய அணி இந்த ஆண்டின் இறுதியில் செல்லும்போது எழுச்சியுற்ற அணியாக செல்வது அவசியம். இங்கிலாந்துக்கு எதிரான இந்தத் தோல்வி 2011ஆம் ஆண்டில் விளையாடியதை திரும்பவும் விளையாடியது போல் இருந்தாலும், இப்போது அறிகுறிகள் மேலும் கவலையளிப்பதாக உள்ளது.

2011ஆம் ஆண்டு இங்கிலாந்து தொடர் 0-4 என்ற தோல்வியில் முடிந்தது. அது சில பெரிய வீரர்களின் கடைசி காலக்கட்டமாகவும் இருந்தது. திராவிட், லஷ்மண் ஓய்வு பெற்றனர். சச்சின் டெண்டுல்கர் 2013ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகிற்கு விடை கொடுத்தார்.

நடப்பு நிலைக்குத் திரும்பினால், இந்தத் தொடரில் இந்தியா 1-3 என்று தோல்வி தழுவியதில் இந்தியாவின் மைய வீரர்கள் எதிர்காலத்திற்குரியவர்கள் என்பதுதான் கவலையளிக்கும் விஷயமாக உள்ளது.

சார்பு ரீதியாகப் பார்க்கும்போது இங்கிலாந்து பந்து வீச்சு சிறப்பாகவே இருந்தது. ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் ஓய்வில்லாமல், தளராமல் பந்து வீசினர். அலிஸ்டர் குக் கூறியதை இங்கு நினைவு படுத்துவது நலம்: “ஆண்டர்சன், பிராட் வீசிய பல பந்துகளில் இங்கிலாந்து வீரர்களே கூட தாக்குப் பிடிப்பது கடினம் என்று நானும் ஜோஸ் பட்லரும் பேசிக்கொள்வோம்” என்றார் குக்.

தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து தொடர்களில் போராடி 0-1 என்று தோல்வி தழுவிய இதே வீர்ர்கள் தற்போது போராட்ட குணத்தை இழந்திருப்பது புரியாத புதிராக இருக்கிறது. நாட்டிங்கமில் நடந்த முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது மோசமான துவக்கம் அல்ல என்று இப்போது புரிகிறது.

டிரெண்ட் பிரிட்ஜில் புஜாரா, கோலி இருவரும் சோபிக்கவில்லை. விலைமதிப்பில்லா லார்ட்ஸ் வெற்றியிலும் கூட இவர்கள் பங்களிப்பு இல்லை. ஆனால் முரளி விஜய் (இந்த டெஸ்ட் தொடரில் 402 ரன்கள்), அஜிங்கிய ரஹானே மூலம் நம்பிக்கை துளிர்விட்டுள்ளது. இதனுடன் புவனேஷ் குமாரின் ஆல்ரவுண்ட் திறமைகள் ஆழமான அறிகுறியாகத் தெரிகிறது.

அதன் பிறகு இரண்டு விஷயங்கள் நடந்தது, இந்தியா படுதோல்வி கண்டது.

முதன்மையாக இங்கிலாந்து அதன் கர்வத்தினால் கடிவாளம் போட்டுக் கொண்டது. லார்ட்ஸில் இஷாந்த் சர்மாவின் பவுன்சருக்கு எதிராக ஹீரோயிசம் காண்பித்து அதன் தொடர்ச்சியாக நிலைகுலைந்தது.

முதல் நாள் காலை பந்து வீச்சில் பிராட், ஆண்டர்சன் லைன் மற்றும் லெந்த் சரியாக அமையவில்லை. ஆனால் கடைசி 3 டெஸ்ட் போட்டிகளில் இந்தப் பிரச்சனைகள் சரி செய்யப்பட்டது.

இந்தியாவை தடத்திலிருந்து கீழிறக்கிய 2வது விஷயம் புஜாரா, கோலி ஆகியோரது தடுமாற்றம். முதலில் வெறும் பாதை விலகலாகத் தெரிந்த இவர்களது தடுமாற்றம் பிறகு நோயாகவே மாறிவிட்டது.

உள்நோக்கி வரும் பந்துகளுக்கு புஜாரா சற்றே தாமதமாகச் சென்றார், கோலியோ ஆஃப் ஸ்டம்ப் பந்துகளின் மீது அதிக ஆர்வம் காட்டினார். விஜயும், ரஹானேயும் கூட இந்த தொடர் வண்டியில் ஏறியது மேலும் மோசமாக அமைந்தது. ரஹானே பவுலரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

பேட்டிங்கில் கேப்டன் தோனி காட்டிய தைரியமும் பொறுமையும் அவரது சகாக்களிடம் பிரதிபலிக்கவில்லை. தொடர் வீழ்ச்சிகள் இந்திய அணியை ஒளிவதற்கு இடமில்லாமல் செய்து விட்டது.

2011 ஆம் ஆண்டு டெஸ்ட் தொடர் பயங்கரங்களின் போது கூட இந்தியா எடுத்த 286, 261, 288, 158, 224, 244, 300, 283 ஆகிய மொத்த ரன் எண்ணிக்கையில் ராகுல் திராவிட் 3 சதங்களை எடுத்தார்.

இங்கிலாந்து அப்போது பலத்துடன் திகழ்ந்தது. குக் மற்றும் அவரது சகாக்கள் சிறந்த ஃபார்மில் இருந்தனர். இப்போது இந்தியா கடைசி டெஸ்ட் போட்டியில் 94 ரன்களுக்கு ஆட்டமிழந்து நம்பமுடியாமல் இந்திய அணி தலையாட்டிக் கொண்டிருப்பது மிகவும் சோகமானதே.

இந்தியாவுக்கு ஒரு சிறிய ஆறுதல் என்னவெனில், இஷாந்த், புவனேஷ், ஒரு சிறிய அளவுக்கு வருண் ஆரோன் ஆகியோர் செய்த முயற்சிகளே.

தொடக்கத்தில் விஜய் மட்டுமே செட்டில் ஆகியுள்ளார், தட்டுத் தடுமாறும் நடுக்கள பேட்டிங், கேட்ச்களைத் தொடர்ந்து கோட்டை விட்டுக் கொண்டிருக்கும் ஸ்லிப் பீல்டர்கள், சிறந்த ஆல்ரவுண்டருக்கான தேடல் ஆகியவை இந்திய அணியின் பெரும் கவலையாக இப்போது இருந்து வருகிறது.

இன்னும் ஒருவாரத்தில் தோனியும் அவரது சகாக்களும் ஒருநாள் கிரிக்கெட்டிற்காக நீலச் சீருடையில் களமிறங்கவுள்ளனர். எது எப்படியிருந்தாலும் ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் டெஸ்ட் தொடருக்கு முன்பாக இந்திய கிரிக்கெட் எழுச்சி கண்டாக வேண்டும். டிசம்பரில் தொடங்கும் ஆஸ்திரேலியா தொடர் போல் கடினம் வேறு எதுவும் இருக்க முடியாது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x