Published : 31 May 2024 11:04 AM
Last Updated : 31 May 2024 11:04 AM

ஏலத்துக்கு வரும் மரடோனாவின் 1986 WC 'கோல்டன் பால்'!

கோப்புப்படம்

பாரிஸ்: கால்பந்து உலகின் ஜாம்பவான் கடந்த 1986 ஃபிபா உலகக் கோப்பை தொடரில் வென்ற ‘கோல்டன் பால்’ விருது வரும் வாரம் ஏலத்துக்கு வருகிறது. அது குறித்து விரிவாக பார்ப்போம்.

கடந்த நூற்றாண்டின் சிறந்த கால்பந்தாட்ட வீரராக அறியப்படுபவர் டியாகோ மரடோனா. கடந்த 2020-ம் ஆண்டின் நவம்பர் மாதத்தில் காலமானார். அர்ஜென்டினா அணிக்காக 1977 முதல் 1994 வரையில் சர்வதேச அளவில் 91 போட்டிகளில் விளையாடியுள்ளார். அவர் தன் நாட்டுக்காக பதிவு செய்த மொத்த கோல்களின் எண்ணிக்கை 34.

நான்கு உலகக் கோப்பை தொடர்களில் விளையாடியுள்ளார். இதில் 1986 உலகக் கோப்பையை வென்றிருந்தது அர்ஜென்டினா. உலகக் கோப்பை வென்ற அணியின் கேப்டனாக செயல்பட்டவரும் மரடோனா தான். அந்த தொடரில் 5 கோல்களை அவர் பதிவு செய்திருந்தார். அதன் மூலம் தொடரின் சிறந்த வீரருக்கான விருதையும் அவர் வென்றிருந்தார்.

இந்த சூழலில் தான் பல தசாப்தங்களாக காணப்படாமல் இருந்த மரடோனாவின் கோல்டன் பால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அடையாளம் காணப்பட்டது. தற்போது அதனை பெஞ்சாய்ப் என்பவர் வைத்துள்ளார். அதனை பிரான்ஸ் நாட்டில் உள்ள Aguttes என்ற ஏல நிறுவனத்தின் மூலம் ஏலத்தில் விற்பனை செய்ய முடிவு செய்திருந்தார்.

இந்த நிலையில் அதை எதிர்த்து பிரான்ஸ் நாட்டு நீதிமன்றத்தில் மரடோனாவின் வாரிசுகள் அவசர வழக்கு ஒன்று தொடுத்தனர். ‘கோல்டன் பால்’ தங்கள் வசம் இருந்து களவு போனதாகவும் தெரிவித்தனர். தன்னிடம் உள்ள விருது களவாடிய பொருள் என்று தனக்கு தெரியாது என பெஞ்சாய்ப் தெரிவித்தார். அவர் சொல்வது உண்மை என்ற அடிப்படையில் அதனை ஏலத்தில் விடலாம் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இதே 1986 உலகக் கோப்பை தொடரில் மரடோனாவின் 'ஹேண்ட் ஆஃப் காட்' ஜெர்சியும் கடந்த 2022-ல் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது. அந்தப் போட்டி முடிந்ததும் இங்கிலாந்து தடுப்பாட்ட வீரர் ஸ்டீவ் ஹாட்ஜ் வசம் ஜெர்சியை மரடோனா கொடுத்திருந்தார். அது 7.14 மில்லியன் பவுண்டுகளுக்கு விற்பனையாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x