Published : 31 May 2024 06:12 AM
Last Updated : 31 May 2024 06:12 AM
ஐசிசி டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் 9-வது பதிப்பு வரும் ஜூன் 2 முதல் 29-ம் தேதி வரை அமெரிக்கா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகளில் நடைபெறுகிறது. இதில் இடம் பெற்றுள்ள 20 அணிகளும் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் ‘பி’ பிரிவில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து, 2021-ம் ஆண்டு சாம்பியனான ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுடன் நமீபியா, ஸ்காட்லாந்து, ஓமன் இடம் பெற்றுள்ளன. அந்த அணிகள் குறித்து ஒரு பார்வை…
ஆஸ்திரேலியா (2021-ம் ஆண்டு சாம்பியன்) - 2021-ம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலிய அணி அடுத்த ஆண்டு சொந்த மண்ணில் நடைபெற்ற டி 20 உலகக் கோப்பையில் அரை இறுதிக்குக்கூட முன்னேற முடியாமல் வெளியேறியது. எனினும் கடந்த ஆண்டில் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப், 50 ஓவர் உலகக்கோப்பையை வென்ற அந்த அணி டி 20 உலகக் கோப்பையையும் வசப்படுத்த முழு கவனம் செலுத்தக்கூடும்.
அணி: மிட்செல் மார்ஷ் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், டேவிட் வார்னர், அஷ்டன் அகர், ஜோஷ் இங்லிஸ், கிளென் மேக்ஸ்வெல், மேத்யூ வேட், டிம் டேவிட், கேமரூன் கிரீன், மார்கஸ் ஸ்டாயினிஸ், ஆடம் ஸம்பா, மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசில்வுட், நேதன் எலிஸ்.
கவனிக்கப்படக்கூடிய வீரர்: அதிரடி பேட்ஸ்மேனான டிராவிஸ் ஹெட், கடந்த ஆண்டு நடைபெற்ற ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப், 50 ஓவர் உலகக் கோப்பையை ஆஸ்திரேலியா வென்றதில் முக்கிய பங்குவகித்தார். சமீபத்தில் முடிவடைந்த ஐபிஎல் தொடரில் டிராவிஸ் ஹெட் 191.55 ஸ்டிரைக் ரேட்டில் 567 ரன்கள் குவித்திருந்தார். இந்த பார்மை டி 20 உலகக் கோப்பையில் அவர், தொடரச் செய்யக்கூடும்.
இங்கிலாந்து (2010, 2022-ம் ஆண்டு சாம்பியன்) - நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் களமிறங்கும் இங்கிலாந்து, தனது வழக்கமான தாக்குதல் ஆட்டத்தை தொடர்வதில் முனைப்பு காட்டக்கூடும். ஜோஃப்ரா ஆர்ச்சரின் வருகை அணியின் பந்து வீச்சு துறைக்கு கூடுதல் பலம் சேர்க்கக்கூடும். அணியில் அனைத்து விதமான அடிப்படை விஷயங்களும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது சாதகமான விஷயமாக பார்க்கப்படுகிறது.
அணி: ஜாஸ் பட்லர் (கேப்டன்), மொயீன் அலி, ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜானி பேர்ஸ்டோ, ஹாரி புரூக், சாம் கரன், பென் டக்கெட், டாம் ஹார்ட்லி, வில் ஜாக்ஸ், கிறிஸ் ஜோர்டான், லியாம் லிவிங்ஸ்டன், ஆதில் ரஷீத், பில் சால்ட், ரீஸ் டாப்லி, மார்க் வுட்.
கவனிக்கப்படக்கூடிய வீரர்: 2022-ம் ஆண்டு டி 20 உலகக் கோப்பையில் சேம் கரண் தனது ஆல்ரவுண்ட் திறனால் பலம் சேர்த்தார். அவருடன் இம்முறை மார்க் வுட், ஜோஃப்ரா ஆர்ச்சர், ரீஸ் டாப்லி ஆகியோரும் பந்து வீச்சில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நமீபியா: ஆப்பிரிக்க பிராந்திய தகுதிச் சுற்று ஆட்டத்தில் நமீபியா அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் டி20 உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றது. தகுதி சுற்று தொடரில் உகாண்டா, டெஸ்ட் அந்தஸ்து கொண்ட ஜிம்பாப்வே உட்பட 6 அணிகளை வீழ்த்தி தோல்வி அடையாமல் இருந்தது. கடந்த டி 20 உலகக் கோப்பை தொடரில் இலங்கையை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்திருந்த நமீபியா அணி இம்முறையும் அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க காத்திருக்கிறது.
அணி: ஜெரார்ட் எராஸ்மஸ் (கேப்டன்), ஜேன் கிரீன், மைக்கேல் வான் லிங்கன், டிலான் லீச்சர், ரூபன் டிரம்பெல்மேன், ஜாக் பிராசெல், பென் ஷிகோங்கோ, டான்ஜெனி லுங்கமெனி, நிகோ டேவின், ஜே.ஜே.ஸ்மிட், ஜான் ஃப்ரைலிங்க், ஜே.பி.கோட்ஸ், டேவிட் வைஸ், பெர்னார்ட் ஷோல்ட்ஸ், மலன் க்ரூகர், பி.டி. பிளிக்னாட்
கவனிக்கப்படக்கூடிய வீரர்: கேப்டன் அகிப் இலியாஸ் ஆல்ரவுண்டராக அணிக்கு பலம் சேர்க்கக்கூடும். டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான அவர், சுழற்பந்து வீச்சிலும் கைகொடுக்கக்கூடியவர்.
ஸ்காட்லாந்து: ரிச்சி பெரிங்டன் தலைமையிலான ஸ்காட்லாந்து அணியில் உள்ள பெரும்பாலான வீரர்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் டி 20 லீக்கில் விளையாடிய அனுபவம் கொண்டவர்கள். கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் போட்டியில் ஸ்காட்லாந்து அணி இங்கிலாந்தை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்திருந்தது. தற்போது டி 20 உலகக் கோப்பையில் அந்த அணி ஜூன் 4-ல் இங்கிலாந்தை சந்திக்கிறது.
அணி: ரிச்சி பெரிங்டன் (கேப்டன்), மேத்யூ கிராஸ், பிராட் கியூரி, கிறிஸ் கிரீவ்ஸ், ஒலி ஹேர்ஸ், ஜாக் ஜார்விஸ், மைக்கேல் ஜோன்ஸ், மைக்கேல் லீஸ்க், பிரண்டன் மெக்முல்லன், ஜார்ஜ் முன்சி, சஃபியான் ஷெரீப், கிறிஸ் சோல், சார்லி டியர், மார்க் வாட், பிராட் வீல்.
கவனிக்கப்படக்கூடிய வீரர்: இடது கை சுழற்பந்து வீச்சாளரான மார்க் வாட் அணியின் சிறந்த பந்து வீச்சாளராக திகழ்கிறார். பேட்ஸ்மேனின் மனநிலை மற்றும் சூழ்நிலைக்கு ஏற்றவாறு பந்து வீசுவதில் திறன் படைத்தவராக அறிப்படுகிறார். உலகக் கோப்பை தகுதி சுற்றில் இலங்கை, மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டிருந்தார்.
ஓமன்: ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ள ஆசிய கண்டத்தை சேர்ந்த ஒரே அணி ஓமன் மட்டுமே. அந்த அணி 3-வது முறையாக டி 20 உலகக் கோப்பை தொடரில் கலந்து கொள்கிறது. ஓமன் தனது முதல் ஆட்டத்தில் நமீபியாவுடன் மோதுகிறது. கடந்த காலங்களில் இரு முறை ஓமன் அணியை நமீபியா வீழ்த்தியுள்ளது. இதற்கு இம்முறை ஓமன் பதிலடி கொடுக்க முயற்சிக்கக்கூடும்.
அணி: அகிப் இலியாஸ் (கேப்டன்), ஜீஷன் மக்சூத், காஷ்யப் பிரஜாபதி, பிரதிக் அதாவலே, அயான் கான், சோயிப் கான், முகமது நதீம், நசீம் குஷி, மெஹ்ரான் கான், பிலால் கான், ரபியுல்லா, கலீமுல்லா, ஃபயாஸ் பட், ஷகீல் அகமது, காலித் கைல்.
கவனிக்கப்படக்கூடிய வீரர்: கேப்டன் அகிப் இலியாஸ் ஆல்ரவுண்டராக அணிக்கு பலம் சேர்க்கக்கூடும். டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான அவர், சுழற்பந்து வீச்சிலும் கைகொடுக்கக்கூடியவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT