Published : 29 May 2024 05:26 PM
Last Updated : 29 May 2024 05:26 PM
மேற்கு இந்திய தீவுகளில் நடைபெறவிருக்கும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான வங்கதேச அணியில் ரிஷாத் ஹுசைன் என்ற உயரமான ரிஸ்ட் லெக் ஸ்பின்னரை அணியில் சேர்த்துள்ளனர்.
ரிஷாத் ஹுசைனுக்கு வயது 21 தான். இவர் இதுவரை 3 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும், 17 டி20 சர்வதேசப் போட்டிகளிலும் ஆடியுள்ளார். டி20 சர்வதேசப் போட்டிகளில் இதுவரை 15 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். அதிகபட்சமாக 21 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை எடுத்தது சிறந்த பந்து வீச்சாக உள்ளது. ஆனால் இவரது சிக்கன விகிதம்தான் நம் கவனத்திற்குரியது 7.17 தான் இவரது சிக்கன விகிதம்.
கடைசியில் இறங்கி பேட்டிங்கிலும் காட்டடி சிக்சர்களை அடிக்கக் கூடியவர். ஒருநாள் போட்டிகளில் இவரது அதிகபட்ச ஸ்கோர் 48, ஸ்ட்ரைக் ரேட் 245.45. டி20களில் அதிகபட்ச ஸ்கோர் 53, ஸ்ட்ரைக் ரேட் 135.
வங்கதேச அணியில் இதுவரை பார்த்தோமானால் லெக் ஸ்பின் பவுலர் அதிகம் ஆடிப்பார்த்திருக்க மாட்டோம். நாம் இதைப் பற்றி யோசித்திருக்கவும் மாட்டோம். ஏன் வங்கதேச அணியில் இடது கை ஸ்பின்னர்கள் வரும் அளவுக்கு லெக் ஸ்பின்னர் வருவதில்லை என்ற கேள்வி நமக்கு எழுந்ததில்லை. காரணம் லெக் ஸ்பின்னர்களை சரியாக மதிப்பிடத் தெரியாத கிரிக்கெட் உலகம் அது. ஓவருக்கு 6 ரன்களுக்கும் மேல் கொடுக்கும் லெக் ஸ்பின்னர்களுக்கு அங்கு உள்நாட்டு கிரிக்கெட்டிலேயே இடமிருக்காது என்றுதான் வங்கதேச கிரிக்கெட் பற்றிய விவரம் தெரிந்தவர்கள் கூறுகிறார்கள்.
லெக் ஸ்பின் என்றால் ரன் கொடுப்பார்கள் என்ற பிற்போக்குச் சிந்தனை அங்கு நிலவுவதாக வங்கதேச கிரிக்கெட்டின் உள்கட்டமைப்பு மற்றும் அதன் மனநிலைகளை அறிந்தவர்கள் கூறுகிறார்கள். இதுவரை 2 லெக் ஸ்பின்னர்கள்தான் ரிஷாத் ஹுசைனுக்கு முன்னால் வங்கதேச அணிக்கு ஆடியுள்ளனர். வாஹிதுல் கனி, இவர் ஒரேயொரு ஒரு நாள் சர்வதேசப் போட்டியுடன் முடிந்தார். ஜுபைர் ஹுசைன் இவர் எப்படியோ 10 போட்டிகளில் ஆட முடிந்துள்ளது.
இத்தகைய ஒரு சூழலிலிருந்து ரிஷாத் ஹுசைன் என்பவரை வங்கதேச கிரிக்கெட் வாரியம் டி20 அணியில் தேர்வு செய்துள்ளது என்றால், அவரிடம் அசாதாரணமான திறமைகள் இருக்க வேண்டும். கடந்த ஆண்டு அயர்லாந்துக்கு எதிராக இவர் டி 20-யில் அறிமுகமானார்.
யுஎஸ்ஏ அணிக்கு எதிராக இப்போது தொடரை இழந்த வங்கதேச அணியில் ரிஷாத் ஹுசைன் இருந்தார். 4 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றினார். ஆனால் இவரது சிக்கன விகிதம் 4.40 என்றால் நம்ப முடிகிறதா?. வெளிநாட்டு மண்ணில் வங்கதேச பவுலர் ஒருவரின் சாதனை சிக்கன விகிதமாகும் இது.
வங்கதேசத்தில் லெக் ஸ்பின் பற்றி கருத்து கூறும் இப்போதைய யு.எஸ்.ஏ அணியின் பயிற்சியாளரும் முன்னாள் வங்கதேச பயிற்சியாளரும் ஆஸ்திரேலிய வீரருமான ஸ்டூவர்ட் லா, இப்படிக் கூறுகிறார்: “லெக் ஸ்பின்னர்களை வங்கதேச கிரிக்கெட் உலகம் நம்புவதில்லை. இடது கை ஸ்பின்னைத்தான் நம்புவார்கள். ஆனால், இந்த ரிஷாத் அட்டகாசமாக வீசுகிறார். அதுவும் ஸ்பின் சுத்தமாக எடுக்காதப் பிட்சில்” என்றார்.
இவர் பெரிய அளவில் பந்துகளைத் திருப்புபவர் அல்ல. மாறாக போதுமான அளவு திருப்பி பேட்டர்களுக்குக் கடினமான நேரத்தை அளிப்பவர். நியூஸிலாந்தில் டூர் மேட்ச் ஒன்றில் 54 பந்துகளில் 87 ரன்களையும் விளாசியுள்ளார் ரிஷாத் ஹுசைன். இதனையடுத்தே பயிற்சியாளர் ஹதுர சிங்கே இவருக்கு ஒருநாள் சர்வதேசப் போட்டியில் ஆட வாய்ப்பு வழங்கினார். இவர் உயரமாக இருப்பதால் கரெக்டாக யார்க்கர் லெந்தில் துல்லியமாக வீசி பேட்டர்களுக்கு எந்த ஒரு இடமும் கொடுப்பதில்லை என்கிறார் ஹதுர சிங்கே. ஒரு நாள் சர்வதேசப் போட்டியில் இலங்கைக்கு எதிராக 8வது டவுனில் இறங்கி 18 பந்துகளில் 5 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 48 ரன்களை விளாசி வெற்றி பெற வைத்தார்.
எனவே இந்த முறை இந்த இளைஞர் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பளித்தால் ரிஸ்ட் ஸ்பின்னர்கள் பலர் அடங்கிய இந்த உலகக் கோப்பையில் வங்கதேசமும் ஒரு அடையாளத்தைப் பெற வாய்ப்புள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT