Published : 28 May 2024 06:42 AM
Last Updated : 28 May 2024 06:42 AM
சென்னை: ஐபிஎல் தொடரில் சீசன் முழுவதும் வெல்ல முடியாத அணியாக நாங்கள் விளையாடினோம் என்றுசாம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் தெரிவித்தார்.
ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணியை 113 ரன்களுக்கு சுருட்டியது கொல்கத்தா அணி. எளிதான இலக்கை விரட்டிய கொல்கத்தா 10.3 ஓவர்களிலேயே 114 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
வெற்றிக்குப் பின்னர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் கூறியதாவது: இது முற்றிலும் எங்களது விரிவான வெற்றி. இதைத்தான் நாங்கள் எங்கள் அணியிடம் இருந்தும், ஒவ்வொரு வீரரிடம் இருந்தும் சரியான சந்தர்ப்பத்தில் கோரினோம். அதை அவர்கள் திறம்பட செய்துள்ளனர். இந்த சீசன்முழுவதும் நாங்கள் வெல்ல முடியாத அணியாக விளையாடினோம். பாராட்டுவதற்கு நிறைய விஷயங்கள் உள்ளன. இந்த உணர்வை வெளிப்படுத்துவது கடினம். இது மகிழ்ச்சி அளிக்கிறது, எங்களது செயல்திறன் முழுவதும் குறைபாடற்றது. இதை வெளிப்படுத்த எனக்கு வார்த்தைகள் இல்லை.
பந்து வீச்சாளர்கள் அனைவரும் செயல்பட்ட விதம் மகிழ்ச்சிஅளிக்கிறது. நாங்கள் முதல் ஆட்டத்தில் இருந்தே சிறப்பாக செயல்பட்டு வந்தோம். இறுதிப் போட்டியிலும் முன்னேறியபடி சென்றோம். சூழ்நிலை எதுவாக இருந்தாலும் ஒருவரையொருவர் ஆதரித்து ஆட்டத்தைமுன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று எங்களுக்குள் கூறிக்கொண்டோம். அதிர்ஷ்டவசமாக நாங்கள் முதலில் பந்து வீசினோம். அனைத்து சூழ்நிலைகளும் எங்களுக்கு சாதகமாக அமைந்தது.
எப்போதுமே சிறந்த வீரர்கள் சரியான சந்தர்ப்பத்தில் எழுச்சி பெறுவார்கள். இதை மிட்செல்ஸ்டார்க் செய்தார். இது நெருக்கடியான ஆட்டம், அவர் களத்திற்கு வெளியேயும் சிறப்பாக செயல்பட்டார். ஸ்டார்க் தனதுபயிற்சி முறைகளிலும் தன்னுடைய வேலையிலும் எந்தவித மெத்தனத்தையும் காட்டவில்லை. இதேபோன்று ஆந்த்ரே ரஸ்ஸல் மந்திரக்கோலை வைத்திருக்கிறார், அவர் எப்போதுமே விக்கெட்டுகளை வீழ்த்த காத்திருக்கிறார். அனைத்து வீரர்களும் சரியான நேரத்தில் கைகொடுத்தனர். இது எனது பணியை எளிதாக்கியது. இது ஒரு குறைபாடற்ற சீசனாக எங்களுக்கு அமைந்தது.
இவ்வாறு ஸ்ரேயஸ் ஐயர் கூறினார்.
கொல்கத்தாவுக்கு ரூ.20 கோடி பரிசு: ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கோப்பையுடன் ரூ.20 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது. 2-வது இடம் பிடித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ரூ.13 கோடியை பெற்றது. அதேவேளையில் 3-வது இடம் பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ரூ.7 கோடியும், 4-வது இடம் பிடித்த ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு ரூ.6.5 கோடியும் வழங்கப்பட்டது.
விராட் கோலிக்கு ரூ.10 லட்சம்: ஐபிஎல் தொடரின் 17-வது சீசனில் 741 ரன்கள் குவித்து அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்த ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலிக்கு ரூ.10 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. விராட் கோலி இந்த சீசனில் ஒரு சதம், 5 அரை சதங்களை விளாசியிருந்தார். அவரது ஸ்டிரைக் ரேட் 154.69 ஆக இருந்தது.
வளர்ந்து வரும் வீரர்: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் நிதிஷ் குமார் ரெட்டிக்கு வளர்ந்து வரும் வீரருக்கான விருதுடன் ரூ.20 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. ஆல்ரவுண்டரான அவர், மட்டை வீச்சில் 303 ரன்களும், பந்து வீச்சில் 3 விக்கெட்களையும் கைப்பற்றியிருந்தார்.
சிறந்த பந்து வீச்சாளர்: ஐபிஎல் தொடரில் 24 விக்கெட்களை வீழ்த்தி அதிக விக்கெட்கள் வீழ்த்தியவர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்த பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஹர்ஷால் படேலுக்கு ரூ.10 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
மதிப்புமிக்க வீரர்: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆல்ரவுண்டரான சுனில் நரேனுக்கு மதிப்புமிக்க வீரர் விருதுடன் ரூ.12 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT