Published : 27 May 2024 04:53 PM
Last Updated : 27 May 2024 04:53 PM

ஹர்ஷல் படேல் முதல் நடராஜன் வரை: ஐபிஎல் 2024 விக்கெட் வேட்டையில் டாப் 5 வீரர்கள்

சென்னை: நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களுக்கான பர்ப்பிள் நிற தொப்பியை வென்றுள்ளார் ஹர்ஷல் படேல். ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. பேட்ஸ்மேன்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட இந்த சீசனில் பந்துவீச்சாளர்களும் திறம்பட செயல்பட்டனர். அதன்படி, இந்த தொடரில் விக்கெட் வேட்டை நடத்திய வீரர்களில் முதலிடத்தில் ஹர்ஷல் படேல் உள்ளார். விக்கெட் வேட்டையில் டாப் 5 வீரர்கள்:

ஹர்ஷல் படேல்: இந்த சீசனில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களுக்கான பர்ப்பிள் நிற தொப்பியை வென்றுள்ளார் ஹர்ஷல் படேல். இந்த சீசனில் பஞ்சாப் அணிக்காக விளையாடிய ஹர்ஷல், வழக்கம் போல் தனது ஸ்லோயர் பந்துகளை வீசி பேட்ஸ்மேன்களை வெளியேற்றினார். 14 போட்டிகளில் 24 விக்கெட் வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார். சராசரி 19.87, எகனாமி 9.73. சிறந்த பந்துவீச்சு 3/15.

ஹர்ஷல் படேல் பர்ப்பிள் நிற தொப்பியை வெல்வது இது இரண்டாவது முறை. முன்னதாக, 2021 சீசனில் 32 விக்கெட்களை வீழ்த்தி பர்ப்பிள் நிற தொப்பியை வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வருண் சக்கரவர்த்தி: நடப்பு சீசனில் 15 போட்டிகளில் 21 விக்கெட் வீழ்த்தியுள்ளார் வருண் சக்கரவர்த்தி. நடு ஓவர்களில் ரன் குவிப்பை வெகுவாக கட்டுப்படுத்தும் துருப்பு சீட்டாக கொல்கத்தா அணிக்கு விளங்கிய இவரின் சராசரி 19.14, எகனாமி 8.04, சிறந்த பந்துவீச்சு 3/16. சுனில் நரேனுடன் சேர்ந்து பேட்ஸ்மேன்களை ரன் குவிக்கவிடாமல் தடுத்த இவரின் ஸ்லோயர் பந்துகள் கொல்கத்தா மூன்றாவது முறையாக கோப்பையை வெல்லும் அளவுக்கு கொண்டு சென்றது.

ஜஸ்ப்ரீத் பும்ரா: மும்பை இந்தியன்ஸ் அணியில் நடப்பு சீசனின் ஒரே ஆறுதல் பும்ரா மட்டுமே. அந்த அணியில் இருந்து டாப் 15க்குள் இடம்பெற்ற ஒரே வீரரும் பும்ராவே. ஒரு ஐந்து விக்கெட் ஹாலுடன் 13 போட்டிகளில் 20 விக்கெட் வீழ்த்தி அசத்தல் பார்மை இந்த சீசனில் வெளிப்படுத்தி டாப் 3 பவுலராக இடம்பிடித்துள்ளார் பும்ரா. அவரின் சராசரி 16.80, எகனாமி 6.48, சிறந்த பந்துவீச்சு 5/21. இந்திய அணி டி20 உலகக் கோப்பை தொடருக்காக அமெரிக்கா சென்றுள்ள நிலையில், பும்ராவின் இந்த அசத்தல் பார்ம் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

நடராஜன்: ‘யார்க்கர்’ நட்டு என்று செல்லமாக அழைக்கப்படும் நடராஜன் வழக்கம் போல் இந்த சீசனிலும் தனது சிக்கன பந்துவீச்சால் எதிரணி ரன்கள் குவிப்பை வெகுவாக கட்டுப்படுத்தி தனது அணியை பைனலுக்கு அழைத்துச் சென்றதில் முக்கிய பங்கு வகித்தார். இந்த சீசனில் சிறந்த பந்துவீச்சாக 19 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். மொத்தமாக 14 போட்டிகளில் 19 விக்கெட் வீழ்த்திய அவரின் சராசரி 24.47, எகனாமி 9.05 ஆகும்.

ஹர்ஷித் ராணா: கொல்கத்தா அணியின் லேட்டஸ்ட் வரவு இந்த ஹர்ஷித் ராணா. இவரின் பவுலிங்கிற்கு சிறந்த சாட்சி நேற்றைய இறுதிப்போட்டி. ஐபிஎல் பைனலில் ஒரு மெய்டன் ஓவருடன் 2 விக்கெட் என்பது சிறந்த பந்துவீச்சு. அவரின் அசத்தல் பந்துவீச்சால் சன்ரைசர்ஸ் விக்கெட்களை பறிகொடுத்து தோல்வியை தேடியது. நடப்பு சீசனில் 15 போட்டிகளில் 19 விக்கெட் வீழ்த்தியுள்ளார். அவரின் சராசரி 20.15, எகனாமி 9.05, சிறந்த பந்துவீச்சு 3/24.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x