Published : 27 May 2024 11:36 AM
Last Updated : 27 May 2024 11:36 AM

“என் சகாவிடம் தோற்றுவிட்டோம்” - தோல்விக்குப் பிறகு பாட் கமின்ஸ்

2024 ஐபிஎல் சாம்பியன் அணியாக கம்பீர் வழிநடத்திய ஸ்ரேயஸ் அய்யர் தலைமையில் சுனில் நரைன், ஆந்த்ரே ரஸல், ஸ்டார்க் கூட்டணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மூன்றாவது முறையாக கோப்பையை வென்றது குறித்து இந்த ஐபிஎல் தொடரின் 2வது சிறந்த அணியான சன் ரைசர்ஸின் கேப்டன் பாட் கமின்ஸ் ‘நண்பனிடம் தோற்றோம்’ என்று மிட்செல் ஸ்டார்க்கை புகழ்ந்து தள்ளியுள்ளார்.

அதாவது உண்மையான பவுலிங், உண்மையான பேட்டிங் பவர் ஆகியவற்றுக்கு எதிராக ஐபிஎல் அணிகள் எதுவுமே ஆட முடியாது என்பதைத்தான் பல்வேறு போட்டிகள் பறைசாற்றின. சீரியஸாக ஆடினால் சாமானிய வீரர்கள், சாமானிய அணிகள் வெல்ல முடியாது என்பதுதான் உண்மை. சன்ரைசர்ஸ் அணியும் பிரமாதமாக சீரியசாக ஆடியப் போட்டிகள் உள்ளன. சிஎஸ்கே சீரியசாக ஆடியப் போட்டிகள் உள்ளன. எல்லா அணிகளுமே பிக் பாஸ் வீட்டுப் பாணி பொழுதுபோக்கு அம்சம், உருவாக்கப்பட்ட சண்டை சச்சரவு, விளம்பர வெறி போன்றவற்றிலிருந்து விடுபட்டு ஆடினால் உண்மையான திறமை வெளிப்படும்.

மிட்செல் ஸ்டார்க் நேற்று அத்தகைய ஒரு சீரியஸான பவுலிங்கை வீசிக்காட்டினார். 2015 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் வீசிய அதே வேகம் அதே ஆக்ரோஷம். அதே சைலண்ட் கில்லர் அணுகுமுறை. ஐபிஎல் கிரிக்கெட்டின் காஸ்ட்லியான வீரரான மிட்செல் ஸ்டார்க் தன் மதிப்பு என்ன என்பதைக் காட்டிவிட்டார். பிளே ஆஃப் முதல் சுற்றில் ட்ராவிஸ் ஹெட் குச்சியைப் பெயர்த்தார். சீரியசான பவுலிங்கை அபிஷேக் சர்மா போன்ற அனாயாச மட்டைச் சுழற்றிகள் ஆட முடியவில்லை.

குட் லெந்தில் பிட்ச் ஆன பந்துக்கு முன் காலை கொண்டு வரவில்லை அபிஷேக் சர்மா. ஏனெனில் சுலபமான பந்து வீச்சுக்கு எதிராக தூக்கித் தூக்கி அடித்து பழக்கப்பட்ட கைகளும் கால்களும் மரபான கால் நகர்த்தல்களை மறந்து போனது. ஸ்டார்க் பந்து லெக் ஸ்டம்பில் பிட்ச் ஆகி லேட் ஸ்விங் ஆகி ஆஃப் ஸ்டம்ப்பைப் பதம் பார்த்தது.

அதே போல்தான் அரோரா வீசிய அற்புத ஸ்விங் பந்தை ஹெட் எட்ஜ் செய்தார். த்ரிப்பாட்டி மீண்டும் ஸ்டார்க்கின் வேகத்திற்குக் காலியாக, பிறகு ரஸல் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்ற எஸ்.ஆர்.எச். அணி எழும்ப முடியாமல் 113 ரன்களுக்கு மடிய, மேட்ச் 10.3 ஓவர்களில் முடிந்தது. போட்டி முடிந்த பிறகு பரிசளிப்பு நிகழ்ச்சியில் பேசிய சன் ரைசர்ஸ் கேப்டன் பாட் கமின்ஸ், தனது ‘பழைய சகா’ மிட்செல் ஸ்டார்க் வேலையக் காட்டிவிட்டார் என்ற தொனியில் பாராட்டிப் பேசினார்.

கொல்கத்தா அணி பிராமதமாக வீசினர். இன்று எங்கள் ஆட்டம் போதவில்லை. எங்களை அவர்கள் சுத்தமாக தோற்கடித்துவிட்டார்கள். அவர்கள் எங்களுக்கு இடமே கொடுக்கவில்லை. இது 200 ரன்களுக்கும் கூடுதலாக எடுக்கக் கூடிய பிட்ச் அல்ல. கொஞ்சம் கோளாறான பிட்ச்.

ஒருவேளை 160 ரன்கள் எடுத்திருந்தால் ஒரு வாய்ப்பு இருக்கிறதா என்று மோதிப் பார்த்திருக்கலாம். துரதிர்ஷ்டவசமாக என் பழைய சகா மிட்செல் ஸ்டார்க் எங்களுக்கு எதிராக போட்டியையே திருப்பி விட்டார். கொஞ்சம் கூடுதல் ரன்களை எடுத்திருந்தால் முயற்சி செய்திருக்கலாம்.

ஆட்டத்தின் தொடக்கத்தில் சிலபல பவுண்டரிகளை விளாசியிருந்தால் அது ஒரு முன்னோக்கிய உந்துதலை வழங்கியிருக்கும். ஆனால் இங்குதான் அவர்கள் நன்றாக வீசிவிட்டார்கள், எங்களுக்கு எழும்ப வாய்ப்பே கொடுக்கவில்லை. பிளே ஆஃப் முதல் போட்டியைப் போலவே இந்த முறையும் அவர்கள் எதையும் வழங்கவில்லை.

ஆனால் எங்கள் அணியின் பேட்டர்கள் ஐபிஎல் போன்ற போட்டித் தொடரின் உயர் அழுத்தச் சூழ்நிலைகளில் தைரியமாக மட்டையைச் சுழற்றி அதிரடியாக ஆடினர். மூன்று முறை 250 ரன்களுக்கும் மேல் அடிப்பதெல்லாம் சாதாரணமல்ல. ரசிகர்கள் இந்த அணுகுமுறையை ரசிக்கின்றனர், நானும் ரசிக்கிறேன். எங்களுக்கு இது நல்ல சீசன், தனிப்பட்ட முறையில் எனக்கும் இது நல்ல சீசன்.” என்றார் கமின்ஸ்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x