Last Updated : 11 Apr, 2018 04:19 PM

 

Published : 11 Apr 2018 04:19 PM
Last Updated : 11 Apr 2018 04:19 PM

சென்னையில் இருந்து ஐபிஎல் போட்டிகள் வேறு மாநிலத்துக்கு மாற்றம்?: கேரளாவில் நடத்த முடிவு?

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி மத்திய அரசுக்கு எதிராக தமிழகத்தில் போராட்டம் வலுத்து வரும் நிலையில், சென்னையில் அடுத்து நடக்கும் ஐபிஎல் போட்டிகள் அனைத்தையும் வேறு மாநிலத்துக்கு மாற்ற ஐபிஎல் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

காவிரி நதிநீர் பங்கீடு வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 16-ம் தேதி அளித்த இறுதித் தீர்ப்பில் 6 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட்டது. ஆனால், உச்ச நீதிமன்றம் விதித்த கெடு முடிந்தபின், அந்தத் தீர்ப்பில் உள்ள ஸ்கீம் என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டு மத்திய அரசு சீராய்வு மனுத்தாக்கல் செய்தது.

இதனால், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்தாமல் மத்திய அரசு தாமதம் செய்து வருவதாக குற்றம்சாட்டியும், உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக் கோரி தமிழக்தில் உள்ள அரசியல் கட்சிகள் தீவிரமாக தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றன.

இதற்கிடையே நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடந்தது. இந்த போட்டியை நடத்த எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் நேற்று அண்ணா சாலை, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி ஆகிய பகுதிகளில் போராட்டம் நடத்தினார்கள். இதனால் 2 மணிநேரத்துக்கும் மேலாக போக்குவரத்து ஸ்தம்பித்தது.

இதற்கிடையே ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுல்லா திட்டமிட்டபடி சென்னையில் ஐபிஎல் போட்டிகள் அனைத்தும் நடக்கும். அதில் மாற்றம் ஏதும் இல்லை, அதற்கு தேவையான போலீஸ் பாதுகாப்பை சென்னை காவல்துறையும், மத்திய அரசும் தர ஒப்புக்கொண்டுள்ளது எனத் தெரிவித்தார்.

ஆனால், ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை காண ரசிகர்கள் தீவிரமான பாதுகாப்பு சோதனைக்கு பின்பே மைதானத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். அப்படி இருந்தும், மைதானத்தில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த ஆதரவாளர்கள் சிலர் செருப்புகளை வீசி எறிந்தனர். இதனால், சிறிது நேரம் ஆட்டம் தடை பட்டது.

ஆனால், அரங்கில் பெரும்பாலான ரசிகர்கள் இல்லாமல் காலியாகவே இருந்தது. இந்நிலையில் அடுத்துவரும் போட்டிகளையும் சென்னையில் நடத்த அனுமதிக்கமாட்டோம் என்று ஒரு சில அரசியல் கட்சிகள் மிரட்டல் விடுத்துள்ளன.

இதனால், சென்னையில் அடுத்து நடக்க இருக்கும் 6 போட்டிகளையும் வேறு மாநிலத்துக்கு மாற்ற ஐபிஎல் நிர்வாகம் ஆலோசித்து வருவதாக ஏஎன்ஐ ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன.

சென்னையில் இருந்து ஐபிஎல் போட்டிகள் கேரளாவின் திருவனந்தபுரம், அல்லது கொச்சி நகருக்கு மாற்றப்பட வாய்ப்புள்ளது. ஏனென்றால், கடந்த ஞாயிற்றுக்கிழமை கேரள கிரிக்கெட் அமைப்பின் அதிகாரி ஜெயேஷ் ஜார்ஜ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், சென்னையில் நடக்கும் ஐபிஎல் போட்டிகளை இடமாற்றம் செய்யும் பணிகள் தொடங்கிவிட்டன.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை நிர்வாக அதிகாரி கே.எஸ்.விஸ்வநாதன் பிசிசிஐ செயல் அதிகாரி அமிதாப் சவுத்ரி, ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா ஆகியோர் ஐபிஎல் போட்டிகளை மாற்றுவது குறித்து என்னிடம் தொலைபேசியில் பேசி இருக்கிறார்கள்.திருவனந்தபுரம், கொச்சி நகரில் ஐபிஎல் போட்டிகளை நடத்த விருப்பமாக இருப்பதாக நாங்கள் தெரிவித்து இருக்கிறோம். இது தொடர்பாக அடுத்த சில நாட்களில் முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவித்து இருந்தார்.

ஆதலால், சென்னையில் இருந்து போட்டிகளை மாற்றும்பட்சத்தில் அது திருவனந்தபுரம், அல்லது கொச்சியில் நடக்க வாய்ப்புள்ளது.

இதனால், வரும் 20-ம் தேதி சிஎஸ்கே- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதும்போட்டி, 28-ம் தேதி சென்னை அணியும், டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் மோதும் போட்டி நடக்கிறது.

மே 5-ம் தேதி சென்னை அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன, 13-ம் தேதி சென்னை அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடுகின்றன, 20-ம் தேதி சிஎஸ்கேயும், கிங்ஸ் லெவன் அணியும் மோதுகின்றன. இந்த போட்டிகள்அனைத்தும் வேறு மாநிலத்துக்கு மாற்றப்படலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x