Last Updated : 24 May, 2024 10:55 AM

 

Published : 24 May 2024 10:55 AM
Last Updated : 24 May 2024 10:55 AM

அகில இந்திய ஹாக்கி போட்டி முதல் லீக் ஆட்டம்: சென்னை வருமான வரித்துறை அணி வெற்றி

கோவில்பட்டி: கோவில்பட்டி கே.ஆர்.மருத்துவம் மற்றும் கல்வி அறக்கட்டளையின் சார்பில், கே.ஆர்.கல்வி நிறுவனங்கள், இலட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் இலட்சுமி அம்மாள் நினைவு கோப்பைக்கான 13-வது அகில இந்திய ஹாக்கிப் போட்டிகள் காலை இன்று 7 மணிக்கு தொடங்கின.

கோவில்பட்டி கிருஷ்ணா நகர் செயற்கை புல்வெளி மைதானத்தில் நடந்த தொடக்க விழாவில், கே.ஆர்.கல்வி நிறுவனங்களின் தாளாளர் கே.ஆர்.அருணாச்சலம் தலைமை வகித்தார். இந்திய அணியின் முன்னாள் ஹாக்கி வீரரும், சென்னை ரிசர்வ் வங்கி மேலாளருமான ஆர்.ராதாகிருஷ்ணன் போட்டிகளை தொடங்கி வைத்தார். போட்டிகள் ஜூன் 2-ம் தேதி வரை நடைபெற உள்ளன. இப்போட்டிகள் கால் இறுதிக்கு முந்தைய ஆட்டம் வரையில் லீக் முறையிலும், கால் இறுதி, அரை இறுதி மற்றும் இறுதி போட்டிகள் அனைத்தும் நாக் அவுட் முறையிலும் நடைபெறுகிறது.

போட்டியில் 16 அணிகள் கலந்து கொண்டு விளையாடுகின்றன. தொடக்க விழாவில், கே.ஆர்.கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள் கே.காளிதாஸ் முருகவேல், எஸ்.மதிவண்ணன், அ.ராஜேஸ்வரன் மற்றும் ஏராளமான ஹாக்கி ரசிகர்கள் கலந்து கொண்டனர்.

இன்று காலை நடந்த முதல் லீக் ஆட்டத்தில் போபால் என்.சி.ஓ.இ. (நேஷனல் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ்) அணியும், சென்னை வருமான வரித்துறை அணியும் மோதின. இதில் 1 : 0 என்ற கோல் கணக்கில் சென்னை வருமான வரித்துறை அணி வெற்றி பெற்றது.

போட்டிகளில் முதலிடம் பெறும் அணிக்கு ரூ.1 லட்சமும், 2-வது இடம் பெறும் அணிக்கு ரூ.75 ஆயிரமும், 3-வது இடம் பெறும் அணிக்கு ரூ.50 ஆயிரமும், 4-வது இடம் பெறும் அணிக்கு ரூ.30 ஆயிரமும் இலட்சுமி அம்மாள் நினைவு சுழற்கோப்பையுடன் வழங்கப்பட உள்ளது.

போட்டிக்கான ஏற்பாடுகளை கே.ஆர்.கல்வி நிறுவனங்களின் உடற்கல்வி இயக்குநர்கள், ஹாக்கி பயிற்சியாளர்கள், அனைத்து துறைப் பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x