Published : 23 May 2024 07:07 PM
Last Updated : 23 May 2024 07:07 PM
தற்போதைய ஐபிஎல் தொடரில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய எழுச்சிமிகு கேகேஆர் அணியின் தலைமை ஆலோசகர் கவுதம் கம்பீரை இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கலாம் என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் பரிந்துரைத்துள்ளார்.
ராகுல் திராவிட்டின் ஒப்பந்தம் வரும் டி20 உலகக் கோப்பையுடன் நிறைவுறுவதால் அவருக்கு அடுத்தபடியாக கம்பீரை நியமிக்கலாம் என்ற பேச்சுக்கள் கிரிக்கெட் வட்டாரங்களில் கிசுகிசுக்கத் தொடங்கியுள்ளன.
ஸ்போர்ட்ஸ் தளம் ஒன்றுக்கு பேட்டியளித்த வாசிம் அக்ரம், “ஆம்! கவுதம் கம்பீர்தான் சரியான நபர். ஆனால் கவுதம் கம்பீர் அந்த வாய்ப்பு வந்தால் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதுதான். கம்பீர் அரசியிலிலிருந்தும் விலகிவிட்டார். ஏனெனில் அரசியல் நிறைய நேரத்தைத் தின்றுவிடும். அவர் புத்திசாலியாக இருப்பதால் அரசியல் காலத்தை விழுங்கும் பணி என்பதைப் புரிந்து கொண்டுள்ளார். அவருக்கு இரண்டு அருமையான மகள்கள் உள்ளனர்.
கவுதம் கம்பீர், எளிமையானவர், நேர்மையானவர், மனதில் பட்டதை பேசக்கூடியவர். கடினமான நபர் அல்ல. தெளிவாகப் பேசுவார், தைரியமாக பேசுவார், பேசும் முன் இருமுறை யோசிப்பது என்ற தயக்கமெல்லாம் இல்லாதவர். இத்தகைய குணங்கள் இந்திய கிரிக்கெட் பண்பாட்டில் இல்லாதவை. எங்கள் கிரிக்கெட் பண்பாட்டில் நாங்கள் அடுத்தவரை புண்படுத்தாதவாறு கருத்துகளைச் சொல்வோம்.
ஆனால், கம்பீர் வித்தியாசமானவர். தனக்கு பிடிக்காத ஒரு விஷயத்தை முகத்துக்கு நேராகச் சொல்லி விமர்சிப்பவர். அதனால் அவரை அனைவருக்கும் பிடிக்கும். சில வேளைகளில் ஆக்ரோஷமாகிவிடுவார். இதே ஆக்ரோஷத்தை அணியினரிடத்திலும் கடத்தி வெற்றி உந்துதலை ஊட்டுவார். ஆனால் பயிற்சியாளர் பொறுப்பை அவர் இந்திய அணிக்காக ஏற்றுக் கொள்கிறாரா என்பதைப் பொறுத்தே அது தகையும்.
இன்னும் ஒரு சில பெயர்களும் இந்திய பயிற்சியாளர் பொறுப்புக்கு அடிபடுகிறது. ஆஷிஷ் நெஹ்ரா அனுபவமிக்கவர். அனைவருக்கும் இவரைப் பிடிக்கும். விவிஎஸ் லஷ்மண் இன்னொரு நபர். தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக உள்ளார். இவரும் நல்ல சாய்ஸ். ஆகவே உங்களிடமே நல்ல பயிற்சியாளர்கள் உள்ளனர். உங்கள் நாட்டைச் சேர்ந்தவர்களையே நியமியுங்கள்.
ஏனெனில், ராகுல் திராவிட் நன்றாகப் பணியாற்றுகிறார். ரவி சாஸ்திரி இவருக்கு முன்னால் பிரமாதமாகப் பணியாற்றினார். ஒரு முன்னுதாரணமாகத் திகழ்ந்தார்.” என்று அக்ரம் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT