Published : 23 May 2024 04:38 PM
Last Updated : 23 May 2024 04:38 PM
அகமதாபாத்: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் பிளே ஆஃப் சுற்றின் எலிமினேட்டர் ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் ஆர்சிபி அணி தொடரிலிருந்து வெளியேறியுள்ளது. இந்தப் போட்டியின் முடிவில் ஆர்சிபி வீரர் தினேஷ் கார்த்திக்கை வீரர்கள் அனைவரும் கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்தனர். ஐபிஎல்லில் இருந்து தினேஷ் கார்த்திக் இன்னும் ஓய்வை அறிவிக்காத நிலையில், வீரர்கள் அவரை வாழ்த்தியதை வைத்து இதுவே அவரின் கடைசி போட்டி என்று பேச்சுகள் எழுந்துள்ளன.
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இன்றைய எலிமினேட்டர் போட்டியில் ஆர்சிபி - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த ஆர்சிபி 172 ரன்கள் எடுத்தது. 173 ரன்களை விரட்டிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 19 ஓவர்களில் அந்த இலக்கை கடந்தது. இந்த வெற்றியின் மூலம் நாளை சென்னை - சேப்பாக்கத்தில் நடைபெறும் இராடவது குவாலிபையர் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது.
இந்தப் போட்டியின் முடிவில் ஆர்சிபி அணியின் பினிஷர் வீரர் தினேஷ் கார்த்திக்கை வீரர்கள் அனைவரும் கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்தனர். முதல் ஆளாக விராட் கோலி, தினேஷ் கார்த்திக்கை ஆரத்தழுவினார். தொடர்ந்து எதிரணிக்கு கைகொடுக்கும்போதும் வீரர்கள் அவரை வாழ்த்தினர். தினேஷ் கார்த்திக்கும் மைதானத்தில் இருந்து வெளியேறும்போது இரு கைகளையும் ரசிகர்களை நோக்கி உயர்த்தி காண்பித்தார்.
இதனை வைத்து தினேஷ் கார்த்திக் ஓய்வு பெறுவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. ஐபிஎல் ஒளிபரப்பு உரிமையை பெற்ற ஜியோ சினிமா தனது எக்ஸ் பக்கத்தில் தினேஷ் கார்த்திக் ஓய்வு பெறுகிறார் என்று தெரிவித்துள்ளது. ஆனால், தினேஷ் கார்த்திக் ஓய்வு குறித்து இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.
ஆர்சிபி அணியில் முக்கிய வீரராக கடந்த சில சீசன்களாக பங்காற்றிய தினேஷ் கார்த்திக் டெத் ஓவர்களில் சிறப்பான பங்களிப்பை அளித்தார். நடப்பு தொடரில் ஆர்சிபி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியதில் தினேஷ் கார்த்திக்கின் பங்கு முக்கியமானது. ஐபிஎல் தொடரில் மொத்தம் 17 சீசன்களில் 257 போட்டிகளில் விளையாடியுள்ள தினேஷ் கார்த்திக் 4,842 ரன்கள் எடுத்துள்ளார். இதுவரை மொத்தம் 6 அணிகளில் விளையாடியிருக்கிறார்.
2008ல் தொடக்க சீசனில் டெல்லி டேர்டெவில்ஸ் தற்போது டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக அறிமுகமான தினேஷ் கார்த்திக், 2011ல் பஞ்சாப் அணிக்கு மாறினார். அதன் பிறகு மும்பை இந்தியன்ஸ், குஜராத் லயன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு மாறினார். நடப்பு தொடரில் 15 போட்டிகளில் 36.22 சராசரி, 187.36 ஸ்ட்ரைக் ரேட் உடன் 326 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment