Published : 22 May 2024 01:23 PM
Last Updated : 22 May 2024 01:23 PM
அகமாதாபாத்: நடப்பு ஐபிஎல் சீசனின் எலிமினேட்டர் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடுகின்றன. இதில் ஆர்சிபி வெல்லும் என சுனில் கவாஸ்கர் கணித்துள்ளார். அதற்கான காரணங்களையும் அவர் விளக்கியுள்ளார்.
புள்ளிகள் பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ள ராஜஸ்தான் மற்றும் நான்காம் இடத்தில் உள்ள பெங்களூரு அணிகள் எலிமினேட்டர் போட்டியில் விளையாடுகின்றன. இந்தப் போட்டி இன்று அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் வெற்றி பெறுபவர்கள் வரும் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ள இரண்டாவது குவாலிபையர் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் விளையாடுவார்கள்.
இந்த சூழலில் இப்போட்டியில் வெல்லும் அணி எது என்பதை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கணித்துள்ளார். “கடந்த ஐந்து போட்டிகளில் நான்கில் தோல்வியை தழுவி உள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ். கடந்த போட்டியை அவர்கள் ஆடவில்லை. அவர்கள் மேட்ச் பிராக்டீஸில் இல்லை. அவர்கள் கொல்கத்தா அணியை போல ஏதேனும் ஸ்பெஷலாக செய்ய வேண்டும்.
அதே நேரத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியினர் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தி உள்ளார்கள். அபார எழுச்சி கண்டுள்ளார்கள். தங்கள் அணியினருக்கு உத்வேகம் தர கேப்டன் டூப்ளசி, கோலி மற்றும் சீனியர் வீரர்கள் உள்ளனர். அதுவே எதிரணியை எதிர்மறையாக நினைக்க வைக்கும் மனநிலைக்கு தள்ளும். ஆர்சிபி எளிதில் வெல்லும். அது நடக்கவில்லை என்றால் அது எனக்கு சர்ப்ரைஸாக அமையும்" என கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT